2021 மே 08, சனிக்கிழமை

483ஆவது பொலிஸ் நிலையம் திறப்பு

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஜூலை 17 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 483ஆவது பொலிஸ் நிலையம், உடப்பு பிரதேசத்தில் வைபவ ரீதியாக நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க ஸ்ரீவர்தனவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம்.நவவி, வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெஹத் அபேசிங்க குணவர்தன, குருநாகல் மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.குரே, புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன உள்ளிட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, பொலிஸாரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மொலிஸ் மா அதிபர், மும்மத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன், குறித்த பொலிஸ் நிலையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார்.

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் உடப்புப் பகுதியில் புதிதாக திறந்துவைக்கப்பட்ட 11ஆவது பொலிஸ் நிலையம் இதுவாகும்.

குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பீ.ஜி.சி.ஆர்.குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதுடன், 25 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், முந்தல் பொலிஸ் நிலையத்தின் கீழ் இதுவரை காலமும்

இருந்த 41 கிராம சேவகர் பிரிவுகளில் 11 கிராம சேவகர் பிரிவுகள், உடப்பு பிரதேசத்தில் திறந்துவைக்கப்படவுள்ள புதிய பொலிஸ் நிலையத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதுளுஓயா, புளிச்சாங்குளம், ஆண்டிமுனை, உடப்பு 594, உடப்பு 594 பி, சின்னப்பாடு, பள்ளிவாசல்பாடு, பூனைப்பிட்டி, கட்டைக்காடு, கொத்தாந்தீவு, பெருக்குவற்றான் ஆகிய 11 கிராம சேவகர் பிரிவுகளே புதிய பொலிஸ் நிலையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக திறந்துவைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தில் ஞாபகார்த்தமாக தென்னம் பிள்ளை ஒன்றையும் பொலிஸ் மா அதிபர் நாட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X