2025 ஜூலை 09, புதன்கிழமை

சிறுவனைக் கடத்திச் சென்றவர்கள் விளக்கமறியலில்

Niroshini   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நான்கு வயது சிறுவனைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இரு பெண்கள் உட்பட மூவரையும் நாளை மறுதினம் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம்.எம்.இக்பால் சனிக்கிழமை(10) உத்தரவிட்டார்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேக நபரை, நீதவான்  பிணையில் விடுதலை செய்தார்.

புத்தளம் வான் வீதியிலுள்ள முஹம்மது ஹூஸைன் முஹம்மது ஹாதிம் (வயது 4) எனும் சிறுவன், வெள்ளிக்கிழமை(09) வீட்டுக்கு அருகிலுள்ள சில்லறைக் கடைக்கு மிளகு வாங்கி வரச் சென்றபோது, அதே தெருவில் வாடகைக்கு தங்கியிருக்கும் பெண்ணொருவரால், அழைத்து செல்லப்பட்டுள்ளான்.

இது தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குறித்த சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்ட பொலிஸார், சிறுவனை அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணை புத்தளம் நகரில் வைத்து கைது செய்ததுடன், அந்தப் பெண்ணின் சகோதரியையும் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்துக்கமைய, சனிக்கிழமை(10) புத்தளம் நகரில் வைத்து, முச்சக்கரவண்டியொன்றிலிருந்து பொலிஸார், சிறுவனை மீட்டுள்ளனர்.

இதையடுத்து, முச்சக்கரவண்டி சாரதியையும் இந்தியபிரஜை ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து டிஜிட்டல் கெமரா, தொலைபேசி , டொபி, சொக்லேட் மற்றும் மாதுளம்பழம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி புத்தளம் - வன்னாத்தவில்லு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இந்தியப்பிரஜை, சிறுவனைக் கடத்திச்சென்ற பெண்ணின் கணவன் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நால்வரையும் புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம்.எம்.இக்பால் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது முச்சக்கர வண்டியின் சாரதியை  பிணையில் விடுதலை செய்த நீதவான், ஏனைய மூவரையும் புதன்கிழமை (14) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .