.JPG)
இலங்கையின் முன்னணி ஆடை விற்பனையகமான ஃபஷன் பக், அண்மையில் இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி கல்வியகத்தின் (SLITAD) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் அபிவிருத்தி விருதுகள் வழங்கும் நிகழ்வில், வெண்கல விருதை தனதாக்கிக் கொண்டது. நாடு முழுவதும் 17 விற்பனையகங்களையும், 1200க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் கொண்டு ஃபஷன் பக் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு, நவம்பர் மாதம் 22ஆம் திகதி வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தமது மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் வெற்றி பெற்ற வர்த்தகத்துறைசார் நிபுணர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.
சர்வதேச தொழிலாளர் ஒன்றியத்தின் (ILO) இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான வதிவிட பணிப்பாளர் டொங்க்லின் லீ இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி கல்வியகத்தின் (SLITAD) தலைவர் ஈஸ்ட்மன் நாரங்கொடவும் இந்த நிகழ்வில் விசேட அதிதியாக பங்கேற்றிருந்தார். மேலும் மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2013 ஏற்பாட்டு குழுவின் தலைவரான அஜித் போபிட்டியவும் பங்கேற்றிருந்தார்.
இந்த விருது வழங்கும் நிகழ்வு பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் செயலமர்வுடன் ஆரம்பமாகியிருந்தது. இந்த செயலமர்வில் ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் உப தலைவர் சந்திரா ஃஷாப்ட்டர், சிங்கர் ஸ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ், பிரின்ட் கெயார் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான கே.ஆர்.ரவீந்திரன் மற்றும் சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முகாமைத்துவ பணிப்பாளருமான ஆர்.ராஜகோபாலன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
LOLC, ஜனசக்தி இன்சூரன்ஸ் (பிஎல்சி), யூனியன் அஷ்யூரன்ஸ், செலான் வங்கி, பிரின்ட் கெயார், அக்சஸ் என்ஜினியரிங், சிங்கர் ஸ்ரீலங்கா, சிடிபி, களனி கேபள்ஸ் மற்றும் சியெட் ஆகிய நிறுவனங்கள் விருதுகளை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஃபஷன் பக் நிறுவனத்தின் மனித வள அபிவிருத்தி முகாமையாளர் நாமல் ஏக்கநாயக்க கருத்து தெரிவிக்கையில், 'ஃபஷன் பக்கில், எமது ஊழியர்களின் செயற்பாட்டை ஊக்குவித்து, கௌரவமளிக்கும் செயற்பாடுகளுக்கு நாம் அதிகம் முக்கியத்துவம் வழங்குகிறோம். இந்த பெருமைக்குரிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் எமது நிறுவனம் கௌரவிக்கப்பட்டுள்ளமையானது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருதின் மூலம் இலங்கையில் சிறந்த மனித வள அபிவிருத்தி செயற்பாடுகளை பின்பற்றும் நிறுவனங்களில் ஒன்றாக ஃபஷன் பக் திகழ்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றார்.
இந்த மக்கள் அபிவிருத்தி விருதுக்காக 10 கொள்கை ரீதியிலான மதிப்பீட்டு முறைகள் முன்வைக்கப்பட்டு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் அனுபவம் வாய்ந்த மதிப்பீட்டாளர்களின் மூலம் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் சிறந்த மக்கள் தொடர்பாடல்களை பின்பற்றுவது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதில், வர்த்தக கொள்கையிடல், கற்கை மற்றும் அபிவிருத்தி கொள்கை, மக்கள் முகாமைத்துவ கொள்கை, தலைமைத்துவம் மற்றும் நிர்வாக கொள்கை, முகாமைத்துவ வினைத்திறன், கௌரவிப்பு மற்றும் விருதுகள், பங்குபற்றல் மற்றும் வலுச்சேர்த்தல், கற்றல் மற்றும் அபிவிருத்தி, தொடர்ச்சியான அபிவிருத்தி போன்ற விடயங்கள் உள்ளடங்கியிருந்தன.
1998ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி கல்வியகம், இலங்கையின் நிறுவனங்களிடையே மனித வள அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னேற்றும் வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
1994ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக 4 பங்காளர்களுடன் ஆரம்பித்திருந்த ஃபஷன் பக், ஆரம்பத்தில் 15 ஊழியர்களை மட்டுமே கொண்டிருந்தது. இன்று 17 காட்சியறைகளை கொண்டுள்ளதுடன், இவற்றில் 1200க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் முன்னணி ஆடை அலங்கார விற்பனையகமாக திகழும் இந்த நிறுவனம், 'வாழ்க்கைக்கு புது வடிவம்' எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.