2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பொலன்நறுவை பாடசாலை மாணவர்களுக்கு கண்ணாடிகளை வழங்கிய 99X Technology

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 15 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


மனித குலம் தற்போது எதிர்நோக்கி வரும் பாரதூரமான நோய் நிலைகளுக்கும், சுகாதார பிரச்சனைகளுக்கும் மத்தியில், மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் காணப்படுகின்ற போதிலும், உலக சனத்தொகையில் 300 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வை குறைபாட்டுக்கு சீர் செய்யும் கண்ணாடி வில்லை ஒன்றை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.
 
இலங்கையில் மட்டும் சுமார் 800,000 பேர் வரை பார்வை குறைபாட்டின் காரணமாக அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு முறையான கண்ணாடி வில்லைகளை கொள்வனவு செய்து கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படவில்லை. இதன் சாதாரண விலை 3000 – 5000 ரூபாவாக அமைந்திருக்கும். அரசாங்கத்தின் மூலமாகவும் கண்பார்வை குறைபாட்டுக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படுவதில்லை.  
 
போதியளவு பார்வை இன்மை காரணமாக தமது நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெருமளவு சிரமத்தை எதிர்கொள்ளும் நபர்களுக்கு உதவும் வகையில் 99X Technology சமூக பொறுப்புணர்வு மையம் 'So Others May See’ (SOMS) எனும் இலாபநோக்கற்ற பார்வை பராமரிப்பு திட்டத்துடன் கைகோர்த்து, இலவசமான முறையில் மூக்குக்கண்ணாடிகளை விநியோகித்திருந்தது. 
 
2013 ஆம் ஆண்டில் கம்பனியின் ஊழியர்கள் 100க்கும் அதிகமான மூக்குக்கண்ணாடிகளை கொள்வனவு செய்வதற்காக நிறுவனத்தின் ஊழியர்கள் நன்கொடைகளை வழங்கியிருந்தனர். இதன் மூலம் மொனராகல பகுதியில் இடம்பெற்ற கண்சிகிச்சை முகாம்களின் போது பார்வைகுறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையில் பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது.
 
இந்த ஆண்டும் கம்பனி (SOMS) எனும் இலாபநோக்கற்ற பார்வை பராமரிப்பு அமைப்புடன் இணைந்து, பொலன்நறுவை மாவட்டத்தைச் சேர்ந்த வசதிகள் குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளை பகிர்ந்தளிக்க முன்வந்துள்ளது. இதற்காக 99X Technology இன் ஊழியர்களும், நண்பர்களும் தமது பங்களிப்புகளை வழங்கியிருந்தனர். கம்பனியின் வாடிக்கையாளர்களும் இந்த திட்டம் குறித்து கேள்வியுற்று தமது பங்களிப்புகளை வழங்க முன்வந்திருந்தனர்.
 
நோர்வேயைச் சேர்ந்த SuperOffice AS இன் அணியினர், கொழும்பில் அமைந்துள்ள 99X Technology தலைமையகத்துக்கு விஜயம் செய்திருந்த போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கும் நிறுவனத்தின் செயற்பாடுகளை அவதானித்துவிட்டு, தமது நாட்டுக்கு திரும்பிய பின்னர், 'எமது இலங்கை விஜயத்தின் போது, இலங்கை அணியினரின் ஏனையவர்களுக்கு உதவி புரியும் செயற்திட்டத்தை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. கண்ணாடிகளை கொள்வனவு செய்யும் நற்காரியத்துக்காக நாமும் நோர்வேயில் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எமது இலக்கு 70,000 ரூபாவை சேகரிப்பதாகும். இந்த பணத்தை நாம் உங்களுக்கு அனுப்பி வைப்போம்' என குறிப்பிட்டிருந்தனர்.
 
புதிய, மூக்குக் கண்ணாடி ஒன்று 750 ரூபா வரையில் அமைந்திருக்கும். இது உத்தரவாதத்தையும் கொண்டிருக்கும். இவை அனைத்தும் SOMS அமைப்பின் மூலம் வழங்கப்படும். 99X Technology ஐச் சேர்ந்த அணி ஒன்று, பொலன்நறுவையிலிருந்து 40 கிலோ மீற்றர்கள் அப்பாலுள்ள அரலகன்வில பகுதிக்கு கடந்த ஜூன் மாதம் பயணம் செய்து, லீலரத்ன மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கண்சிகிச்சை முகாமில் பங்கேற்றிருந்தனர்.
 
ஆசிரியர்கள் பயிற்றுவிப்பு நிகழ்ச்சித் திட்டமும் ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது. இதன் போது பார்வை குறைபாட்டை கொண்டுள்ள மாணவர்களை இனங்காணும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. முதல் கட்ட தெரிவின் போது சுமார் 20 பாடசாலைகளைச் சேர்ந்த 240 மாணவர்கள் இந்த பிரதேசத்திலிருந்து சிகிச்சை முகாமில் பங்கேற்பதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் தமது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் சென்றிருந்தனர். போதியளவு வசதியின்மை காரணமாக, மிகுந்த சிரமத்துடன், இவர்கள் இந்த பகுதியை அடைந்திருந்தனர்.
 
சில மாணவர்களுக்கு புதிய மூக்குக்கண்ணாடிகள் வாங்குமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்ததுடன், சிலர் பொலன்நறுவை வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டிருந்தனர். ஏனையோருக்கு பார்வை குறைபாட்டை சீர் செய்வதற்காக கண் பயிற்சிகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த திட்டத்தில் பங்குபற்றி உதவியிருந்த அனைவருக்கும் இது ஒரு பயனுள்ள திட்டமாக அமைந்திருந்தது. 
 
99X Technology என்பது மென்பொருள் வடிவமைப்பு பொறியியல் நிறுவனமாகும், இது உயர் முனையுடைய மென்பொருள் அபிவிருத்தி சேவைகளை சுயாதீன மென்பொருள் வழங்குநர்களுக்கு வழங்கும் வகையில் தனது சேவைகளை முன்னெடுத்து வருகிறது. நிறுவனத்தின் பிரதான சந்தை ஐரோப்பா பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இலங்கையில் தலைமையகத்தை கொண்டுள்ள இந்நிறுவனம், நோர்வேயின், ஒஸ்லோவில் காரியாலயத்தை கொண்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட வர்த்தக தீர்வுகளை வடிவமைத்து வழங்கியுள்ள அனுபவத்தை கொண்டுள்ளது. இலங்கையில் தொழில் புரிவதற்கு சிறந்த கம்பனிகளில் ஒன்றாக 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் Great Place To Work Institute மூலம் தரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X