
தமது வியாபார பங்காளர்களை கௌரவிக்கும் நோக்கில் 'முதுபலச' திட்டத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு யுனிலீவர் நிறுவனம் அண்மையில் பெறுமதியான புலமைப்பரிசில்களை வழங்கியது. இதன்போது யுனிலீவர் நிறுவனத்தின் மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ, மாணவியருக்கு தலா 1 இலட்சம் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
தமது உற்பத்திகளின் விற்பனை நடவடிக்கையில் பாரிய பங்களிப்பினை செலுத்தும் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளின் பங்களிப்புடன் 2003ஆம் ஆண்டு 'முது பலச' திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இத் திட்டத்தில் 1000இற்கும் அதிகமானவர்கள் அங்கத்தவர்களாக இருப்பதுடன், அவர்களது பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யுனிலீவர் நிறுவனம் இப் புலமைப் பரிசில்களை வழங்கியுள்ளது.
2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் புலமைப்பரிசில் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த 'முது பலச' திட்டத்தின் திட்ட முகாமையாளர் ஷாலிக அலஹகோன், 'எம்முடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளை கௌரவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த முது பலச திட்டத்தின் ஊடாக அவர்களது வியாபாரத்திற்கு ஆதரவு வழங்குவது மாத்திரமன்றி, அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் நலனிலும் அக்கறை செலுத்துகிறது. தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை புகட்ட வேண்டும் என்பது அனைத்து பெற்றோரினதும் எதிர்பார்ப்பாகும். அதனை பூர்த்தி செய்யும் வகையில் அறிவு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் சமுதாயத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்துவதே இச் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கின்றோம்' என தெரிவித்தார்.
யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் இத் திட்டத்தின் ஊடாக தனது பிள்ளையின் சிறந்த எதிர்காலத்திற்கு பங்களிப்பு வழங்கப்படுகிறது என புலமைப்பரிசில்களை பெற்ற மாணவ, மாணவியரிடையே அதிகூடிய புள்ளிகளை பெற்ற பெலிஅத்த பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட அசிர நிமேஷ மாணவனின் தாயார் கே.ஜி.பத்மலதா தெரிவித்தார். மேலும் அவர், 'முது பலச திட்டமானது எமது வாழ்விற்கு மிகப்பெரிய சக்தியை வழங்குகிறது. இத் திட்டத்தின் மூலம் எனது பிள்ளையின் கல்விக்கு வழங்கப்படும் பங்களிப்பு குறித்து நான் பெருமையடைவதுடன், இத்தகைய சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஊடாக எமது நம்பிக்கை மேலும் கட்டியெழுப்பப்படுகிறது' என தெரிவித்தார்.
முது பலச திட்டத்தின் மூலம் பிள்ளைகளின் கல்விக்கு மாத்திரமன்றி, கலை திறமைகளுக்கும் ஆதரவு வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் மூலம் சித்திரம் வரையும் ஆற்றலுள்ள பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் சித்திரப் போட்டிகள் மற்றும் சித்திரக் கண்காட்சிகள் போன்றன முன்னெடுக்கப்படுகின்றன.