Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 மே 27 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீரை எடுத்துவரும் திட்டம் கைவிடப்பட்டு, யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த் தேவையின் ஒரு பகுதியைக் கடல்நீரை நன்னீராக்கிப் பெறுவது என்ற திட்டம் எம்மால் முன்மொழியப்பட்டு உரிய தரப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். குடாநாட்டில் முன்னெடுக்கப்படவிருக்கும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடமாகாண சபையின் ஏற்பாட்டில் புதன்கிழமை (27) யாழ் பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ். குடாநாட்டுக்குத் தண்ணீரை விநியோகிப்பதில் எழக்கூடிய பல்வேறு பிரச்சினைகளை கருத்திற் கொண்டு, வடமாகாணசபை குடாநாட்டுக்கான குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்கான மாற்று யோசனையாகக் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை முன்வைத்திருந்தது.
இத்திட்டத்தை ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கை தேசிய நீர் வழங்கல் வடிகால் சபையும் ஏற்றுக் கொண்டு, கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலையை அமைப்பதற்கான இடமாக மருதங்கேணி தேர்வு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், மருதங்கேணிக் கடற்பரப்பில் இருந்து கடல் நீரைப் பெற்று குடிநீராக்கும் திட்டத்தால் மீன்பிடித் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று சிலரால் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்தே இது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்ட நிபுணர் நிக்கோலாய் கலந்து கொண்டு திட்டம் தொடர்பாக விளக்கம் அளித்ததோடு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
இவ்விசேட கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், 'இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீரை எடுத்துவரும் பழைய திட்டத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று கருதுகின்ற சிலர் இன்னமும் உள்ளனர்.
அவர்களின் பின்னணியில்தான் மருதங்கேணியில் அமைய இருக்கும் கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலையால் மீன்பிடித் தொழிலுக்குப் பாதிப்பு என்ற கருத்து திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகிறது.
கலந்துரையாடலில் பங்கேற்ற நிபுணர் நிக்கோலாய் மீன்பிடித் தொழிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் மாறாக, இப்பகுதியில் புதிய மீன் இனங்கள் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற கலந்துரையாடல் மருதங்கேணியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களின் மத்தியிலும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், மாகாணசபை அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், பா.சத்தியலிங்கம், த.குருகுலராஜா, மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் அதிகாரிகள், தேசிய நீர் வழங்கல் வடிகால் சபையினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago