2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

யுனிலீவர் ஹொரண தொழிற்சாலையில் பெண் ஊழியர்கள் நியமனம்

S.Sekar   / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணியிடத்தில் பாலின சமத்துவம் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகின்ற நிலையில், மிக வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் தயாரிப்புக்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள யுனிலீவர் ஸ்ரீ லங்கா, தனது ஹொரண உற்பத்தித் தொழிற்சாலையில் முதன்முறையாக பெண் ஊழியர்களை பணியில் அமர்த்தி, பன்மைத்துவம் மற்றும் சேர்க்கை அரவணைப்பு ஆகியவற்றை அடையும் தனது பயணத்தில் மற்றுமொரு முக்கியமான சாதனை இலக்கை எட்டியுள்ளது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள பெண் ஊழியர்கள் 23 பேரும் தொழில்சார் தகைமைகளைக் கொண்டுள்ளதுடன், அவர்களில் சிலர் பல்வேறு துறைசார் நிபுணத்துவப் பட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் ஹொரண தொழிற்சாலையின் அழகுசாதனத் தயாரிப்புக்களின் உற்பத்தி ஆலை மற்றும் தற்போது முற்றுமுழுதாக பெண்களால் இயக்கப்படும் பேபி கொலோன் உற்பத்தி ஆலை ஆகியவற்றின் உற்பத்தித் தொழிற்பாடுகளில் இணைந்து கொள்வார்கள்.

இலங்கையில், யுனிலீவர் நிறுவனத்தின் முகாமைத்துவ சபையில் 55% பெண்களாகக் காணப்படுவதுடன், அதன் ஒட்டுமொத்த பணியாளர்களில் 31% பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகளவில் நிறுவனம் 50:50 என்ற விகிதத்தில் பாலின சமநிலையை அடைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் முடிவில் தனது உலகளாவிய வணிகச் செயற்பாடுகளின் முகாமைத்துவ பதவிகளில் பாலின சமத்துவத்தை அடையவுள்ளதாக 2010 ஆம் ஆண்டில் அது வழங்கிய உறுதிப்பாட்டின் ஒரு அங்கமாக இது காணப்படுவதுடன், குறித்த இலக்கை யுனிலீவர் நிறுவனம் ஒரு ஆண்டுக்கு முன்பதாகவே அடைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பன்மைத்துவம் மற்றும் சேர்க்கை அரவணைப்பு ஆகியவற்றில் யுனிலீவர் நிறுவனம் காண்பிக்கின்ற அர்ப்பணிப்பு குறித்து யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் மனித வளத் துறை பணிப்பாளரான அனன்யா சபர்வால் கருத்து வெளியிடுகையில், 'தற்போது ஆண் ஆதிக்கம் நிலவும் உற்பத்தி மற்றும் விற்பனைத் துறைகளில் எமது முன்களப் பணிகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் முயற்சிகளை நாம் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றோம். ஹொரணவில் முதன்முறையாக பெண் ஊழியர்களை நாம் அறிமுகப்படுத்துவது யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் பன்மைத்துவ வரலாற்றில் பெருமைமிக்க சாதனைகளில் ஒன்றாகும். கருத்தரிப்பு உதவி, வீட்டு வன்முறை உதவிக் கொள்கைகள் போன்ற சில கொள்கைகளை தொழிற்துறையில் நாம் முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ளோம் என்பதையும் இத்தருணத்தில் பணிவுடன் நினைவுபடுத்த விரும்புகிறோம். எங்களைப் பொறுத்தவரை, பன்மைத்துவம் என்பது பாலின சமநிலையைப் பற்றியது மட்டுமல்ல, அனைத்து வகையான திறமைசாலிகளுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அரவணைக்கும் ஒரு சூழலை தோற்றுவிப்பதாகும். மக்கள் தங்களது திறமைகளை நிரூபிக்க இடமளிப்பது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சி தளைத்தோங்க உதவும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்.' என்று குறிப்பிட்டார்.

நிறுவனம் தனது ஹொரண தொழிற்சாலையில் முதன்முதலாக பெண் ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கும், தக்கவைப்பதற்கும் ஒரு விரிவான திட்டத்தை மேற்கொண்டிருந்தது. யுனிலீவர் நிறுவனம் இந்த முயற்சியை ஆழம் பார்ப்பதற்காக, கடந்த 3 ஆண்டுகளில் மிகவும் தொழிற்பாட்டு நடவடிக்கைகள் கூடுதலாகக் காணப்பட்ட காலகட்டங்களில் சமயாசமய அடிப்படையில் பெண் ஊழியர்களை அறிமுகப்படுத்தியிருந்தது.  'உங்கள் குறிக்கோளைக் கண்டறியவும்' (Discover Your Purpose) என்ற செயலமர்வுகளும் இந்நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன், பணியில் உள்வாங்கப்பட்டவர்கள், தமது தொழிலில் வளர்ச்சி கண்டு, பரிணமிக்கவும், வாழ்வில் தளைத்தோங்கவும் இடமளித்தன. தேசிய தொழிற்சார் தகைமைகளைக் கொண்ட பெண்களை வேலைக்கு அமர்த்துவதால், பெண்களை தொடர்ந்தும் தக்கவைத்து, எதிர்காலத்தில் இன்னும் மேம்பட்ட, சிறப்பான பணிப் பொறுப்புக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்களை வளர்ப்பதையும் நிறுவனம் இதன் மூலமாக உறுதி செய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .