2025 மே 10, சனிக்கிழமை

நாங்கள் பட்ட துன்பத்தை வாழ்நாளில் மறக்க முடியாது: நீர்கொழும்பு கப்பல் பணியாளர்

Kanagaraj   / 2014 ஜூன் 15 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


நான் பட்ட துன்பத்தை வாழ்நாளில் மறக்க முடியாது. உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் சோர்வடைந்துள்ளேன். ஒரு நாளைக்கு இரண்டு வேளையே உணவு தரப்பட்டது. காலை ஒன்பது பத்து மணியளவில் ரொட்டியும் சீனியும், மாலை ஆறு மணியளவில்  வெறும் சோறும் சீனியும் வழங்குவார்கள். இரண்டு வேளை வெறும் தேனீர் வழங்குவார்கள். குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் கிடையாது. நாங்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டோம் என்று சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்து உயிர் தப்பி வந்த இலங்கையர்கள் ஒருவரான நீர்கொழும்பு முன்னக்கரை பிரதேசத்தைச் சேர்ந்த அன்டனி நிரோஷன் பெரேரா  நேற்று (14) தெரிவித்தார்.

மலேசிய கம்பனி ஒன்றுக்கு சொந்தமான எம்.வி.அல்பேடோ  என்ற கப்பலும்  அதில் பயணித்த 23 பணியாளர்களும்; 26-11-2010 அன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டனர்.

அந்தக் கப்பலில்  இலங்கையைச் சேர்ந்த அறுவரும், இந்தியாவைச் சேர்ந்த இருவரும், ஈரானைச் சேர்ந்த ஒருவரும், பங்களாதேஷைச் சேர்ந்த எழுவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த எழுவருமாக 23 கப்பற் பணியாளர்கள் இருந்தனர்.

அந்த கப்பலில் பணியாற்றிய 23 பேரில் நால்வர்  கடலில் மூழ்கி மரணிக்க,  பாகிஸ்தானைச் சேர்ந்த ஏழு பேர் 2013 ஆம் ஆண்டு கப்பம்  வழங்கி விடுவிக்கப்பட்ட நிலையில் ஏனையோர் கடற் கொள்ளையர்களின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர்

இவ்வாறு தப்பிய, கப்பலின் இயந்திரப் பிரிவில் பணியாற்றிய  நீர்கொழும்பு முன்னக்கரையைச் சேர்ந்த  அன்டனி நிரோஷன் பெரேரா,  இரண்டாம் நிலை கப்பற் பொறியியலாளரான முகம்மட் பிஸ்தாமி ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையை வந்தடைந்தனர்.

இக் கடத்தல் தொடர்பாக அன்டனி நிரோஷன் பெரேரா கூறுகையில்,
சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடும் சித்திர வதைக்கு உள்ளாக்கப்பட்டோம். கடற்கொள்ளையர்கள் எங்களிடம் பல மில்லியன் டொலர் கப்பப்;  பணம் கேட்டு எம்மைத் தாக்குவார்கள். எங்களது கண்களையும் கைகளையும் கட்டி துப்பாக்கியால் எம்மைத் தாக்குவார்கள். நாங்கள் பல்வேறு வகைகளிலும் துன்புறுத்தப்பட்டோம். உயிர் தப்புவோம் என்று ஒரு போதும் நம்பவில்லை. 

இந்நிலையில் 6-7-2013 அன்று இரவு வேளை எமது கப்பல் கடலில் மூழ்கியது. அதற்கு முன்னதாக கப்பலின் அடிப்பகுதியில்  சிறிய ஓட்டை ஏற்பட்டிருந்தது. மூன்று மாதக் காலப்பகுதியிலேயே அது மூழ்கியது.

எமது கப்பலுக்கு சற்று தூரத்தில் கொள்ளையர்களினால் கைப்பற்றப்பட்ட இன்னொரு கப்பல் எரிபொருள் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
எமது கப்பல் மூழ்குவதற்கு முன்னதாக அந்தக் கப்பலில் இருந்த கொள்ளையர்கள் எமது கப்பலுக்கு பெரிய கயிறு ஒன்றினால் இணைப்பை ஏற்படுத்தியிருந்தனர். அத்துடன் கடலுக்குள் பெரிய ரெஜிபோம்களை படகு போல் செய்து  போட்டு அதில்  ஏறித் தப்பிக்குமாறு எம்மிடம் கூறினர்;.

எமது கப்பல் நின்றிருந்த  கடல் பகுதி சுமார் 30 மீற்றர் ஆழமானதாகும், இதனை நான் மீன் பிடிக்கும் போது, வலைகள் மற்றும் தூண்டில் கொண்டு; போது அறிந்து வைத்திருந்தேன்.

எமது கப்பலின் உயரம் 40 மீற்றராகும். இந்நிலையில் எமது கப்பலில் இருந்த  பதினைந்து பேரில் பத்து பேர் ஒருவாறு அடுத்த கப்பலுக்குள் ஏறிவிட்டனர். எம்முடன் இருந்த பிரதான பொறியியலாளரன எமது நாட்டைச் சேர்ந்த நலீன் வக்வெல்ல இரு கப்பலுக்கும் இடையில் இணைக்கப்பட்டிருந்த கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டு அதனூடாகச் சென்று  அடுத்த கப்பலில் ஏற முயன்ற போதும் அது அவரால் முடியவில்லை.

