2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பசும்பால் உபயோகத்தை ஊக்கப்படுத்த வேண்டும் - பிரதி சபாநாயகர் பிரியங்கர

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 15 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா )

பால் மா வகைகளை பாவிப்பதை விடுத்து பசும்பால் பாவிப்பதை நாம் ஊக்கப்படுத்த வேண்டும் என பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரத்ன இன்று புத்தளம் வண்ணாத்தவில்லு பகுதியில் தெரிவித்தார்.

வடமேல் மாகாண கால்நடை வள அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள மிருக வைத்திய  அதிகாரி அலுவலகத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த அலுவலகத்துக்கான மதிப்பீட்டு தொகை 70 இலட்சம் ரூபாவாகும். இதன் நிர்மாணப்பணிகளுக்கு 40 இலட்சம் ரூபாவை வடமேல் மாகாண அமைச்சும், மிகுதி 30 இலட்சம் ரூபாவை வேல்ட் விஷன் நிறுவனமும் வழங்கவுள்ளது.

இக்கட்டிடப்பணிகள் இரண்டு கட்டங்களாக இடம் பெறும்.வண்ணாத்தவில்லு பிரதேச சபை தலைவர் அசனா மரைக்கார், சபை உறுப்பினர்களான சுல்தான் மரைக்கார் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதி சபாநாயகர், "எமது அயல் நாடான இந்தியாவிற்கு நான்  விஜயம் செய்து பார்த்த போது அங்கு பசும்பாலை மிகவும் முக்கியமானதொன்றாக பயன்படுத்துகின்றனர்.

பசும்பால் பெறப்பட்டதும் முதலில் வீட்டிலுள்ளவர்கள் பருகுவார்கள்.அதன் பின்னர் தான் அருகிலுள்ள கடைகளுக்கு கொடுப்பார்கள்.ஆனால் எமது நாட்டில் அதற்கு நர்மாறாகவுள்ளது.

இந்தநிலை மாற்றப்படல் வேண்டும்.அதற்காக வேண்டியெடுக்கப்படுகின்ற எல்லா நடவடிக்கைகளுக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். புத்தளம் கொட்டுக்கச்சி பண்ணை 1500 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது.

அதனை அரசாங்கம் நன்றாக பயன்படுத்த வேண்டும். இல்லாத போது தனியாருக்கு கொடுத்தாவது பால் உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும்" என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .