2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

எண்ணெய் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்கக்கோரி மகஜர் கையளிப்பு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா, நா.நவரத்தினராசா


சுன்னாகம் எண்ணெய்க் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி 6 கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள்; வலி. வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன், வலி.தெற்கு (உடுவில்) பிரதேச செயலாளர் எம்.நந்தகோபாலன் ஆகியோரிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையம்  திங்கட்கிழமை (15) கையளித்துள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான  சாந்தா அபிமன்னசிங்கம், பொருளாளரும் சட்டத்தரணியுமான ஜெ.ஜெயரூபன் ஆகியோர் இந்த மகஜர்களை கையளித்தனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான  சாந்தா அபிமன்னசிங்கம் தெரிவிக்கையில்,

'இன்றுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி சுன்னாகம்;, சூராவத்தை, கட்சனாவடலி, மயிலங்காடு, கல்லாக்கட்டுவன், ஏழாலை, மல்லாகம், காட்டுத்துறை, மல்லாகம் மேற்கு நீதிமன்ற பகுதி, கட்டுவன், தெல்லிப்பழை என பரந்;துபட்ட கிராமங்களில் 800 இற்கும் அதிகமான கிணறுகளில் 'கழிவு எண்ணெய்' கலந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களிடம் கடந்த இரண்டு நாட்களாக மகஜர்களில் கையெழுத்துக்கள் பெற்றிருந்தோம். கழிவு எண்ணெய் கிணற்று நீரில் கலந்துள்ள அனைத்துப் பகுதிகளும், அனர்த்த முகாமைத்துவ மையத்தாலும் பிரதேச செயலாளர்களாலும் அனர்த்த பகுதிகள் என்று உடனடியாக பிரகடனப்படுத்தப்பட்டு சகல நடவடிக்கைகளும் காலதாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.

கட்டடங்களை கட்டுவதற்கான அனுமதி, வியாபார உரிமம் என்பவற்றை பெறாது இயங்கிவரும் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களை, தொடர்ந்து இயங்கவிடாது சட்டத்தின் மூலம் தடுக்கும் நடவடிக்கையை வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச சபையும் வடமாகாண சபையும் மேற்கொள்ள வேண்டும். இதுவரை காலமும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாதமைக்கான பொறுப்புக்கூறலையும் செய்யவேண்டும்.

இலங்கை மின்சாரசபை வளாகத்தில் இயங்கிவந்த, இயங்கிவரும் அனல்மின் மின்பிறப்பாக்கிகள், ஏனையவைகளின் கழிவு எண்ணெய் நிலத்தில் இன்றுவரை விடப்பட்டு வருவதாக அறியப்படும் நிலையில், உரிய சுற்றுச்சூழல் நியமங்களுக்கமைவான பொறிமுறை தொகுதிகளை கொண்டிராத மின்பிறப்பாக்கிகள் அனைத்தும் இயக்கப்படாது உடனடியாக இடைநிறுத்தப்படவேண்டும்.

இது தொடர்பாக மின்னுற்பத்தியில் ஈடுபடும் தனியார் கம்பனிகளும் இலங்கை மின்சார சபையும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் உள்ளிட்டவை கலந்திருப்பது தொடர்பாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையால், இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டுவந்த கிணறுகளின் நீர் பரிசோதனை பெறுபேறுகளின் முழுவிபரங்களும் சம்பந்தப்பட்ட நிர்வாக மற்றும் அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் அனைத்து கிணறுகளின் நீரும் துரிதமாக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே கண்டறியப்பட்ட பாதிக்கப்பட்ட கிணறுகளின் நீர் மாதிரிகள் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

கழிவு எண்ணெய் உள்ளிட்டவை கிணற்று நீரில் கலந்திருப்பதனால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி மக்களுக்கு அறியக் கொடுத்து, பாதிக்கப்பட்ட கிணறுகளின் நீரை பயன்படுத்தாது தடுக்கும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை, சுற்றுச்சூழல்துறை, அனர்த்த நிர்வாக மையம், ஏனைய அமைப்புக்கள் காலதாமதமின்றி செய்ய வேண்டும்' எனக் கூறினார்.

சுன்னாகம் மின்சார மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவொயில், கிடங்கு வெட்டப்பட்டு நிலத்தில் ஊற்றப்பட்டமையால், அப்பகுதியை சூழவுள்ள கிணறுகளிலும் அயல் கிராமங்களான மல்லாகம், ஏழாலை, கட்டுவன், அளவெட்டி ஆகிய பகுதிகளிலுள்ள கிணறுகளிலும் எண்ணெய் கசிந்தது.

இந்த பிரச்சினை தொடர்பில் தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி உட்பட பாதிக்கப்பட்ட 11 பேரும் தனித்தனியான வழக்குகளை நொர்தேன் பவர் நிறுவனம், மற்றும் உத்துரு ஜனனி திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் பதிவு செய்து அது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகின்றன.

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களால், ஜனாதிபதியின் இந்து விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் ராமச்சந்திர குருக்கள் (பாபுசர்மா) ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மகஜர் ஒன்று கடந்த 10 ஆம் திகதி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .