2021 ஜூலை 31, சனிக்கிழமை

உங்களுடைய இறுதி மாதச் சம்பளம் என்னவானது?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 ஜனவரி 07 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டு எனும் புதியவோர் ஆண்டு ஆரம்பித்திருக்கிறது. புதியவோர் ஆண்டில், அனைத்தையும் புதிதாகத் தொடங்கவும் செயற்படுத்தவும் அனைவருமே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில், மாதாந்தம் உங்களுடைய செயற்பாடுகளைக் கொண்டு நடத்த மூலாதாரமாக இருக்கக்கூடிய உங்களுடைய வருமானத்துக்கு/ மாதச் சம்பளத்துக்கு என்ன ஆகிறது என்பதையும் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. காரணம் எல்லாவற்றையும் நீங்கள் திட்டமிடுவதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்திடுவதற்கும் இந்த மாதாந்த வருமானம் அவசியமானது.   

எங்களில் பெரும்பாலானோர் எப்போதுமே மாதாந்த வருமானம் போதவில்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். எப்போதுமே, அடுத்த மாதச் சம்பளத்துக்கு முதலே கையிலிருக்கும் பண இருப்பு முடிவடைந்து விட்டதெனும் அடிப்படையில், என்ன செய்வதெனத் தெரியாது நிற்கின்ற நிலையை நம் அருகிலிருக்கும் பலரிடமும் சில சமயங்களில் நாமும் அனுபவ ரீதியாகவும் உணர்ந்திருப்போம்.

அப்படியாயின், இப்படியானச் சூழ்நிலைகளிலிருந்து வெளியேறத் துடித்துக் கொண்டிருந்தாலும், அதிலிருந்து மீள முடியாதவர்களாகவே இருக்கின்றோம். இதற்கானக் காரணம் என்ன; இந்த நிலையை மாற்ற, நாம் என்ன செய்யலாம்?   

ஏன் போதவில்லை?

எங்கள் செலவுப் பழக்கத்தில், எங்களைவிட சிறந்தவர்கள் இல்லை எனும் எண்ணத்துடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நம்மில் பெரும்பாலோனோருக்கு அந்தச் செலவுகளை முறையாக நெறிப்படுத்தத் தெரிந்திருக்கவில்லை.

குறிப்பாக, அண்மையக் காலத்தில் நீங்கள் மேற்கொண்ட செலவுகளை நினைத்து பாருங்கள். இறுதியாக நீங்கள் செய்த ஐந்து செலவுகளில் எத்தனை அவசியமானது, எத்தனை ஆடம்பரமானச் செலவுகள்?

இந்தச் செலவுகளை கட்டுபடுத்துவதன் மூலம் நீங்கள் எவ்வளவு சேமித்திருக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இதன் மூலமாக, உங்களுடைய மாத வருமானம் ஏன் போதவில்லை எனும் எண்ணத்துக்காக, உண்மையான காரணத்தை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். 

என்ன செய்ய வேண்டும்?

காரணத்தை அறிவதைவிட, அறிந்த பின்னதாக நீங்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்தான் மிக முக்கியமானவை. இது, கிட்டத்தட்ட புதுவருடத்தினம் முதல் ஜிம்முக்கு போய் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வேன் என மனதுக்குள் உறுதியெடுத்துக் கொள்ளுவதற்கு ஒப்பானது.

காரணம், ஒரு வாரத்துக்கு பின்பு, ஜிம் என்ன ஆனது என்பதும் நமக்குத் தெரிவதில்லை. அதற்கான பணம் என்ன ஆனது என்பது தொடர்பிலும் நாம் அக்கறைக் கொள்வதில்லை. அதுபோலத்தான் இங்கும், காரணத்தைக் கண்டறிந்த பின்பு, உங்களது அடுத்தக் கட்டச் செயற்பாடாக உங்களுடைய செலவீனங்களை முறையாக குறித்துக்கொள்ளவோ அல்லது கண்காணிக்கவோ பழகுங்கள். இந்தப் பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.

எல்லோருக்கும் இதைச் செய்ய விருப்பமிருக்கின்றபோதிலும், அதிக குழப்பமில்லாமல், இதை எவ்வாறு எளிமையாகச் செய்வதெனும் குழப்பமானது நீடிக்கிறது. இதன் காரணமாக, பலரும் ஆரம்பித்த சில நாள்களிலேயே வெறுப்படைந்து, இதைக் கைவிட்டு விடுகின்றனர்.  

உண்மையில், உங்கள் செலவுகளைப் பதிவு செய்கின்றபோது, அதற்கு சில வகைகளை (category) உருவாக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலமாக, உங்கள் நாளாந்தச் செலவுகளை சிறு குறிப்புடன் குறித்த categoryகளுக்குள் உள்ளடக்கி வாருங்கள்.

உதாரணத்துக்கு, உணவு, எரிபொருள், போக்குவரத்து, பொழுதுபோக்கு, ஆடம்பரச் செலவு என சில வகைகளை உருவாக்கி கொள்ளுங்கள். நாளாந்தச் செலவுகளை எந்தவித தாமதமுமின்றி இதற்குள் வகைப்படுத்தி வாருங்கள். நாளடைவில், எந்தவகையான செலவீனம் அதிகமாக இருக்கிறது எனும் தகவலை நாள் ரீதியாக, வார ரீதியாக, மாத ரீதியாக உங்களால் கண்காணிக்கக் கூடியதாக இருக்கும்.

இந்த எளிமைத் தன்மை, இந்தப் பழக்கத்தைத் தொடர ஏதுவாக இருக்கும். சாதாரணமாகப் பயன்படுத்தக் கூடிய மாதிரியொன்றை பகிர்ந்திருக்கிறேன். இதற்குச் சமனான ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

 அதுபோல, நீங்கள் உங்கள் செலவீனங்களை முறையாக பராமரிப்பதன் மூலம் உங்கள் பணத்தைத்தான் மீதப்படுத்திக் கொள்ள போகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே, உங்கள் செலவுகளுக்கான பற்றுசீட்டினையோ அல்லது ஆவணங்களையோ குப்பையாகச் சேர்க்க வேண்டியதில்லை. அவற்றை குறிப்பெடுத்துக் கொண்டு, தேவை அற்றவற்றை எறிந்துவிடுங்கள். இதுபோன்ற சிறிய விடயங்கள் நீங்கள் உங்கள் பழக்கத்தைத் தொடருவதற்கு ஏதுவான காரணிகளாக இருக்கும்.  

வாரமொருமுறை ஆய்வு செய்யுங்கள்

நீங்கள் உங்கள் செலவீனங்களைச் சரிவரப் பதிவுச் செய்துவருகின்ற செயற்பாடு மாத்திரம் போதுமானதல்ல. வாரமொருமுறை உங்கள் செலவீனக் குறிப்பை மீளாய்வுச் செய்யுங்கள். இதற்கு, நீங்கள் அதிகமான நேரத்தினையோ அல்லது விசேட திறமையையோ கொண்டிருக்கத் தேவையில்லை.   

மாறாக, நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் வகைகளை (category) பாருங்கள். அந்த வகைகளில் உள்ள செலவிட்ட தொகையையும் பாருங்கள். இந்தத் தொகை வாரமொன்றுக்கு உங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறதா?

 உங்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பின், அடுத்த வாரத்தை நோக்கி நகருங்கள். இல்லாதுவிடின், நிதானித்து உங்களது செலவீனங்களுக்கான காரணத்தை ஆராயுங்கள். இந்தச் செலவீனங்களைக் குறைக்க அல்லது இல்லாமல் செய்ய என்னவெல்லாம் செய்யலாம் எனச் சிந்தியுங்கள். திருப்திகரமான முடிவொன்றினை எடுத்ததன் பிற்பாடாக அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கள்.  

செலவுக் கோவையை உருவாக்குங்கள் 

சரியாக நான்கு வாரங்கள் அல்லது 30 நாள்கள் இதைத் தொடர்ந்து செய்வதன் மூலமாக, உங்களால் ஒரு மாதத்துக்கான உங்கள் செலவீனங்களைச் சரிவரக் கண்காணித்திருக்க முடியும். 

இப்போது, உங்களுக்கு ஒரு மாதத்தில் நீங்கள் செய்யக்கூடிய அத்தியாவசிய செலவுகள், ஆடம்பரச் செலவுகள், திடீர்ச் செலவுகள் ஆகியவற்றை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

இதன்மூலமாக, உங்களது அத்தியாவசிய செலவுகளுக்கான பாதீட்டை உங்களால் உருவாக்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இது மாதாந்தம், இனி நீங்கள் செய்யபோகின்ற செலவுகளுக்கு ஒரு மாதிரியாக, ஒப்பீட்டுக் கோவையாக இருக்கும்.

இதன்மூலமாக, மாதாந்த செலவீனங்களை உங்களால் கண்காணிக்க முடியும். அத்துடன், உங்களது ஆடம்பர செலவீனங்களையும் படிப்படியாகக் குறைத்துக்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடியதாக இருக்கும்.  

திடீர் செலவுகளுக்கு ஒதுக்குங்கள் 

நீங்கள் உங்கள் செலவுகளைக் கண்காணிக்கத் தொடங்கியதும், ஒரு கட்டுக்கோப்பான வாழ்வியலை நோக்கி நகர்வதை நீங்களே உணர்ந்து கொள்ளுவீர்கள்.

இதன்போது, உங்கள் வருமானம் உங்களுக்கு போதுமானதாக இருப்பதை உணர்வதுடன், சேமிப்புக்குமான வழிமுறைகளைக் கையாளத் தொடங்குவீர்கள். இதன்போது, திடீர் செலவீனங்களுக்கு மிக இலகுவாகவும், விரைவாகவும் பணத்தைக் கையில் எடுக்கக் கூடியவகையில், குறிப்பிட்டளவு பணத்தைக் கையிருப்பில் வைத்துக்கொள்ளுவது போல வகை செய்யுங்கள். இதன்மூலமாக, உங்கள் சேமிப்புப் பழக்கத்துக்கு எந்தவித இடையூறும் வராதவாறு பார்த்துக்கொள்ள முடியும்.  

மேற்கூறிய அனைத்துச் செயற்பாடுகளையும் நடைமுறைபடுத்தவும், தொடர்ச்சியாகப் பின்பற்றவும் பொறுமையும் விருப்பமும் அவசியமாகிறது. இதன்மூலமாக, உங்களது செயற்பாடுகளை ஒரு பழக்கத்துக்குள் கொண்டுவர முடிவதுடன், தொடர்ச்சியாகச் சேமிக்கவும் முடியும்.  

இப்போது, இந்தப் பழக்கத்தை  பின்பற்றுபவராக இருந்தால், மீண்டும் இந்தப் பத்தி ஆரம்பித்த தலைப்புக்குச் செல்லுங்கள். இப்போது தலைப்பிலுள்ள அந்தக் கேள்வியை மீண்டுமொருமுறை வாசித்து பாருங்கள்.

இப்போது, அந்தக் கேள்விக்குச் சொல்வதற்கு ஒரு விடை அல்ல. சிறு அனுபவமே உங்களிடத்தில் இருக்கும். அப்படி இருப்பின், அதுதான் இந்தக் கட்டுரையின் வெற்றியாகவும் இருக்கும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .