2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இறால்மடித் தொழிலுக்கு தற்காலிக அனுமதி

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 10 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


இழுவைத் தொழிலுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரையில் சிறுதொழிலை பாதிக்காத வகையிலும் வரையறைகளை மீறாத வகையிலும் இறால் மடியுடன் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற நாவாந்துறை, பாசையூர், குருநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆழ்கடல் மற்றும் சிறுகடல் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு உரையாற்றும் போது, 'ஏற்கனவே தடைசெய்யப்பட்ட தொழிலாக இழுவைத் தொழில் இருந்த போதிலும் மாற்றுத் தொழில் இல்லாத நிலையில் கடற்றொழிலாளர்கள் வாழ்வாதாரத்தில் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தான் சிறுதொழிலை பாதிக்காத வகையிலும் வரையறைகளை மீறாத வகையிலும் கற்கடதீவிற்கும் இரணைதீவு சோளகத்தாலும் இறால் மடியுடன் மட்டும் தொழில்துறை நடவடிக்கைகளில் பரீட்சார்த்தமாக ஈடுபடுமாறும்' அமைச்சர், கடற்றொழிலாளர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதனிடையே, மண்டைதீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் நேற்றைய தினமும் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் இவ்வாறு இந்திய மீனவர்களின் தொழில் நடவடிக்கையால் தமது தொழிலும் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் அவர்களிடம் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் தொலைபேசி வாயிலாக இந்திய தூதுவரிடம் தெரியப்படுத்திய அமைச்சர், குறித்த விடயம் தொடர்பாக இன்று காலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடனும் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன்போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், யாழ். மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன், ஈ.பி.டி.பியின் யாழ்.நகர இணைப்பாளர் றீகன், வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை ஆகியோர் உடனிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .