2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

உணவில் உப்பின் அளவைக் குறையுங்கள்

Gavitha   / 2016 மே 15 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச ஊட்டச்சத்து அறிவியல் ஒன்றியமானது, இலங்கை ஊட்டச்சத்து சங்கம் மற்றும் யூனிலீவர் நிறுவனம் ஆகியவற்றின் பங்குடமையுடன், இலங்கை மக்களின் உணவு முறைகளில் உப்பின் அளவைக் குறைப்பதில் காணப்படும் முக்கியமான சவால்களை இனங்கண்டு, அவை தொடர்பில் ஆழமாகக் கண்டறிவதற்காக, 2016 ஏப்ரல் 25 அன்று கொழும்பில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. தொற்றாத வியாதிகளின் ஆபத்தைக் குறைப்பதற்காக, ஒருவர் தான் அன்றாடம் உள்ளெடுக்கின்ற உப்பின் அளவைக் குறைக்கவேண்டும் என்று உலகெங்கிலுமுள்ள விஞ்ஞான மற்றும் ஒழுக்காற்று நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன. பதனிடப்பட்ட உணவு தொழிற்றுறை, ஊட்டச்சத்து துறை சார் நிபுணர்கள், நுகர்வோர் குழுக்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

அன்றாடம் உள்ளெடுக்கின்ற உப்பின் அளவு 5 கிராமுக்கு மேற்படக்கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ள போதிலும், இலங்கை மக்கள் மத்தியில் இது எதிர்மாறாக உள்ளதுடன், அவர்கள் அன்றாடம் 11.4 கிராம் வரையான உப்பை உள்ளெடுக்கின்றனர்.

அரசாங்கம், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்துறை சார் வல்லுனர்கள் மத்தியில் மகத்தான புரிந்துணர்வு மற்றும் ஒருமித்த அபிப்பிராயத்துக்கு வழிகோலி, இப்பிரச்சினையை கையாளுவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

இலங்கை ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவரான விசாகா திலகரத்ன அவர்கள் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட முக்கிய தரப்பினர் அனைவரையும் ஒன்றுபடுத்தி, இலங்கை மக்களின் உணவில் உள்ளெடுக்கப்படுகின்ற உப்பின் அளவைக் குறைக்கும் வகையில் ஒருங்கிணைந்த முயற்சியை முன்னெடுப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். அரசாங்கம் இது தொடர்பில் கொண்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் இன்று இதில் பங்குபற்றிய சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் இது தொடர்பில் நல்ல சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளமை எமக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இன்றைய மாநாட்டைத் தொடர்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எம்மால் மேற்கொள்ள முடியும் என்று உறுதியாக நம்புகின்றோம்.'

1 பில்லியன் மக்களுக்கு, அவர்களது ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் மேம்படுத்த உதவ வேண்டும் என்ற யூனிலீவர் நிறுவனத்தின் நிலைபேற்றியல் கொண்ட வாழ்வுத் திட்டத்துக்கு அமைவாக, எவ்விதமான வர்த்தகநாம ஊக்குவிப்புப் பிரசாரங்களும் இன்றி, இந்த மாநாட்டுக்கான வர்த்தக அனுசரணையாளராக யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனம் செயற்பட்டுள்ளது.

'எமது விழுமியங்கள் மற்றும் நோக்கங்களுக்கு மிகவும் நேர்த்தியாக ஒத்திசைகின்ற இந்த முன்னெடுப்புக்கு ஆதரவளிப்பதில் யூனிலிவர் மிகவும் பெருமை கொள்கின்றது. அன்றாடம் உள்ளெடுக்கின்ற உப்பின் அளவைக் குறைக்கவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை ஒரு தசாப்த காலத்துக்கு முன்பே இனங்கண்டு கொண்ட நாம், எமது உற்பத்திகளில் உப்பின் அளவைக் குறைக்கும் முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ளோம். இது தொடர்பில் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு அனைத்து தரப்பினரும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கெடுக்க முன்வந்துள்ளமையைக் காண்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. உணவு உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளில் உணவின் அளவைக் குறைக்கவேண்டியது ஒரு கட்டாயமாக உள்ள போதிலும், அது பிரச்சினைக்கான தீர்வின் ஒரு பகுதியாக மட்டுமே உள்ளது.

நீண்ட கால அடிப்படையில் ஆரோக்கியமான வழியில் உப்பின் அளவை உள்ளெடுப்பதை உறுதிசெய்வதில் ஊட்டச்சத்து நிபுணர்கள், ஆரோக்கியம் சார்ந்த தொழிற்றுறையினர் மற்றும் அதிகார சபைகளின் கூட்டு முயற்சி தேவைப்படுகின்றது,' என்று Unilever Foods தெற்காசியாவின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை பணிப்பாளரான கலாநிதி ஆன்ட்ரே பொட்ஸ்  குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X