
பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டின் வர்த்தக பேரவையின் பெண்கள் வர்த்தக அணியொன்று நேற்று (11) பிற்பகல் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்தது.
இந்த சந்திப்பில் பொதுநலவாய மாநாட்டின் வர்த்தக பேரவையின் பெண்கள் வர்த்தக அணியின் சார்பில் வர்த்தகம் மற்றும் தொழில்சார் பெண்களின் சர்வதேச வர்த்தக கூட்டமைப்பின் தலைவி ப்ரெடா மிரிக்லிக்ஸ் மற்றும் பொதுநலவாய மாநாட்டின் வர்த்தக பேரவையின் அதிகாரிகள், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
குறிப்பாக இவ் வர்த்தக பேரவையின் பெண்கள் வர்த்தக அணியானது இலங்கையில் வர்த்தகம் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பெண்கள் எதிர்கொள்ளும் சாவல்கள் மற்றும் பெண்கள் தொழில் முனைவோருக்கு புதுமையான அறிவு, எண்ணங்கள் உள்ளடக்கிய ஆதரவு மற்றும் அணுகக்கூடிய நிதி உதவிகள் உட்பட யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களின் பொருளாதார ரீதியான ஆதரவுகளினை பெற்றக்கொள்வதற்கும் பக்கப்பலமாக செயற்படவுள்ளது என வர்த்தகம் மற்றும் தொழில்சார் பெண்களின் சர்வதேச வர்த்தக கூட்டமைப்பின் தலைவி ப்ரெடா மிரிக்லிக்ஸ் தெரிவித்தார்.
இது தவிர அரசியல் பெண்களின் ஈடுபாடு, பால் நிலை சமத்துவம் உட்பட பெண்கள் நிலை மற்றும் பால் சமத்துவம் இருப்பினும் தீர்மானம் எடுப்பதற்கான நிலை மற்றும் அரசியலில் பெண்களின் பங்காற்றல் தொடர்பான இதர விடயங்களும் கவனத்திற் கொள்ளப்படும். பொருளாதார சமத்துவ கல்வி என்பன இங்கு முக்கியமான விடயங்கள். ஆனால் உலகில் பால் நிலை சமத்துவம் வேண்டி நெடுந்தூரப் பயணமொன்றை மேற்கொள்ளவேண்டியருக்கிறது எனவும் ப்ரெடா தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் மத்தியில் அமைச்சர் ரிஷாட் தெரிவித்ததாவது:
இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பெண்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்கிலான தொழில்சார் உதவிகள் தற்போது தேவைபாடாகவுள்ளது. யுத்தம் வட மாகாணத்தில் மாத்திரம் 50,000இற்கும் மேற்பட்ட விதவைகளை விட்டுச் சென்றுள்ளது. அவர்களுடைய திறனைக் கட்டியெழுப்புவதற்கும் இவ்விதவைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குமான தெளிவானதொரு கொள்கைக்கான தேவையொன்றுள்ளது. இவ் விதவைகள், பொருளாரார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். எனவே, அவர்களது தற்போதைய துயர் நிலையைத் துடைப்பதற்கு வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டங்களையும் ஏனைய தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான பொறுப்பினை வர்த்தக பேரவையின் பெண்கள் வர்த்தக அணி விரைவாகவும் வினைத் திறனோடும் ஏற்றுச் செயற்பட வேண்டும் என எனது எதிர்பார்ப்பு.
இதேவேளை பிரபல வர்த்தகர்கள் இப்பேரவையில் கலந்து கொள்ளுவதால் இலங்கை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பும் இதன்போது பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
