Freelancer / 2025 நவம்பர் 03 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில், யூனியன் வங்கி சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. அதனூடாக, இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தனியார் வணிக வங்கிகளில் ஒன்று எனும் தனது நிலையை மீள உறுதி செய்துள்ளது. வங்கியின வரிக்கு முந்திய இலாபம் ரூ. 1,178 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 52% உயர்வாகும். வரிக்கு பிந்திய இலாபம் 194% இனால் உயர்ந்து, ரூ. 343 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதனூடாக, வங்கியின் வெற்றிகரமான மூலோபாய நிறைவேற்றல் மற்றும் கடுமையான நிதிசார் முகாமைத்துவம் ஆகியன வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
வங்கியின் திரண்ட வருமானம் 7% இனால் உயர்ந்து ரூ. 13,199 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதனூடாக தொடர்ச்சியான வியாபார விரிவாக்கம் மற்றும் பிரதான மற்றும் பிரதானமற்ற செயற்பாடுகளினூடாக மேம்படுத்தப்பட்ட வருமதிகளும் பிரதிபலிக்கப்பட்டிருந்தன. தேறிய வட்டி வருமானம் (NII) 11% எனும் ஆரோக்கியமான வளர்ச்சியை எய்தி ரூ. 3,981 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில், உறுதியான கடன் வளர்ச்சி மற்றும் வினைத்திறனான எல்லை முகாமைத்துவம் போன்றன முக்கிய பங்காற்றியிருந்தன. இந்த பெறுபேறுகளுக்கு மேலும் வலுச் சேர்த்திடும் வகையில், தேறிய கட்டண மற்றும் தரகு வருமானமும் உயர்ந்த 39% வளர்ச்சியை பதிந்து, ரூ. 1,133 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் உயர்ந்த பரிவர்த்தனை எண்ணிக்கைகள், டிஜிட்டல் நாளிகை பயன்பாடுகள் மற்றும் வர்த்தகத்துடன் தொடர்புடைய சேவைகள் போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன. இதன் விளைவாக, தேறிய தொழிற்பாட்டு வருமானம் 19% இனால் உயர்ந்து ரூ. 5,705 மில்லியனாக பதிவாகியிருந்தது.
தொழிற்பாட்டு செயற்பாடுகளினூடாக யூனியன் வங்கியின் பெறுபேறுகள் பெருமளவு முன்னேற்றத்தை பதிவு செய்திருந்தது. டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் மற்றும் திறன் விருத்தி போன்றவற்றில் தொடர்ச்சியான முதலீடுகளின் பிரதிபலிப்புடன், தொழிற்பாட்டு செலவீனங்களில் 14% வளர்ச்சி காணப்பட்ட போதிலும், வருமதிகள் 41% இனால் உயர்ந்து ரூ. 1,106 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதனூடாக, மேம்படுத்தப்பட்ட தொழிற்பாட்டு வினைத்திறன் மற்றும் வருமதிகளின் தரம் போன்றன வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, தொழிற்படா கடன் (NPL) விகிதம் உறுதியான நிலையில் பேணப்பட்டிருந்தது. அதனூடாக, வங்கியின் உறுதியான கடன் இடர் முகாமைத்துவ கட்டமைப்பு மற்றும் தயார்ப்படுத்தலுடனான பிரிவு மேற்பார்வை போன்றன பிரதிபலிக்கப்பட்டிருந்தன. சவால்கள் நிறைந்த தொழிற்பாட்டு சூழலிலும் உயர்ந்த சொத்துத் தரத்தை பேணுவதை உறுதி செய்திருந்தது. வங்கியின் மூலதன போதுமை விகிதங்கள் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு உட்பட்டதாக அமைந்திருந்தன. அதனூடாக, வங்கியின் கடுமையான இடர் மற்றும் மூலதன முகாமைத்துவ செயன்முறைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வங்கி Tier II Basel III இற்கமைவான கடன்பத்திரங்கள் வழங்கலினூடாக ரூ. 3 பில்லியனை திரட்டுவதற்கு வங்கி எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது. அதனூடாக, வங்கி தனது மூலதன இருப்பையும், எதிர்கால வியாபார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.
2025 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று, வங்கியின் மொத்த சொத்துகள் 17% இனால் அதிகரித்து ரூ. 171,864 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதனூடாக, உறுதியான ஐந்தொகை விரிவாக்கம் பிரதிபலிக்கப்பட்டிருந்தது. கடன்கள் மற்றும் முற்பணங்கள் 32% இனால் உயர்ந்து ரூ. 107,592 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதனூடாக, யூனியன் வங்கி தனது கடன் வழங்கல் பிரிவை உறுதி செய்திருந்ததுடன், வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதையும் உறுதி செய்துள்ளது. அதேவேளை, வாடிக்கையாளர் வைப்புகள் 8% இனால் உயர்ந்து ரூ. 111,895 மில்லியனாக உயர்ந்திருந்தது. அதனூடாக, வாடிக்கையாளர் நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், சந்தைப்பிரிவுகளில் ஆழமான உறவுகள் பேணப்படுவதும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துகளின் பெறுமதி 18% இனால் உயர்ந்து ரூ. 182,946 மில்லியனாக பதிவாகியிருந்தது.
பிரதான தொழிற்பாட்டு சிறப்பம்சத்தில், வங்கியின் தயாரிப்பு பிரிவின் விரிவாக்கம் அடங்கியிருந்தது. குறிப்பாக சிறுவர்கள் பிரிவில் Junior Elite, பெண் தொழில்முயற்சியாளர்கள் பிரிவில் Power HER மற்றும் தங்க நகை அடைமான சேவைக்கு மேலதிகமாக, தங்கக் கடன் சேவை அறிமுகம் போன்றன இதில் அடங்கியுள்ளன. வங்கி தனது BizDirect பண முகாமைத்துவ தீர்வினூடாக சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வியாபாரத்தை மேம்படுத்த பயன்படுத்தியிருந்ததுடன், கூட்டாண்மை வங்கியியல் பிரிவினால் வாடிக்கையாளர் இலாபகரத்தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. தனது டிஜிட்டல் நிகழ்ச்சிநிரலில் முன்னேற்றச் செயற்பாடாக, வங்கி தனது பிரதான வங்கியியல் உட்கட்டமைப்பையும் மொபைல் app ஐயும் மேம்படுத்தியிருந்ததுடன், PCI-DSS சான்றிதழை மீள உறுதி செய்திருந்தது. மேலும், டிஜிட்டல் கொடுப்பனவு தீர்வுகளை மேம்படுத்துவதற்காக Mastercard உடன் கைகோர்த்திருந்தது.
பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், “2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் யூனியன் வங்கியின் அதிசிறந்த பெறுபேறுகள் என்பது, வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தல் ஆகியவற்றில் எமது ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தொழில்னுட்பம், புத்தாக்கம் மற்றும் உறுதியான ஆளுகை ஆகியவற்றை பின்பற்றி, நிலைபேறான பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்துகிறோம். இலாபகரத்தன்மை மற்றும் ஐந்தொகை ஆகியவற்றில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதனூடாக, எமது ஒழுக்கமான மூலோபாயம், எமது அணியினரின் ஆற்றல் மற்றும் எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்கள் எம் மீது கொண்டுள்ள நம்பிக்கை போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளன.” என்றார்.
தவிசாளர் தினேஷ் வீரக்கொடி தெரிவிக்கையில், “யூனியன் வங்கியின் தொடர்ச்சியான மாற்றியமைப்பு பயணத்தின் முன்னேற்றத்தை இந்தப் பெறுபேறுகள் வெளிப்படுத்துவதுடன், மூலோபாய முன்னுரிமைகளை ஒழுக்கமான முறையில் நிறைவேற்றுவதையும் காண்பிக்கிறது. உற்பத்தித்திறன் வாய்ந்த, தொழில்னுட்ப ரீதியில் செயற்படுத்தப்பட்ட மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய நிறுவனத்தை கட்டியெழுப்பி, தொடர்ச்சியாக வாடிக்கையாளர்கள், பங்காளர்கள் மற்றும் பரந்த பொருளாதாரத்துக்கு பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாம் பிரதானமாக கவனம் செலுத்துகிறோம். இலங்கையின் நிதித் துறையில் யூனியன் வங்கியின் நிலையை மேலும் வலிமைப்படுத்தும், நிலைபேறான வளர்ச்சியில் மற்றும் மூலோபாய பங்காண்மைகளில் நாம் கவனம் செலுத்துவோம்.” என்றார்.
9 minute ago
19 minute ago
20 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
20 minute ago
24 minute ago