.jpg)
உலகின் முன்னணி கடிதம் மற்றும் சரக்கு கையாள்கை சேவைகளை வழங்கும் நிறுவனமான டச் போஸ்ட் DHL மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் ஆகியன அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து 'விபத்துக்கு தயாராக இருத்தல்' எனும் தலைப்பில் நான்கு நாள் பயிற்சிப்பட்டறை ஒன்றை முன்னெடுத்திருந்தன. பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் 34 ஊழியர்களுக்கு, விமான நிலையத்தில் திடீரென ஏற்படும் இயற்கை அனர்த்தம் ஒன்றின் போது, அவர்கள் எவ்வாறு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்த பயிற்சிப்பட்டறையின் போது விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தது. 2014 டிசெம்பர் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை இந்த பயிற்சிப்பட்டறை இடம்பெற்றிருந்தது.
இந்த பயிற்சிப்பட்டறையை முன்னெடுப்பதற்கான முழுமையான உதவிகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சும் வழங்கியிருந்தன.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எம்.எம்.மொஹமட் கருத்து தெரிவிக்கையில், 'தேசிய மட்டத்தில் இந்த 'விபத்துக்கு தயாராக இருத்தல்' திட்டமானது அனர்த்தம் ஒன்று தொடர்பில் முன்கூட்டியே தயாரான நிலையில் இருப்பதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இலங்கை ஒரு தீவு என்பதால் இந்த 'விபத்துக்கு தயாராக இருத்தல்' திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும். தேசிய மட்டத்தில் அனர்த்தம் ஒன்று நிகழும் சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளிலிருந்து உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு அதிகளவு விமான நிலையங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். 'விபத்துக்கு தயாராக இருத்தல்' பயிற்சிப்பட்டறைகளின் ஊடாக DHL-UNDP ஆகியவற்றின் அனுபவத்தை பெற்றுக் கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம், இதன் மூலம் எமது விமான நிலையங்களை எந்த விதமான அனர்த்தங்களின் போதும் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் பேண முடியும்' என்றார்.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கலாநிதி. ரி.ஆர்.சி. ருபேரு கருத்து தெரிவிக்கையில், 'அனர்த்தங்கள் ஏற்படும் போது, அவற்றை நிர்வகிப்பது மற்றும் மீள்வதில் விமான நிலையங்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. முன்கூட்டியே தயாராக இருப்பதன் மூலமாக தேசிய மட்டத்தில் அனர்த்தங்கள் ஏற்படும் போது அவற்றை சுமூகமான முறையில் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கும். DHL-UNDP ஒன்றிணைவின் மூலமாக, இலங்கையை சேர்ந்தவர்களுக்கு ஏனைய நாடுகளில் இடம்பெற்ற நிகழ்வுகளின் உதாரணங்களை அறிந்து தம்மை தயார்ப்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும். அனர்த்த நிலைமைகளின் போது துரிதமாக செயலாற்றும் எமது அதிகாரிகளுக்கு இந்த பயிற்சிப்பட்டறை ஏற்புடையதாக அமைந்திருக்கும். எமது விமான நிலையங்களை அனர்த்த நிலைமைகளின் போது செயலாற்றக்கூடிய வகையில் தயார் நிலையில் வைத்திருப்பது தொடர்பில் DHL மற்றும் UNDP ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்' என்றார்,
2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்த 'விபத்துக்கு தயாராக இருத்தல்' எனும் திட்டம், DHL மற்றும் UNDP ஆகியவற்றின் மூலம் இணைந்து முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவற்றின் நோக்கம், அனர்த்தங்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு அருகாமையில் காணப்படும் விமான நிலையங்களை துரிதமாக இயங்கக்கூடிய வகையில ;தயார் நிலையில் வைத்திருப்பதாக அமைந்துள்ளது.
DHL இன் மனிதாபிமான செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் கிறிஸ் வீக்ஸ் கருத்து தெரிவிக்கையில், 'கடந்த ஆண்டுகளில் நாம் பல அனர்த்த நிவாரண நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். இதன் போது சீராக இயங்கக்கூடிய விமான நிலையத்தின் செயற்பாடுகளின் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொள்ள பெரிதும் உதவும் வகையில் அமைந்துள்ளன என்பதை அறிந்து கொண்டோம். பெருமளவான நிவாரண பொருட்கள் உள்வருகின்றமை காரணமாக, விமான நிலையங்கள் பெருமளவில் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள நேரிடும். இதன் காரணமாக உயிர்களை காக்க வேண்டிய செயற்பாடுகள் கூட தாமதமடையலாம். 'விபத்துக்கு தயாராக இருத்தல்' என்பது நாம் அனர்த்த நிலைகளின் போது எவ்வாறு சரக்குகளை கையாள்கிறோம் எனும் அனுபவத்தை உள்நாட்டவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது' என்றார்.