2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வலி.வடக்கு காணிகளை விடுவிக்குமாறு நாளை ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2017 பெப்ரவரி 27 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள மக்களுடைய காணிகளை விடுவிக்குமாறு கோரி, நாளைய தினம், வயாவிளான் ட்ரெய்லர் கடைச் சந்தியில், கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான அழைப்பினை, வயாவிளான் மக்கள் அமைப்பு விடுத்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 26 வருடங்களாக, இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுடைய காணிகளை, அரசாங்கம் விடுவிக்காமல், இராணுவத்தின் நலன்களுக்காகவும் அரசாங்கத்தின் நலன்களுக்காகவும் கையகப்படுத்தி வைத்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று 2 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பலாலி மற்றும் வயாவிளான் மயிலிட்டி பகுதி மக்களின் சொந்த நிலங்கள், இதுவரை விடுவிக்கப்படவில்லை. கட்டம் கட்டமாக காணிகள் மக்களிடம் வழங்கப்படும் என, ஜனாதிபதி சொன்ன வாக்குறுதி, இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர, வேறு வழி இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள், தமது காணிகளை இழந்து அகதி வாழ்க்கை வாழ்ந்துகொண்டு வருகின்றனர். வாடகை வீடுகளிலும் தனியார் காணிகளிலும், கடந்த 26 வருடங்களாக வாழ்ந்துவரும் வலி.வடக்கு மக்கள், பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். யுத்தம் முடிவடைந்து ஏழரை ஆண்டுகள் கடந்தும், வலி.வடக்கின் காணிகளை, இராணுவம் தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்துள்ளது.

எனவே, மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்கும் வரை, பல்வேறு ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கோப்பாபுலவினைத் தொடர்ந்தும் வலி.வடக்கு காணிகளை விடுவிக்கும் வரையாக தொடர் போராட்டத்துக்கு, மக்கள் தயாராக வேண்டிய நிலைக்கு இவ்வரசாங்கம் மக்கள் நிர்ப்பந்தித்துள்ளது’ என, அவ்வழைப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X