அவர் கடலில் மூழ்கி காணாமல் போனார். இதன்போது எமது நாட்டைச் சேர்ந்த மூன்றாம் நிலை பொறியியலாளர் சந்ரசிறி பெரேரா, இரண்டாம் நிலை அதிகாரி ராஜா சில்வா, மற்றொரு அதிகாரியான என்டனி பொனி பொஸ் பெரேரா ஆகியோர் கடலில் மூழ்கி காணமல் போனார்கள்.

அதற்கு முன்னதாக எமது கப்பலுடன் இணைக்கப்டடிருந்த கயிறும்  கொள்ளளையர்களினால்  வெட்டி அறுக்கப்பட்டது. எமது கப்பல் மூழ்கும் போது அந்த கப்பலும் மூழ்கும் என்ற காரணத்தினால்  கொள்ளையர்கள் கயிறை அறுத்தனர்

நான் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்று அங்கிருந்த கயிறொன்றை பற்றிப்பிடித்தபடி உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன்.
காரணம் 40 மீற்றர் உயரமான கப்பல் 30 மீற்றர் ஆளமான கடலில் முழுமையாக மூழ்காது என்று நான் எடுத்த உறுதியான தீர்மானமாகும். ஆயினும் மற்றையவர்கள் பயத்தின் காரணமாக அடுத்த கப்பலுக்கு செல்ல முயன்று   அதில் நால்வர் மரணமானார்கள்.

இந்நிலையில்,  நாங்கள் தப்பிப்பதற்கு திட்டம் தீட்டினோம் காரணம் புதிய குழு ஒன்றுக்கு நாங்கள் ஒப்படைக்கப்பட இருந்தோம். அந்த குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டால் நிச்சயம் நாங்கள் அனைவரும் கொலை செய்யப்படுவோம் என்பதை அறிந்திருந்தோம்.

அதற்கு கொள்ளையர்களில் மூவருடன் நாங்கள் இரகசியமாக கலந்துரையாடினோம். மொழி பெயர்ப்பாளர், காவல் பணியில் ஈடுபட்ட இருவர் அடங்கலாக மூவர் அதற்கு உடன்பட்டனர்.

இரண்டு இலட்சம் டொலர் அதற்காக வழங்குவதற்கு உடன்பாடு காணப்பட்டது. எமது உறவினர்கள் சேகரித்த சிறிய தொகை பணத்துடன் பெயர் குறிப்பிட விரும்பாத தன்னார்வ  அமைப்பொன்று வழங்கிய பணம் ஆகியவற்றைச் சேர்த்து  ஐக்கிய நாடுகள்   அலுவலகம்  ஊடாக இரண்டு இலட்சம் டொலர் பணம் வழங்கப்பட்டது.

இதன் காரணமாக எமக்கு  செல்லிடத் தொலைபேசி  ஒன்று வழங்;கப்பட்டது. அங்கிருந்து  தப்பிப்பதற்கு போட்ட திட்டத்தின அடிப்படையில் தூக்க மாத்திரைகளை கொள்ளையர்கள் அருந்தும் தேனீரில் கலந்து கொடுத்தோம்.

ஆனால், அவர்;களுக்கு அது  பலிக்கவில்லை.  கொள்ளையர்கள் இரவு வேளையில் விழித்திருப்பதற்காக ஒரு வகை இலைகளை மென்று உண்பார்கள், சீனி கலந்த சுடு தண்ணீரை  தயாராக வைத்திருந்து அதில் அந்த இலையை போட்டு அருந்துவார்கள். நாங்கள் அவர்கள் அருந்தும் தேனீரில் தூக்க மாத்திரைகளை கலந்த போதும் அதனால் பலன் கிடக்கவில்லை.

6-6-2014 அன்று   நள்ளிரவு 2.30 மணியளவில் யாரும் அறியாத வகையில் யன்னல் கதவுகளை உடைத்துக் கொண்டு  அந்த அறையை விட்டு வெளியே வந்தோம்.

400 மீற்றர் துரத்தில் வாகனம் ஒன்று எமக்காக தயாராக நின்றது. அந்த வாகனத்தில் இருந்தோர் எம்மை 8 கிலோமீற்றர்; தூரத்திற்கு அப்பால் கொண்டு சென்று காட்டில் விட்டனர்.  

அதன்போது அவர்கள் ஒருவருடைய தொலைபேசி இலக்கமொன்றை தந்தனர். காட்டில் பத்து கிலோமீற்றர் வரை நடந்தும் ஓடியும் சென்றோம்.
அங்கிருந்து   அந்த தொலைNசி மூலம் தொடர்பு கொண்ட போது இரண்டு வாகனங்கள் எம்மை அரை மணித்தியால துரம் வரை அழைத்துச் சென்று கல்காயே என்ற பகுதியை அடைந்தன. விடியற்காலை  அங்கு வைத்து  சோமாலிய அரச அதிகாரிகள் எம்மை பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைத்தனர் என்று அவர் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X