2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 12 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

வடமாகாண சபை ஆளுங்கட்சி (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு) உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 8 பேர், 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (11) பிற்பகல் வலி.தெற்கு பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலிலேயே 8 உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு 60 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமையடுத்தே இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

2014ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்திலும் வடமாகாண ஆளுநருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு ஒதுக்கப்படுவதில்லையெனவும், அரச உத்தியோகத்தரான ஆளுநருக்கு ஏன் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் எனவும் ஆளுங்கட்சி 8 உறுப்பினர்களும் கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆளுநருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பான ஆவணம் எதுவும் இதுவரையில் தனக்கு கிடைக்கவில்லையெனவும், ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படும் ஆவணம் கைகளில் கிடைத்த பின்னரே கருத்துக்கூறமுடியும் என தெரிவித்த வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், 2014ஆம் ஆண்டு ஆளுநருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர் அனுமதிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .