2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

லங்கா ஹொஸ்பிட்டல்ஸில் புதிய இருதய சத்திர சிகிச்சை அறிமுகம்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 17 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இருதய நுரையீரல் மாற்றீடுகள் மற்றும் ஆகக்குறைந்த துவாரங்களுடனான இருதய சத்திர சிகிச்சைகள் தற்போது நாட்டின் முன்னணி இருதய சிகிச்சை நிலையத்தில்


இலங்கையர்களுக்கு உயர்தரம் வாய்ந்த, நவீன சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குவதை தனது பிரதான நோக்கமாக கொண்டியங்கும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், இலங்கையில் முதல் தடவையாக இருதய நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சைகள் மற்றும் குறைந்தளவிலான துவாரங்களுடனான இருதய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் வசதிகளை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கையில் முதல் தடவையாக இருதய நுரையீரல் மாற்றீட்டு சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் வகையில், அதற்கு அவசியமான நவீன மருத்துவ சாதனங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. புதிய சத்திர சிகிச்சை நிலையங்கள் நிறுவுகையுடன், இந்த சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு அவசியமான மெருகேற்றங்களையும் வைத்தியசாலை மேற்கொண்டுள்ளது.

சுகாதார பராமரிப்பு நிறுவனங்களுக்கு தரச்சான்றிதழ்களை வழங்கும் உலகின் மாபெரும் சான்றளிக்கும் JCI அமைப்பிடமிருந்து, தனது செயற்பாடுகளுக்கு தரச்சான்றிதழை பெற்றுக் கொள்ளும் முனைப்பிலமைந்த செயற்பாடுகளை வைத்தியசாலை மேற்கொண்ட வண்ணமுள்ளது. இந்த தரச்சான்றிதழ் கிடைக்கும் பட்சத்தில், சர்வதேச தரம் வாய்ந்த வைத்திய சேவை மேலும் உறுதி செய்யப்படும்;.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சத்திர சிகிச்சைகள் தொடர்பாக லங்கா ஹொஸ்பிட்டல்சின் பிரதம இருதய சத்திர சிகிச்சை நிபுணரும் ஆலோசகருமான வைத்தியர். ஜி.காந்திஜி கருத்து தெரிவிக்கையில், 'ஆகக்குறைந்த துவாரங்களுடனான சத்திர சிகிச்சை முறை என்பது, ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளில் புதிதாக பின்பற்றப்படும் சத்திர சிகிச்சை முறையாக அமைந்துள்ளது. உயர்ந்ததரத்துடன், பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆகக்குறைந்த துவாரங்களுடனான சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் போது, குறைந்தளவிலான வலிநோயாளருக்கு ஏற்படும், அத்துடன் நோயாளர்களுக்கு விரைவாக குணமடைந்துவிட முடிவதுடன், திறந்த இருதய மாற்று சத்திர சிகிச்சைகளைபோலல்லாமல், நோயாளர்களுக்கு தமது நாளாந்த செயற்பாடுகளை வழமை போல முன்னெடுத்துச் செல்லமுடியும். இந்த புதிய ஆகக்குறைந்த துவாரங்களுடனான சத்திர சிகிச்சை முறையின் மூலம் நபர் ஒருவரின் உடலில் ஆகக்குறைந்தளவு துளைஃகாயம் ஏற்படுத்தப்படுவதால் உடலின் வெளிப்புறத் தோற்றத்திலும் பாரியளவு பாதிப்பை ஏற்படுத்தாது. இதன் காரணமாக, பலரால் இந்தமுறை,அதிகளவில் விரும்பப்படுகிறது' என்றார்.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட வைத்தியர். ஜி.காந்திஜி, பேராதனை பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பை தொடர்ந்திருந்தார். பின்னர் தமது உயர் கல்வி நடவடிக்கைகளுக்காகவும், இருதய சத்திர சிகிச்சைகளை முன்னெடுப்பது தொடர்பில் பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்காகவும், நியுசிலாந்தின் வெலிங்டன் பொது வைத்தியசாலையிலும், ஹொக்லாந்து நகரில் அமைந்துள்ள சிறுவர் இருதய சத்திர சிகிச்சை வைத்தியசாலைகளில் தன் சேவையை தொடர்ந்திருந்தார். இலங்கைக்கு திரும்பியிருந்த இவர், கண்டி பொது வைத்தியசாலையில் இருதய மற்றும் மார்பு சத்திர சிகிச்சைகளை முன்னெடுத்திருந்தார்.

