2025 ஜூலை 23, புதன்கிழமை

கார்கில்ஸ் வங்கியும் சனச காப்புறுதி நிறுவனமும் கைகோர்ப்பு

Editorial   / 2018 மார்ச் 08 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கார்கில்ஸ் வங்கி, இலங்கையில் சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை மேம்படுத்தி, வலுவூட்டுவதற்காக விசேட கடன் திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.  

வருடாந்தம் 6.50% என்ற சலுகை வட்டி வீதத்தில் விவசாயிகளுக்கு விசேட கடன்களை வழங்கும் நோக்கத்துடன், இலங்கை மத்திய வங்கியின் தேசிய விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் வழிகாட்டலின் கீழ் சனச காப்புறுதி நிறுவனத்தின் பங்குடமையுடன் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

இது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கார்கில்ஸ் வங்கியும், சனச காப்புறுதி நிறுவனமும் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளன. ஆரம்ப கட்டத்தில், மொனராகலை மற்றும் அனுராதபுரம் பிராந்தியங்களிலுள்ள 3,000 விவசாயிகளுக்கு விதைகள், உரம் மற்றும் விவசாயம் தொடர்பான ஏனைய சொத்துகளுக்கு, குறைந்த செலவில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதுடன், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் இன்னும் அதிக எண்ணிக்கையான விவசாயிகளுக்கு உதவவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பாதகமான காலநிலைமைகளின் போது, பயிர்களுக்குச் சேதம் ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கான கொடுப்பனவுக் காப்பீட்டை சனச காப்புறுதி நிறுவனம் உறுதி செய்வதுடன், CIC Agri நிறுவனம் விவசாயிகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்கி, முற்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விலையில் விவசாயிகளின் உற்பத்தியை அவர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கான உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளது.   

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி/ விவசாய மற்றும் நுண் கடன் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளரான துஷ்மாந்த ஜெயசிங்க கூறுகையில், “போதுமான கடன் வசதியின்மை மற்றும் பாதகமான காலநிலைமை காரணமாகச் சோளச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளின் போது துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளதைக் கடந்த காலங்களில் நாம் அவதானித்துள்ளோம். இந்த முன்னெடுப்பானது, பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்கள் தொடர்பில், புத்தாக்கத்துடனான எமது அணுகுமுறைக்கு இடமளிக்கும் வகையில் அவர்களைச் சென்றடைந்து, அவர்களுக்கு உதவும்” என்று குறிப்பிட்டார்.   

இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில்  கார்கில்ஸ் வங்கி மற்றும் சனச காப்புறுதி நிறுவனம் ஆகியன அண்மையில் கைச்சாத்திட்டுள்ளதுடன், கார்கில்ஸ் வங்கியின் சார்பில் அதன் பிரதம செயற்பாட்டு அதிகாரியான ரொஹான் முத்தையா மற்றும் சனச காப்புறுதி நிறுவனத்தின் சார்பில் இந்திக கிரிவந்தெனிய ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர். கார்கில்ஸ் வங்கியின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி / விவசாய மற்றும் நுண் கடன் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளரான துஷ்மாந்த ஜெயசிங்க மற்றும் சனச காப்புறுதி நிறுவனத்தின் பொது முகாமையாளரான (பதில்) கபில ராஜபக்ஷ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .