2025 ஜூலை 07, திங்கட்கிழமை

புலிகளின் காலத்தில் பெண்களால் தனியாக நடமாட முடிந்தது: ஐங்கரநேசன்

Gavitha   / 2015 மே 16 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாட முடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும் வராதா என்று மக்கள் இப்போது ஏங்க ஆரம்பித்துள்ளனர் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

புங்குடுதீவில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (15) புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலி உரையாற்றியபோதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையை மிருகத்தனமானது என்று சிலர் குறிப்பிட்டார்கள். நான் அவ்வாறு சொல்லமாட்டேன். மிருகங்கள் கூடச் செய்யத்துணியாத கொடுஞ்செயல் இது. இந்த மாபாதகத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எந்தப் பிறவியிலும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.

போருக்குப் பிறகு இதுபோன்ற கொலைகளும் சமூகவிரோதச் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன. இவற்றின் பின்னணியில் போதைப்பழக்கம் ஒரு பிரதான காரணமாக இருக்கிறது. என்றும் இல்லாத வகையில் இளைய தலைமுறையிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. எமது இளைய தலைமுறையைத் தவறான பாதையில் வழிநடத்துவதன் மூலம் அவர்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கச் செய்யலாம் என்ற நோக்கத்துடனேயே இங்கு போதைப்பொருள் பாவனை திட்டமிட்டு ஊக்குவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் காவல்துறை குற்றங்களைக் கட்டுப்படுத்தியிருந்தது. இப்போது கடும் குற்றவாளிகள் கூட சுதந்திரமாக நடமாடக்கூடியதாக உள்ளது. எமது இளைய தலைமுறையின் பாதுகாப்புக் குறித்து பெற்றோர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எமது இளைய தலைமுறையின் பழக்கவழக்கங்கள் குறித்துப் நாம் விழிப்பாயிருக்க வேண்டும். வடக்கு மாகாண சபையும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய தீர்க்கமான வழிமுறைகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .