.jpg)
- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்
(ச.சேகர்)
கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக பங்குச்சந்தை கொடுக்கல் - வாங்கல்கள் உயர்வடைந்து காணப்பட்டதை தொடர்ந்து, இந்த வாரம் பங்குச்சந்தை கொடுக்கல் - வாங்கல்கள் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் சரிவடைந்த நிலையில் பதிவாகியிருந்தன. சந்தை சீராக்கத்தின் காரணமாக பிரதான சுட்டிகள் மறை பெறுமதிகளை பதிவு செய்திருந்ததாக பங்கு முகவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இலங்கையின் வட்டி வீதங்கள் தொடர்ந்தும் குறைவான நிலையில் பேணப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்ததை தொடர்ந்து, தொடர்ந்தும் பங்குச்சந்தை கவர்ச்சிகரமானதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,307.43 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3550.47 ஆகவும் அமைந்திருந்தன.
ஜூன் 03ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 4,855,541,001 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 38,954 பங்கு கொடுக்கல் - வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் - வாங்கல்கள் 37,168 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் - வாங்கல்கள் 1,786 ஆகவும் பதிவாகியிருந்தன.
கடந்தவார கொடுக்கல் - வாங்கல் நடவடிக்கைகளில் சுவதேஷி, அபான்ஸ், களனி கேபிள்ஸ், கெல்சி மற்றும் களனி டயர்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
நேஷன் லங்கா (வாக்குரிமை), பிசி பார்மா, மல்டிஃபினான்ஸ், சிலோன் பிரின்டர்ஸ் மற்றும் பிசிஎச் ஹோல்டிங்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 46,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 42,000 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 128.00 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 200.08 ஆக காணப்பட்டிருந்தது.