கண்டி வைத்தியசாலையில் பணியாற்றிய காலப் பகுதியில், இவர் மயக்க மருந்து வழங்காமல் முன்னெடுத்திருந்த முதலாவது இருதய சத்திர சிகிச்சையை மேற்கொண்டிருந்தார். இதனைதொடர்ந்து, இருதய நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சைகளை முன்னெடுப்பது தொடர்பான பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் வகையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வைத்தியர் காந்திஜி சென்றிருந்தார். இந்த பயிற்சிகளை பூர்த்தி செய்த பின்னர் நாடு திரும்பிய இவர், லங்கா ஹொஸ்பிட்டல்சுடன் முழு நேரமாக இணைந்து கொண்டார். இந்த அனுவங்களையும், அறிவுத்திறனையும் பயன்படுத்தி, லங்கா ஹொஸ்பிட்டல்சின் இருதய சத்திர சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முன்னெடுத்து வருகிறார்.

இந்த புதிய சத்திர சிகிச்சைகள் அறிமுகம் தொடர்பாக லங்கா ஹொஸ்பிட்டல்சின் மருத்துவ சேவைகளுக்கான பதில் பணிப்பாளர் வைத்தியர். தியாகராஜா இறைவன் கருத்து வெளியிடுகையில், 'இது வரை காலமும் இலங்கையர்களுக்கு இந்த நவீன சத்திர சிகிச்சையை இலங்கையில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் தடவையாக இந்த நவீன சத்திர சிகிச்சை முறைகளை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் இலங்கையர்களின் நலன் கருதி அறிமுகம் செய்துள்ளது. விசேடமாக நாட்டின் வடக்கு கிழக்கு மற்றும் சகல பாகங்களிலும் வசிக்கும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் உரையாட முடியாதவர்கள் கூட, லங்கா ஹொஸ்பிட்டல்சில் எவ்விதமான மொழிப் பிரச்சனைகளுக்கும் முகங்கொடுக்காமல் தமக்குரிய அல்லது தமது அன்புக்குரியவர்களின் இருதயம் தொடர்பான சத்திர சிகிச்சைகளை தற்போது மேற்கொள்ள முடியும்.

இதற்கான சகல வசதிகளையும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் ஏற்படுத்தியுள்ளது. குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகளை வழங்குவது எனும் வைத்தியசாலையின் தலைவரின் நோக்கத்துக்கு அமைவாக இங்கு மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இலங்கையின் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு தமது சகலவிதமான மருத்துவ தேவைகளையும் உள்நாட்டிலேயே பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு முன்னணி வைத்தியசாலையாக லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் திகழ்கிறது' என்றார்.

இருதய நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சைகள் என்பது மிகவும் வெகுமதி வாய்ந்த சிகிச்சை முறைகளாக அமைந்துள்ளன. இலங்கையில் இதுவரை காலமும் இந்த முறை பின்பற்றப்படவில்லை. இந்த சத்திர சிகிச்சையானது சாதாரணமாக நோயாளி ஒருவரின் இருதயம் செயலிழக்கும் இறுதி தறுவாயில் முன்னெடுக்கப்படுகிறது. அதாவது குறித்த நபரின் ஆயுட்காலம் ஒரு சில மாதங்களாக அமைந்திருக்கும். இருதய மாற்று சத்திர சிகிச்சைகளை வழங்குவதன் மூலம் தமது வாழ்க்கை தொடர்பாக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திகழும் நோயாளிகள் தம் வாழ்வில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க முடிகிறது. இந்த சத்திர சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான தளபாட வசதிகளை நிறுவுவதில் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் இருதய நிலையம் ஈடுபட்டுள்ளது.

லங்கா ஹொஸ்பிட்டல்சின் நோக்கம் தொடர்பாக வைத்தியசாலையின் பிரதம நிறைவேற்று அதிகாரி லகித் பீரிஸ் கருத்து வெளியிடுகையில், 'லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் இருதய நிலையத்தில், நாம் உயர்தரம் வாய்ந்த சேவைகளை குறைந்த செலவில் நோயாளிகளுக்கு வழங்க எம்மை அர்ப்பணித்துள்ளோம். எமது இருதய சிகிச்சை நிலையத்தில் காணப்படும் உயர்ந்த வசதிகள், நாட்டின் வேறெந்த வைத்தியசாலையிலும் காணப்படுவதில்லை. அனைத்து இருதய சத்திர சிகிச்சை நிபுணர்களும் தமது சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கும் ஒரே நிலையமாக இது அமைந்துள்ளது' என்றார்.

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், சுயநினைவில் உள்ளநிலையில், சத்திர சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. (மயக்க மருந்து என்பது சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் உடலின் பகுதியில் மட்டும் வழங்கப்படும்) இலங்கையில் இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் ஒரே சத்திர சிகிச்சை நிபுணர் எனும் பெருமையை வைத்தியர். காந்திஜி கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .