2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வவுனியா பொது வைத்தியசாலையில் புதிய கழிவு நீர் அமைப்பு மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா நகரின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிலைமைகளை பாதிக்கக்கூடிய மிகப்பெரிய அபாயங்களில் ஒன்றை தடுக்கும் வகையில், திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் (UNOPS) மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் நிர்வாகத்துடன் இணைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் கழிவு நீர் அமைப்பு மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துள்ளது.

இந்த செயற்பாடுகளுக்கு மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU-SDDP) உதவி செயற்திட்டத்தினூடாக நிதியுதவிகள் வழங்கப்பட்டிருந்தன. இத்திட்டத்துக்கு மொத்த உதவித் தொகையாக 60 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்ளைச் சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்வாங்குவதுடன் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் பங்களிக்கும் வகையில் அமைந்துள்ளது.

வட மாகாணத்திலுள்ள இரண்டாவது மிகப்பெரிய மருத்துவமனையான வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் மூலம் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அனுராதபுர பகுதிகள் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள சுமார் 400,000 மக்களுக்கு தனது சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது இவ் வைத்தியசாலையில் 700 கட்டில் வசதிகள் உள்ளதுடன், தினசரி சுமார் 5000 பேர் வரை வெளிநோயாளர்களாக உதவிகளை பெற்று வருகின்றனர். மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கான தற்போதைய அபிவிருத்தி திட்டங்களுடன் எதிர்காலத்தில் 1000 கட்டில்கள் வரை அதிகரித்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கழிவுநீர் அமைப்பு மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் தொடர்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி லிபுஸி சவுகுபோவா கருத்துத் தெரிவிக்கையில், 'மருத்துவமனைகளில் அதிகளவு தண்ணீர் பயன்படுத்துவது மட்டுமன்றி, அதிக கழிவு நீரும்; வெளியேற்றப்படுகின்றன. செயற்திறன் மிக்க கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் அகற்றல் போன்றவற்றை உறுதி செய்வதானது குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவு சேகரிப்பு போன்ற பொதுமக்;களின் சுகாதார பிரச்சனைகளுக்கிணையாக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இந்த திட்டம், சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், ஆரோக்கியமான வாழ்க்கையையும் ஊக்குவித்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இந்த திட்டம் மூலம் வவுனியா மக்கள் அனுகூலம் பெறுவார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்' என்றார்.

இந்த வைத்தியசாலையின் தற்போதைய கழிவுநீர் வடிகால் அமைப்பில் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிப்பறை குழிகள் முழுமையாக நிரம்பிய நிலையிலும், அடைபட்ட நிலையிலும் உள்ளன. தாங்கிகளை பயன்படுத்தி நாளொன்றுக்கு சுமார் 6 தடவைகள் ஏறத்தாழ 12கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கழிவகற்றல் குழிக்கு கழிவுகள் மற்றும் சேறுகள் கொண்டு செல்லப்படல் வேண்டும். வைத்தியசாலையின் கழிவு நீரானது வடிகால்கள் அல்லது நிலத்தின் மேற்பரப்பில் வெளியேற்றப்படுதால், அப்பகுதியிலுள்ள பாசன கால்வாய்களையும், மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் அமைப்பினையும் மாசுபடுத்தி வருவதுடன், தற்போதைய கழிவகற்றும்; நடைமுறையானது உள்நாட்டு சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், UNOPS ஆனது பிராந்திய சுகாதார சேவைகள் நிர்வாகம் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின் கூட்டிணைவுடன் இந்த சவாலினை எதிர்கொள்ளக்கூடிய வகையில் கழிவு நீர் அமைப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வருடங்களுக்கு மேலாக, இந்த நிலையத்தின் உரிய வடிவமைப்புக்காக சர்வதேச ஆலோசகர்களுடன் UNOPS ஒன்றிணைந்திருந்தது. அதிகாரிகள் மற்றும் சமூகத்தினரின் பல்வேறு கட்ட ஆலோசனைகள் ஊடாக, இதன் இறுதி வடிவமைப்பிற்கு ஆரம்ப சுற்றுச்சூழல் பரீட்சை செயல்பாடு (IEE) ஊடாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) மூலம் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

இந்த புதிய சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப்பணிகள் வவுனியா-சுகாதார சேவைகளுக்கான பிராந்திய பணிப்பாளர் மற்றும் வவுனியா- சுகாதாரம் தொடர்பான செயல்படு மருத்துவ அதிகாரி மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டு கடந்த 2015  ஜுலை 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. நாளாந்த செயற்பாடுகளில் ஏற்படும் இடையூறுகளை குறைத்துக்கொள்ளும் வகையில் இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து வைத்தியசாலை ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையத்தின் கட்டுமானப்பணிகள் 10 மாதத்தினுள் பூர்த்தி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைத்தியசாலை மூலம் வழங்கப்படும் ஏனைய சமூக சேவைகளை மேம்படுத்துவதற்கான அத்தியாவசிய படிமுறையாக இந்த வைத்தியசாலையின் கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் முறைமையின் மேம்படுத்துதல் அடையாளம் காணப்பட்டிருந்தது. இந்த தலையீட்டின் மூலம் தினசரி அடிப்படையில் கழிவு நீரினை கொண்டு செல்ல வேண்டிய போக்குவரத்து செலவுகளின் சுமை குறைவதுடன், வைத்தியசாலையின் ஒட்டுமொத்த சுகாதார நிலைமைகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந் நிலையத்தின் ஊடாக மேற்பரப்பு மற்றும் நீர்ப்பாசனம் மாசடைதல் குறைக்கப்பட்டு வவுனியா நகர சமூகத்தினரின் சுகாதாரத் தரத்தினை மேம்படுத்துவதற்கான பங்களிப்பு வழங்கப்படவுள்ளது.

EU-SDDP கட்டமைப்பின் கீழ், UNOPS ஆனது 600,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பயனடையக்கூடிய வகையில் மட்டக்களப்பு, மன்னார் மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் சமூக உள்கட்டுமானம் மற்றும் குறிப்பிட்ட திறன் கட்டியெழுப்பல் நடவடிக்கைகள் போன்றவற்றின் கட்டுமானம் மற்றும் மறுவாழ்வுக்கு பங்களிப்பு வழங்கி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X