
இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சந்தையில் மைக்ரோசொப்டின் பங்களிப்பு இன்றியமையாததெனவும் நாட்டின் தொழில்நுட்ப ஸ்திரத்தன்மைக்கு அவர்களது பங்களிப்பு முக்கியமானது என்றும் இன்போடெல் நிறுவனத்தின் தலைவர் சிந்;தக்க விஜேவிக்கிரம தெரிவிக்கின்றார்.
'மைக்ரோசொப்டின்றி தகவல் மற்றும் தொலைத்தொடர்பை நாட்டில் எதிர்பார்த்திருக்க முடியாது. நாட்டின் முக்கிய செயற்பாடுகளுக்கு மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியமானது. அத்துடன் ஏனைய போட்டியாளர்கள் நாட்டுக்கு வந்தபோதிலும் சந்தையில் முன்னோடிகளாக இந்நிறுவனம் திகழ்கின்றது. மைக்ரோசொப்ட் இல்லாதிருந்திருந்தால் நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டிருக்க முடியாது' என கொழும்பு கருத்தரங்கு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற 12வது இன்போடெல் கண்காட்சியில் கருத்து தெரிவித்த சிந்தக்க விஜேவிக்கிரம குறிப்பிட்டார்.
'தனியுரிமை மென்பொருள்களின் விலைகள் சில விவாதங்களை முன்வைக்கும். எனினும் ஒப்பன் சோஷ் இதற்கு தீர்வல்ல. ஓப்பன் சோஷ் இலகுவாக வாங்கலாம். விலை பிரச்சினையல்ல எனினும் மென்பொருளின் ஸ்திரத்தன்மையே முக்கியமானது. நான் கடந்த 25 வருடங்களாக விண்டோஸ் பயன்படுத்துகின்றேன். அதனுடைய ஸ்திரத்தன்மை, நம்பகத்தன்மை தொடர்பில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது' என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த கண்காட்சியில் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் விண்டோஸ் தொலைபேசிகளுக்கு தூதுவர்களாக செயற்பட்டனர். அத்துடன் மைக்ரோசொப்ட் மென்பொருள்களின் பயன்பாடு குறித்து தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
'நாம் பாடசாலையில் முதலில் பயன்படுத்தியது விண்டோஸ் கணினிகளையே. நான் சிறுவயது முதல் விண்டோஸ் மென்பொருள்களை பயன்படுத்துகின்றேன். இவற்றை பயன்படுத்துவது மிக இலகுவானது. அத்துடன் நான் ஒப்பன் சோஷ் தொடர்பாக பல்கலைக்கழகத்தில் பயின்றேன். எனினும் அந்த மென்பொருள் தொடர்பில் நான் திருப்தியடையாதவனாகவே இருக்கின்றேன்' என சபரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமினேஷ் என்ற மாணவர் தெரிவித்தார்.
இவ்வருடம் இன்போடெல் கண்காட்சி உலக உச்சிமாநாட்டு விருது வழங்கும் வைபவத்துக்கு இணையாகவே இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (இக்டா) ஏற்பாடு செய்திருந்தது. இந்த கண்காட்சியில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆறு முக்கிய துறைகளான விவசாயம், தகவல், கல்வி, போக்குவரத்து, மருத்துவ விஞ்ஞானம், சுற்றுலாத்துறை ஆகிய துறைகளின் வளர்ச்சியை மேற்கொள்வது எவ்வாறு என்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.