2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஜூன் 4இல் ‘CAN- SUR-VIVE’ நிகழ்ச்சி

Editorial   / 2017 மே 30 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

CAN-SUR-VIVE நம்பிக்கை நிதியம், ஜெட்விங் குழுமத்துடன் இணைந்து ஆறாவது தடவையாகவும் ‘CAN-SUR-VIVE’ சமூகப்பொறுப்புணர்வு நிகழ்ச்சியை முன்னெடுக்கவுள்ளது. இந்த நிகழ்வு, எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி காைல. 8.00 மணிக்கு, லங்கா ஹொஸ்பிட்டல்ஸின், 10ஆம் மாடியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடைபெறும். 

மார்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை இலக்காகக் கொண்டு இலவசமாக முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்காக, 0713 161616 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி தம்மை பதிவு செய்து கொள்ள முடியும். 

புகழ்பெற்ற சிகிச்சையளிப்போர், உளவியல் நிபுணர்கள், தொழில்சார் சிகிச்சையளிப்போர், உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர்கள், சமூகவியலாளர்கள் அடங்கலாக வைத்திய ஆலோசகர்களின் விளக்கங்கள் இதில் வழங்கப்படவுள்ளதுடன், மதகுருமார் மற்றும் நிதிசார் ஆலோசகர்கள் ஆகியோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரதான சவால்கள் பற்றியும் விளக்கமளிப்பர். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் / குணமடைந்தவர்கள் மத்தியில் இழந்த நம்பிக்கையை மீள பெற்றுக்கொடுப்பது தொடர்பில், இந்த சமூகப்பொறுப்புணர்வு திட்டம் கவனம் செலுத்தும் என்பதுடன், குணமடைந்தவரின் உணர்வுபூர்வ, உளவியல் மற்றும் சமூக நலனை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தும். 

குணமடைந்தவர் என்பது, முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்து, சிகிச்சைகளை பூர்த்தி செய்தவர் என பொருள்படும். CAN-SUR-VIVE நிகழ்ச்சியில் குணமடைந்தவர்கள் மற்றும் புதிதாக மார்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என இனங்காணப்பட்டு, தற்போது சிகிச்சை பெறுவோரும் பங்குபற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குணமடைந்தவர்களின் நலனில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் மருத்துவ, உடல் ரீதியான, நிதிசார், மதம் சார்ந்த மற்றும் இதர பிரச்சினைகள் தொடர்பில், இந்தப் பயிற்சிப்பட்டறையின் போது விளக்கங்கள் வழங்கப்படும் என்பதுடன், குணமடைந்தவர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.  

பெண்கள் மத்தியில் உலகளாவிய ரீதியில் மார்பு புற்றுநோய் என்பது அதிகளவில் ஏற்பட்ட வண்ணமுள்ளது. குறிப்பாக இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில், பிந்திய நிலைகளில் பெருமளவான நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இலங்கை பெண்கள் மத்தியில் இரண்டாவதாக அதிகளவில் காணப்படும் புற்றுநோயாக, கர்பப்பை வாய் புற்றுநோய் அமைந்துள்ளது. ஆனாலும், ஆரம்ப நிலையில் இனங்கண்டு கொண்டு, முறையான சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதனூடாக சகல புற்றுநோய்களிலிருந்தும் குணமடைய முடியும்.  

இலங்கையில் குணமடைந்தவர்கள் மீது போதியளவு அக்கறை செலுத்தப்படுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் குணமடைந்தவர்கள் போதியளவு மருத்துவ ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளாமையால், மீண்டும் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர். CAN-SUR-VIVE நிதியத்தினால் முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாடானது, இலங்கையின் மருத்துவத்துறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தச் செயற்பாடாக அமைந்துள்ளது.  

முன்பு முன்னெடுக்கப்பட்டிருந்த CAN-SUR-VIVE நிகழ்ச்சிகள், பெருமளவு நிபுணர்களும் வளவாளர்களும் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலியல், மனநிலை, சமய ரீதியான மற்றும் நிதிசார் நலனை மேம்படுத்துவது தொடர்பில் தம்மை அர்ப்பணித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .