2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

ஃபின்லேஸ் டீ ஸ்ரீலங்காவின் வரிக்கு பிந்திய இலாபம் 139 மில்லியன்

Super User   / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடபுசல்லாவ மற்றும் ஹபுகஸ்தென்ன பெருந்தோட்டங்களை முகாமைத்துவம் செய்யும் பெருந்தோட்ட கம்பனியான ஃபின்லேஸ் டீ எஸ்டேட்ஸ் ஸ்ரீலங்கா நிறுவனம் 2010 நிதியாண்டில் அதிகளவு இலாபமீட்டியுள்ளது.

1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டதிலிருந்து இது வரையிலான காலப்பகுதியில் மிகவும் அதிகூடிய இலாபம் ஈட்டப்பட்ட நிதியாண்டாக 2010 அமைந்துள்ளது.

2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், வரிக்கு பிந்திய இலாபம் 352 வீதம் அதிகரித்துள்ளதுடன் இந்த பெறுமதி 139 மில்லியன் ரூபாவாக அமைந்துள்ளது. அத்துடன் உடபுசல்லாவ பெருந்தோட்டத்தின் தேயிலை தயாரிப்பும் 22 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஃபின்லேஸ் டீ எஸ்டேட்ஸ் ஸ்ரீலங்காவின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான நரேஷ் ரத்வத்த கருத்து தெரிவிக்கையில், 'உடபுசல்லாவ பெருந்தோட்டத்தின் சிறப்பான பெறுபேறுகளுக்கு 2005 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டிருந்த மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் காரணமாக அமைந்திருந்தன. இந்நடவடிக்கைகளில் தேயிலைச் செடிகள் மீள் செய்கை முக்கியத்துவம் பெற்றிருந்தது. நுவரெலியா பிராந்தியத்தில் இதன் மூலமாக ஹெக்டெயர் ஒன்றில் வருடமொன்றுக்கு 4000 – 4500 கிலோ வரை தேயிலை விளைச்சலை பெற்றுக் கொள்ள முடிந்தது. மேலும், உடபுசல்லாவ பெருந்தோட்டத்தின் மாத்தளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிரிசி (CTC) ரக தொழிற்சாலையும் உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்க உதவியிருந்தது. தயாரிப்புக்காக வெளித் தோட்டங்களிலிருந்து பெற்றுக் கொள்ளும் கொழுந்தின் அளவு 34 வீதத்தினால் கடந்த ஆண்டில் அதிகரிக்க முடிந்தது' என்றார்.

ஹபுகஸ்தென்ன பெருந்தோட்டத்தின் வரிக்குப் பிந்திய இலாபமாக 287 மில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. இது 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 196 வீதம் அதிகரிப்பாகும். ஹபுகஸ்தென்ன பெருந்தோட்டத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான வருமானத்தில் 35 வீதத்தை இறப்பர் கொண்டுள்ளதன் மூலம் முன்னைய ஆண்டுகளை விட அதிகளவான அதிகரிப்பை காண்பித்துள்ளது.

பசறை குழுமத்தைச் சேர்ந்த பெருந்தோட்ட பகுதியில் மேலதிகமாக 702 ஹெக்டெயரில் இறப்பர் பயிரிடப்பட்டது. இதன் மூலம் தற்போது இலாபமீட்டிக் கொள்ளக்கூடிய நிலை உருவாகி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் இறப்பர் விலையின் மூலம் சிறந்த அனுகூலங்களை பெற்றுக் கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஃபின்லேஸ் டீ எஸ்டேட்ஸ் ஸ்ரீலங்காவின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான நரேஷ் ரத்வத்த தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'தேயிலை விலையில் எதிர்காலத்தில் வீழ்ச்சி ஏற்படின் அதனை இறப்பர் மூலம் ஈடு செய்து கொள்ள முடியும் என்பதில் உறுதியாகவுள்ளோம். ஹபுகஸ்தென்ன பெருந்தோட்டத்தை பொறுத்தமட்டில் இறப்பர் செய்கை கிழக்கை அண்டிய உலர் வலயத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதி இறப்பர் செய்கைக்கு மிகவும் உகந்த காலநிலை நிலவும் பகுதியாகும். ஏனெனில் ஈர  வலயத்தில் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக இறப்பர் விநியோகம் குறைவடையும் பொழுது கூட எம்மால் தொடர்ந்து இறப்பர் விநியோகத்தை மேற்கொள்ள முடியும்.'

'2010 ஆம் ஆண்டைப் போலவே, இந்த ஆண்டிலும் தேயிலையின் விலை நிலையாக காணப்படுமென நாம் எதிர்பார்க்கிறோம். இறப்பர் விலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது. ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து இறப்பர் விலையில் தற்காலிகமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் விலைகள் சீரடையும் என எதிர்பார்க்கிறோம்.'

'நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு நுட்பமான தீர்மானங்களும் முடிவுகளும், இனங்காணப்பட்ட குழுமத்தின் உறுதியான அர்ப்பணிப்பணிப்புகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதால் வெளிப்பாடுகள் வழிகாட்டப்பட்டு, பெறுபேறுகள் மதிப்பீடு செய்யப்படுகிறது. எதிர்வரும் காலப்பகுதியில் கவனம் செலுத்தும் வகையில் நாம் நான்கு பிரதான நுட்பமான நோக்கத்தை கொண்டுள்ளோம். முதலாவதாக எமது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வது, இரண்டாவதாக சிக்கல் தன்மை மற்றும் அபாயத்தன்மையை குறைத்தல், மூன்றாவதாக எமது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்த்து அவர்களுடன் மேலும் நெருக்கமாதல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உறுதியான எதிர்காலத்தை உருவாக்குதல் போன்றன அவையாகும். இந்த நோக்கங்களை இலக்காகக் கொண்ட செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. பெரும்;பாலான நோக்கங்களில் குறிப்பிடத்தக்களவு சாதகமான நிலையை எட்டியுள்ளோம்' என்றார்.

2010 ஆம் ஆண்டில் ஹபுகஸ்தென்ன பெருந்தோட்டத்தின் பசறை குழுமம், இலங்கையின் முதலாவது மழைக்காடு உடன்படிக்கைச் சான்றிதழை பெற்றிருந்தது. உலகளாவிய ரீதியில் கமத்தொழில் துறையை பொறுத்தமட்டில் மிகவும் பிரதானமான சூழல் பாதுகாப்புத் தரச் சான்றாகும். உடபுசல்லாவ பெருந்தோட்டத்தின் நுவரெலியா குழுமம், ஹபுகஸ்தென்ன பெருந்தோட்டத்தின் ஹாலிஎல குழுமம் போன்றன இந்த மழைக்காடு உடன்படிக்கைச் சான்றிதழை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்த ஆண்டின் ஆரம்ப பகுதியில் பெருந்தோட்டத்துறையானது மோசமான காலநிலையால் பாதிப்படைந்தது. தொடர்ந்தும் இந்த ஆண்டில் பாதகமான காலநிலை ஏற்படுமாயின் நிறுவனத்தினதும், பெருந்தோட்டத்துறையினதும் வருமானத்தை பெருமளவு பாதிக்கக்கூடியதாகும். ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படவுள்ள சம்பள அதிகரிப்பும் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக அமைந்தால் உற்பத்திச் செலவு மேலும் அதிகரிக்கும். மேலும் 11 வீதம் மின்சாரக் கட்டண அதிகரிப்பு, தேயிலை மற்றும் இறப்பர் மீது அறவிடப்படும் 3.5 வீதம் மற்றும் 4 வீதம் செஸ் வரி போன்றன இந்த துறையின் வளர்ச்சியை பாதிப்படையச் செய்து உற்பத்திச் செலவை அதிகரிக்கச் செய்துள்ளன.

ஃபின்லேஸ் டீ எஸ்டேட்ஸ் நிறுவனம் அதன் கிழக்குப்பிராந்திய நிலங்களில் மரச் செய்கை மற்றும் இறப்பர் செய்கை மேற்கொள்ளும் நடவடிக்கையும், இதர பகுதிகளில் கறுவா, மிளகு மற்றும் பாக்கு போன்ற செய்கையில் ஈடுபடும் நடவடிக்கையும் துரிதப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .