Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 01 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வித்தியாவின் கொலையை வைத்து அரசியல் செய்வது மிகக் கேவலமான செயலாகும். அவ்வாறு செய்வதை நிறுத்தவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆனந்தசங்கரியால் திங்கட்கிழமை (01) அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வித்தியாவின் படுகொலை மனித இனமே வெட்கி தலைகுனிய வேண்டிய சம்பவம். இதில் மற்றவர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு, எங்களுக்கு சம்மந்தம் இல்லை என்று சொல்லிவிட்டு நாம் தப்பிக்கமுடியாது. இந்த ஈனச் செயலை செய்தது எம்மினத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை வெட்கத்துடன் ஒத்துக்கொள்ள வேண்டும்.
இதேபோன்று முன்பு இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் படுகொலைகளில்; ஈடுபட்டவர்களுக்கு முறையான தண்டனை கிடைக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் முக்கிய பிரமுகர்கள் துணையுடன் கொழும்புக்கு தப்பி ஓடியநிலையில் பொலிஸார் அவரை கைது செய்துவிட்டார்கள். இவ்வாறான சம்பவங்களினால் ஆத்திரம் அடைந்த மக்கள், நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற எல்லை மீறிய ஆதங்கத்தின் வெளிப்பாடே நீதிமன்றத்தின் மீது நடந்த விரும்பத்தகாத சம்பவம். அதற்கு அரசியல் சாயம் பூசுவதோ, புலிச்சாயம் பூசுவதோ வெட்கக் கேடான விடயம்,
நம்மவர்கள் செய்த படியால், எமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை, எமது கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை, வேறு குழுவினர்களினால் திட்டமிட்டு செய்த செயல் என்று, யார் யார் மீதோ பழியைப் போட்டுவிட்டு, நாடாளுமன்றத்திலும் வெளியிலும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பேசும் அளவுக்கு இது அரசியலாக்கப்பட்டுள்ளது. வெட்கி தலைகுனிய வேண்டிய கீழ்த்தரமான விடயத்தைக் கூட அரசியலாக்க பார்க்கின்றோம்.
வித்தியாவின் கொலை போன்று ஒரு கொடூர சம்பவம் நடக்காமல் இருக்க ஒரு முன்மாதிரியான தண்டனை வழங்கவேண்டும். சட்டத்தில் இடம் இல்லாவிட்டாலும் புதிதாக சட்டத்திருத்தத்தை உருவாக்கி, குற்றவாளிகள் இவ்வாறான ஈனச்செயலை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகக்கடுமையான தண்டணையை வழங்க வேண்டும்.
இனி எவரும் இவ்வாறான ஒரு இழிச்செயலை செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தங்களின் கொடூர செயலால் குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதை குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உணர்த்த வேண்டும். வடமாகாணம் முழுவதுமாக செயலமர்வுகளை ஏற்பாடு செய்து அதன்மூலம் எம் சமூகத்துக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்படவேண்டும்.
வித்தியாவின் சம்பவத்தின் பின்பும் இவ்வளவு ஆர்ப்பாட்டங்களைப் பார்த்த பின்னரும் பரந்தனிலும், நெடுந்தீவிலும் இவ்வாறான துஷ்பிரயோக சம்பவங்கள் நடந்துள்ளன.
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான, மனித சமூகத்துக்கு ஒவ்வாத, இழி செயல்கள் குறிப்பாக வடமாகாணத்தில் அதிகரித்துள்ளன என்பதை அனைவரும் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, அத்தனை குற்றவாளிகளுக்கும் விரைவாக கடுமையான தண்டணை பெற்றுக் கொடுக்கவேண்டும்.
எனவே, இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டுமே தவிர அடுத்தவர் மேல் பழிபோடுவதை தவிர்த்து இந்த சமூக சீர்கேட்டை தடுத்து நிறுத்த வேண்டும். அதைவிடுத்து ஈனச்செயல் செய்பவன் எந்த அமைப்பைச் சேர்ந்தவன், எந்த சமூகத்தைச் சேர்ந்தவன், எந்த கட்சியைச் சேர்ந்தவன் என்று தேடிக்கண்டுபிடித்து, முடிந்தால் எமக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களுடன், குற்றவாளியோ, அல்லது குற்றவாளியின் சாயலை ஒத்த வேறு ஒரு நபருடனோ, எப்போதோ எடுத்த புகைப்படத்தையும் இணையதளங்களில் போட்டுக்காட்டி, அவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில்தான் தொடர்பு என்று, குற்றவாளிகளை அந்தக்; கட்சிகளுடன் தொடர்புபடுத்திவிட்டு, அப்பாடா குற்றவாளி எங்கள் கட்சியையோ, அமைப்பையோ, சமூகத்தையோ சேர்ந்தவன் அல்ல. நாங்கள் தப்பிவிட்டோம் என்று, தேர்தலில் தங்கள் கட்சிக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகவே மற்றவர்களை குற்றஞ்சாட்டி, தம்மை புனிதர்களாகி இந்த வேதனை மிகுந்த சம்பவத்தை வைத்தும் அரசியல் செய்வது என்பது மிகக்கேவலமானதாகும்.
தருமத்தின் தலைமகன் என்று நம்மால் புராண இதிகாசங்களில் பேசப்படும் பஞ்சபாண்டவர்களில் ஒருவனான தருமன்தான், தன் மனைவி திரௌபதையை வைத்து சூதாடினான். கெட்டவர்களான கௌரவர்கள் பக்கம் தான் கொடைவள்ளல் கர்ணனும் நீதி நெறிமுறை தவறாத வீஷ்மர், விதுரர், துரோணாச்சாரியார் போன்றவர்கள் இருந்துள்ளார்கள்.
அது மட்டுமல்ல இராமாயணத்தில் இராவணன், சீதையை பாதுகாப்பாகவே வைத்திருந்தான். ஆனால், இலட்சுமணன் சூர்ப்பநகையை பெண் என்றும் பாராமல் அவள் மூக்கை அறுத்து அவமானப்படுத்தி அனுப்பினான். ஆனால், பெண்ணின் மூக்கை அறுத்தவர்களும் பெண்ணை வைத்து சூதாடியவர்களும் நம்மால் நல்லவர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் என்பதால், அவர்கள் எந்த செயல் செய்தாலும் அது நல்லதாகவே இருக்கும் என்று ஏற்றுக்கொள்கின்றோம். ஏன் இராமாயணத்தை முதலில் எழுதிய வான்மீகி முனிவர்கூட ஒரு காலத்தில் வழிப்பறி கொள்ளைக்காரனாக இருந்தவர்தானே.
எனவே, இருக்கும் இடம் முக்கியமில்லை. இருப்பவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதுதான் முக்கியம்.
இவ்வாறான இழி செயல்கள் நடக்காமல், தடுத்து நிறுத்த வேண்டியது அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும். பொறுப்பைத் தட்டிக்கழிக்காது, ஒற்றுமையுடன் செயற்பட்டு, இனிமேலாவது இவ்வாறான அசிங்கங்கள் நம் சமூகத்தில் நடக்க விடாது பாதுகாக்க வேண்டும் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago