
இலங்கையின் கிராமிய வாழ்க்கைமுறை, பாரம்பரிய கலைகள் மற்றும் கைப்பொருள் தொழிற்துறை போன்றவற்றை தத்ரூபமாக சித்தரிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட 'அபே கம' (எங்கள் கிராமம்) அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. திவி நெகும செயற்திட்டத்தின் தாபகரான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டல்களின் கீழ் 'அபே கம' நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பண்டைய இராஜதானியமாக விளங்கிய ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையை கேந்திர மையமாக கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள 'அபே கம' மக்களின் கைகளுக்கு ஒப்படைக்கப்பட்டது.
இத் திறப்பு விழாவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தாவர பூங்கா மற்றும் பொது விநோத செயற்பாடுகளுக்கான அமைச்சர் ஜயரத்ன ஹேரத், பாரம்பரிய தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மற்றும் தேசிய பாரம்பரியத்துக்கான அமைச்சர் ஜகத் பாலசூரிய ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையின் கிராமிய மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த அம்சங்களைத் தத்ரூபமாக காட்சிப்படுத்தும் வகையில் 'அபே கம' நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள சகல விடயங்களையும் இங்கு அனுபவிக்கலாம். 36 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 'அபே கமவினுள் ஓலைகளால் வேயப்பட்ட வீடுகள், மர வீடுகள், வயல்வெளிகள், மடைவாய், dagoba, பொழுதுபோக்கு பிரதேசம் மற்றும் புனித பிரதேசம், தானிய களஞ்சியம், கதிரடிக்கும் களம் (the threshing floor) போன்றன அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக, இக் கிராமத்தினுள் பல கைப்பொருட்கள் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மட்பாண்டங்கள், பித்தளை வேலைப்பாடுகள், பெற்றிக், மர வேலைப்பாடுகள், கைத்தறி போன்ற துறைகள் குறித்த நேரடியான அனுபவத்தை பார்வையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இங்கு வரும் பார்வையாளர்களை கவரும் வகையில் சிறிய மிருகக்காட்சிசாலை மற்றும் பறவைகள் பார்வையிடும் பிரதேசம் போன்றன அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு சர்வதேச தரத்துடனான உணவகம், கைப்பொருள் அருங்காட்சியகம், கிராமப் பாடல்கள் நிலையம் மற்றும் லக்சல காட்சியறை போன்றனவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் மரபுரீதியான கலை மற்றும் கைப்பொருள் துறை குறித்து லக்சல நிறுவனம் கொண்டுள்ள நீண்ட அனுபவம் காரணமாக இக் கிராமத்தின் நிர்வாகத்தை லக்சல முன்னெடுக்கவுள்ளது. 'அபே கம' செயற்பாடுகள் குறித்து லக்சல நிறுவனத்தின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் கொஸ்வத்த கருத்து தெரிவிக்கையில், 'உள்நாட்டு கைத்தொழிற்துறையுடன் நீண்டகால தொடர்பினை கொண்ட இலங்கையின் ஒரேயொரு அன்பளிப்பு மற்றும் நினைவுச்சுவடுகள் நிறுவனம் லக்சல ஆகும். இதன் மூலம் பல்வேறு துறை சார்ந்த தேசிய கைவினைஞர்களின் மரபுரீதியான வாழ்க்கைமுறைகள் குறித்த ஆழமான அறிவினையும், அனுபவத்தையும் நாம் பெற்றுள்ளோம். Museum Gallery Café மற்றும் பின்னவல காட்சியறைகள் மூலம் பெறப்பட்ட சாதகமான பிரதிபலன்களை அபே கம ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றோம்' என தெரிவித்தார்.
அபே கமவின் திறப்பு விழாவைத் தொடர்ந்து, கொழும்புக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளை கவருவதே இதன் முக்கிய எதிர்பார்ப்பாகும். கொழும்பு நகரின் பிரதான ஹோட்டல்களிலிருந்து 20 நிமிடங்களிலும், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 45 நிமிடங்களிலும் அபே கமவினை வந்தடைய முடியும்.
இலங்கை கிராமங்களின் இயற்கை காட்சிகள் உள்ளிட்ட சகல அம்சங்களையும் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ள அபே கமவானது நிச்சயமாக சுற்றுலாப்பயணிகளை கவரும் இடமாக அமையும் என்பது திண்ணம்!
