2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஐந்து வருடங்களில் ஆகக்குறைந்த புரள்வு பெறுமதி பங்குச்சந்தையில் பதிவு

A.P.Mathan   / 2014 மார்ச் 18 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் நேற்றைய தினம் நேர் பெறுமதிகளில் நிறைவடைந்திருந்த போதிலும், மொத்தப்புரள்வு பெறுமதி கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவாகிய ஆகக்குறைந்த பெறுமதியை பதிவு செய்திருந்தது. இந்த பெறுமதி 90.9 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.

இறுதியாக ஆகக்குறைந்த புரள்வு பெறுமதி 2009 ஆம் ஆண்டு நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் ஏப்ரல் 30 ஆம் பதிவாகியிருந்தது. இந்த பெறுமதி நடப்பு ஆண்டின் சராசரி நாளாந்த பெறுமதியான 921.3 மில்லியன் ரூபாவில் பத்தில் ஒரு மடங்காக அமைந்திருந்தது.

சிலோன் டொபாக்கோ கம்பனி, செலிங்கோ இன்சூரன்ஸ் மற்றும் கார்சன்ஸ் கம்பர்பட்ச் பங்குகள் மீது அதிகளவு ஆர்வம் காணப்பட்டமையால் பங்குச்சந்தை நேர் பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. பரந்தளவில் சந்தைசெயற்பாடுகள் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாய் காணப்பட்டது.

வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதி துறை சந்தைப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. (தேசிய அபிவிருத்தி வங்கி பங்களிப்புடன்) இந்த துறையின் சுட்டெண் 0.96 வீத உயர்வை பதிவு செய்திருந்ததுடன், தேசிய அபிவிருத்தி வங்கி பங்கொன்றின் விலை 1.00 ரூபாவால் (0.56%) அதிகரித்;து 180.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.

உணவு, பானம் மற்றும் புகையிலை துறை என்பது சந்தைப்புரள்வு பெறுமதியில் இரண்டாவதாக அதிகளவு பங்களிப்பை செலுத்தியிருந்தது (பைரஹா ஃபார்ம்ஸ் பங்குகளின் பங்களிப்புடன்) இந்த துறையின் சுட்டெண் 0.92 வீதத்தால் அதிகரித்திருந்தது. பைரஹா ஃபார்ம்ஸ் பங்கின் விலை 0.40 ரூபாவால் (0.28%) அதிகரித்து 142.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.

கொலம்போ லான்ட் அன்ட் டிவலப்மன்ட், அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளும் மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை செலுத்தியிருந்தன. கொலம்போ லான்ட் அன்ட் டிவலப்மன்ட் பங்கொன்றின் விலை மாற்றமின்றி 35.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. அக்சஸ் என்ஜினியரிங் பங்கொன்றின் விலை 0.10 ரூபாவால் (0.45%) சரிவடைந்து 22.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை மாற்றமின்றி 19.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இதேவேளை சிமானெக்ஸ் தனது இடைக்கால பங்கிலாபத்தை பங்கொன்றுக்கு 0.50 ரூபா வீதம் அறிவித்திருந்தது.

இலங்கையின் மீது ஐ.நா போர்க்குற்ற தீர்மானமொன்றை மேற்கொள்ளக்கூடும் என்ற பீதி முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகின்றமையால், பங்குச்சந்தை நடவடிக்கைகளில் பெருமளவில் ஈடுபடுவதில் ஆர்வம் செலுத்தவில்லை என பங்கு முகவர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

பெருமளவான பிராந்திய சந்தைகளில் ஏற்பட்ட சரிவான நிலைக்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையிலான அமைதியற்ற நிலை காரணமாக அமைந்திருந்தது. எதிர்வரும் நாட்களில் நிலை முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கிறோம் என்று மற்றுமொரு முகவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X