2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பொருளாதார அபிவிருத்தியும் இலங்கையும்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சஹ்ரான் சிக்கந்தர் லெவ்வை

இலங்கையின் பொருளாதாரத்தை விரைவான வளர்ச்சி இலக்கில் முன்னெடுத்துச் செல்வதுக்கு, சர்வதேச ரீதியில் இலங்கையின் நாமத்தை (பிரான்ட்) கட்டியெழுப்புவது மிகவும் அவசியமாகும்.

உலகமயமாதலின் விளைவாக முதலீடுகள், சுற்றுலாப் பயணிகள், திறன்பெற்ற தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் போன்றவற்றுக்காக நாடுகளுக்கிடையே உலக சந்தையில் அதிகப் போட்டி நிலவுவதுடன், நாட்டின் நாமமானது, மேலோங்கும்போது சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ஏனைய அரசாங்கங்கள் மற்றும் உலக அமைப்புக்கள் அந்நாட்டின் மீது வைத்துள்ள கவனம், நம்பிக்கை மற்றும் மரியாதை அதிகரிப்பதன் மூலம் அந்நாடு பல அனுகூலங்களையும்  பெற்றுக்கொள்ளும்.

ஒரு தேசத்தின் நாமமானது, அந்நாட்டின் மிகப் பெரும் சொத்தாக அமைவதுடன் அதன் பெறுமதியை அளவிடுவதன் மூலம் ஒப்பீட்டளவில் நாமத்தின் நிலையை அறிந்து அதற்கேற்ப மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கலாம்.சிமொன் அன்ஹோல்ட் கருத்தின்படி நாட்டின் மதிப்பானது ஏற்றுமதி, ஆட்சி, கலாசாரம், மக்கள், சுற்றுலாத்துறை, குடிவரவு ஆகிய பரிணாமங்களில் தங்கியுள்ளது.

'பிரான்ட் ‡பினான்ஸ்' நிறுவனத்தினால் 100 முன்னணி நாடுகளின் நாமங்களின் பலம் மற்றும் பெறுமதி ஆய்வு செய்யப்படுவதுடன் 2014 ஆம் வருடத்துக்கான நாடுகளின்  நாமங்களை (பிரான்ட்) தரப்படுத்தலில் ஜப்பான் 5ஆம் இடத்திலும், சீனா 2ஆம் இடத்திலும், சிங்கப்பூர் 23 ஆம் இடத்திலும், மலேசியா 30ஆம் இடத்திலும் தெற்காசிய நாடுகாளான இந்தியா 8 ஆம் இடத்திலும், பங்களாதேஷ் 49 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 55 ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தரப்படுத்தலில் இலங்கை 58ஆவது இடத்தைப் பிடித்திருப்பதுடன,; இதன் பெறுமானம் அமெரிக்க டொலர்களில் 61 பில்லியானாகும். தெற்காசிய நாடுகளில், நேபாளத்தைத்தவிர ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின்  நிலை பின்தங்கிக் காணப்படுவது மிகவும் வருத்தத்திதுக்குரிய விடயமாக அமைந்துள்ளது.

நாட்டில் நிகழ்ந்த அமைதியின்மை, சர்வதேச அரங்கில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், உள்நாட்டில் நிகழ்ந்த இன அடிப்படையிலான வன்முறைகள் நாட்டின் நாமத்தின் மதிப்பைப் பாரியளவில் பாதிப்படையச் செய்துள்ளன.கொட்ளரின் கருத்துப்படி 'நாட்டின் மதிப்பு நிலையானதல்ல. நாட்டின்  மதிப்பானது நீடித்திருப்பதற்கு மற்றும் மாற்றுவதற்கு கடினமானதொன்றாகும். ஆதலால் ஒரு நாட்டின் மதிப்பை முன்னேற்றுவதற்காக நேரிய தொடர்புகளை ஏற்படுத்துவது எளிதாக அமையும்.'

இலங்கையைப் பற்றி சர்வதேசம் எவ்வாறு சிந்திக்கிறது? 'ஸ்ரீ லங்கா' எனக் கூறப்பட்டதும் அவர்களது மனத்திரையில் உதயமாகும் விம்பம் எவ்வாறு அமைகிறது? என அறிந்து அதற்கேற்ப எவ்வாறான மாற்றத்தை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து இலங்கையின் நாமத்தை கட்டியெழுப்புவதற்கான வியூகங்கள் வகுக்கப்படலாம்.

சர்வதேச ரீதியில், ஒரு நாட்டின் மதிப்பை வெறுமனே விளம்பரங்களின் மூலம் அதிகரித்துக்கொள்வதிலும் பார்க்க ஏற்றுமதி, ஆட்சி, கலாசாரம், மக்கள், சுற்றுலாத்துறை, குடிவரவு ஆகிய பரிணாமங்களில் சிறப்பாக செயற்பட்டு உலகிற்கு காண்பிப்பதன் மூலமே நிலைத்திருக்கக் கூடியதாக உருவாக்க முடியும்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றத்துடன் ஜனநாயக, மனித உரிமை மற்றும் வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதன் விளைவாக உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக அமைவதுடன், இது பல்வேறு பொருளாதார நன்மைகளையும் பெற்றுத்தரும்.  

பொருளாதாரத்தை மையப்படுத்திய வெளிநாட்டுக்கொள்கைகள், வணிகத்தை நடாத்துவதற்கான சிறந்த நட்பு நாடாக இலங்கையை மாற்றும் விதத்தில் கொள்கைத்திருத்தத்தை ஏற்படுத்தி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டி, பல்தேசிய நிறுவனங்களை ஈர்ப்பதன் மூலம் நாட்டில் உற்பத்தித் தொழிற்சாலைகளை ஆரம்பித்து இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உலக சந்தையில் விரிவாக்கலாம்.
மேலும், புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் தொழில்நுட்ப ரீதியிலான புதிய பொருட்களை உலக சந்தைக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையின் நாமத்தை உயர்த்தலாம்.

இலங்கையின் அமைவிடத்தை மையமாக வைத்து உலகின் சிறந்த போக்குவரத்து மையமாக மாற்றும் நோக்கில்  போக்குவரத்து கொள்கைகளை இலகுபடுத்தி உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வினைத்திறனான சேவைகளைப் பெற்றுக்கொடுக்கலாம். இலங்கையின் கலாசாரமானது, இசை, நடனம் போன்ற பாரம்பரிய கலை அம்சங்கள் செறிந்ததாக காணப்படுவதுடன் தென்னிந்திய, போர்த்துகீச, ஒல்லாந்த,  பிரித்தானிய மற்றும் அராபிய அடையாளங்கள் ஒருங்கே அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

சுற்றுலாத்துறையில் உலகத்தரம் வாய்ந்த சேவையை பெற்றுக்கொடுப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் தாய் நாட்டுக்கு திரும்பியதும் இலங்கையில் பெற்ற சிறந்த நினைவுகளுடன் இருப்பதுடன் இலங்கையில் பெற்ற சிறந்த அனுபவங்களை ஏனையவர்களுக்கும் பகிரும் விதத்தில் மாற்றி அமைக்கலாம்.
முன்னோக்கிய பயணம் இலங்கையின் நாமத்தை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வியூகம், முதலீடுகள், சிறந்த ஒருங்கிணைப்பு, கண்காணித்தல் மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சி அவசியமாகும்.

இதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் விசேட பணிக்குழு ஒன்றை நியமித்து செயற்பாடுகளை முன்னெடுப்பது மிகவும் சிறப்பாக அமையும்.
உள்நாட்டில் நிகழும் இன அடிப்படையிலான வன்முறைகளை முற்றாக இல்லாதொழிக்கும் வகையில் சட்டங்களை இயற்றுதல் மற்றும் இவ்வாறு மீறி ஈடுபடுவோறை சட்டத்தின் முன் நிறுத்துதல் போன்றவை இன்றியமையாதவையாகும.;

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X