2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் - லொறி மோதியதில் தாயும் மகனும் பலி

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டம் ஒன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தாயும் மகனும் எதிரே வந்த லொறி ஒன்றுடன் மோதி ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று நேற்று மாலை கல்கமுவ வீதியில் இடம்பெற்றுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் மீன் ஏற்றிக் கொண்டு வந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் 38 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான நவகத்தேகம முல்லேகமயைச் சேர்ந்த தயாரத்ன மற்றும் அவரது தாயாரான 61 வயது ரன்மெனிக்கே என்பவருமே உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் சிக்கிய லொறி அருகிலிருந்த வேம்பு மரம் ஒன்றுடன் மோதியதில் லொறி சாரதி படுகாயமடைந்துள்ளார். சாரதி, ஆனமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆனமடுவவிலிருந்து கல்கமுவ வீதியில் சென்றுகொண்டிருந்த வேளை கல்கமுவவிலிருந்து ஆனமடு நோக்கி வந்து கொண்டிருந்த மீன் லொறியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதனையடுத்து லொறி அதன் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வேம்பு மரம் ஒன்றுடன் மோதியுள்ளது. இறந்த தயாரத்னவின் நான்கு பிள்ளைகளுள் கடைசிப் பிள்ளை மூன்று மாதக் கைப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆனமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .