2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

'சுகாதாரத்துறையை மேம்படுத்த நடவடிக்கை'

Niroshini   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மாவட்டத்தில் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கு மத்திய சுகாதார அமைச்சின் உதவியுடன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

புத்தளம் தள வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக் கூடம், மகப்பேற்று வார்ட் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கிய நான்கு மாடிக் கட்டடம் ஒன்று நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

புத்தளம் தள வைத்தியசாலையில் நாளொன்றுக்கு சீசர் மற்றும் சாதாரணமான 30 இற்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கின்றன. இந்த மகப்பேற்று வார்ட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் தாய்மார்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அத்துடன், புத்தளம் தள வைத்தியசாலையில் தற்போது காணப்படுகின்ற மகப்பேற்றுக் கட்டடமானது மிகவும் பழமை வாய்ந்ததொன்றாகும். எனவே, குறித்த கட்டடத்தை திருத்தி பயன்படுத்துவதில் பிரச்சினை உள்ளது. அதனால்தான் நான்கு மாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்களும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியை மத்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்யவுள்ளது.

இதேவேளை, கற்பிட்டி வைத்தியசாலைக்கும் மூன்று மாடிக் கட்டடமொன்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையில் ஒரே கட்டடத்தில் ஆண் மற்றும் பெண் வார்ட் காணப்படுகிறது. 1942ஆம் ஆண்டு காலப்பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த குறித்த கட்டடத்தில் இவ்வாறு ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொள்வதிலும் பாரிய பிரச்சினை காணப்படுவதால் அங்கும் மூன்று மாடிக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

ஏற்கெனவே, மத்திய மருந்தகங்களாக காணப்படுகின்ற கரைத்தீவு, கொத்தான்தீவு, புழுதிவயல் ஆகிய மத்திய மருந்தகங்களும் நோயளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விருதோடை மற்றும் சமீரகம ஆகிய பிரதேசத்தில் காணப்படும் கிளினிக் நிலையம் இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல குறைபாடுகள் காணப்படுவதாக பிரதேச மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

எனவே, விருதோடை மற்றும் சமீரகம ஆகிய கிராமங்களில் புதிய கிளினிக் நிலையத்திற்கா கட்டடம் அமைத்துக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X