2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

டாடா நிறுவனத்தின் பல்நோக்கு உபயோக அபிவிருத்திச் செயற்றிட்டம்

A.P.Mathan   / 2014 மே 13 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவில் மிக விரைவாக வளர்ச்சிகண்டுவருகின்ற அசைவற்ற ஆதன இருப்பு அபிவிருத்தி நிறுவனமாகவும், Tata Sons கூட்டுநிறுவனங்களின் முற்றுமுழுதான உரிமத்தின் கீழான ஒரு துணை நிறுவனமாகவும் திகழ்கின்ற Tata Housing, இலங்கையின் கொழும்பு நகரில் பல்நோக்கு பயன்பாட்டிற்கான குடியிருப்புச் செயற்றிட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது. இலங்கை நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்ற இச்செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கொழும்பு கொம்பனித்தெருவில் குடியிருக்கும் மக்களின் தற்போதைய குடியிருப்புக்களை மேம்படுத்தும் நோக்குடன் குடியிருப்புத் தொகுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், பல்நோக்கு பயன்பாட்டிற்கான அபிவிருத்திச் செயற்றிட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. அசைவற்ற ஆதன இருப்பு துறையைச் சார்ந்த இந்திய நிறுவனமொன்றால் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற முதலாவது செயற்திட்டமாக இது அமைந்துள்ளதுடன், இதற்கு 400 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பாரிய தொகை முதலீடு செய்யப்படவுள்ளது.

இச்செயற்றிட்டம் பூர்த்தியடையும் வரையில் கொம்பனித்தெருவிலுள்ள குடியிருப்பாளர்களின் அடிப்படை குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தி அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்துள்ள இலங்கை நகர அபிவிருத்தி அதிகாரசபை, 550 இற்கும் அதிகமான குடியிருப்புக்களில் வாழ்கின்றவர்களுக்கு சிறந்த வசதிகளுடனான குடியிருப்பு வசதிகளை வழங்கி அபிவிருத்தியின்மையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புனர்நிர்மாணம் செய்யப்பட்ட குடியிருப்பாளர்கள் அடுக்குமனைக் குடியிருப்பு உரிமையாண்மையைப் பெற்றுக்கொள்வதுடன், அவர்கள் அதை உபயோகித்து அடமானம் வைக்கும் வசதியையும் கொண்டுள்ளனர். ஆடம்பர நிர்மாணச் செயற்றிட்டத்தின் கீழ் ஒவ்வொன்றும் 36 தளங்களைக் கொண்ட 4 குடியிருப்பு அடுக்குமனைத் தொகுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு படுக்கையறைகளைக் கொண்டுள்ள அடுக்குமனைகள், இரட்டைமனைகள், கூரையுச்சிமனைகள் என அண்ணளவாக 650 மனைகளைக் கொண்டிருக்கும்.

மேலும் வர்த்தகரீதியிலான விற்பனைப் பிரதேசம், வர்த்தகரீதியிலான அலுவலகப் பிரதேசம் மற்றும் வர்த்தகரீதியிலான ஹோட்டல்கள் மற்றும் தளபாடங்கள் உட்பட அனைத்துவசதிகளையும் கொண்ட அடுக்குமனைகள் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.  

இந்த அறிவிப்பு தொடர்பில் Tata Housing நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான புரோடின் பனர்ஜி கருத்துத் தெரிவிக்கையில்,


'இலங்கையில் குடியிருப்பு நிர்மாணத்துறையில் நீண்டகால அடிப்படையிலான சந்தை வாய்ப்புக்கள் காணப்படுகின்றமையையும், நிலைபேற்றியலுடனான வளர்ச்சி வாய்ப்புக்கள் உள்ளமையையும் Tata Housing நிறுவனம் தெளிவாக இனங்கண்டுள்ளது. நாம் மேற்கொண்டுள்ள பாரிய முதலீடுகள் எமது அண்டை நாட்டுடன் நாம் கொண்டுள்ள உறுதியான பிணைப்பையும், இலங்கையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் எமது நகர அபிவிருத்தி, மீள்புனரமைப்புச் செயற்றிட்டங்களையும் வெளிக்காண்பிக்கின்றன. இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சித் தேவைகளுடன் ஒத்திசைகின்ற உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கான உறுதிமொழியை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். உலகளாவில் Tata நிறுவனம் பேணிவருகின்ற நம்பிக்கையின் அடையாளமாக இந்த பங்குடமை அமைந்துள்ளது' என்று குறிப்பிட்டார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் சபைத் தலைவரான நிமல் பெரேரா அவர்கள் கூறுகையில்,


'கொம்பனித்தெருவில் தற்போது குடியிருப்பவர்களுக்கு சிறந்த தரத்திலான வாழ்க்கைமுறைக்கு வழிகோலும் வகையில் அரச-தனியார் பங்குடமையுடனான முன்னெடுப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற முதலாவது மீள்அபிவிருத்திச் செயற்றிட்டத்திற்காக Tata Housing நிறுவனத்துடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். Tata Housing நிறுவனம் கொண்டுள்ள நீண்ட அனுபவமும், தரத்தினைப் பேணும் சிறப்பும் இச்செயற்றிட்டத்தை கொழும்பிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றியமைக்கும் என உறுதியாக நம்புகின்றோம்' என்று குறிப்பிட்டார்.

இந்த புதிய செயற்றிட்டத்தின் மூலமாக அங்கு தற்போது குடியிருப்பவர்களுக்கு முறையான காற்றோட்டம், சுகாதார வசதிகள் மற்றும் திறந்த வெளிகள் உட்பட உயரம் தூக்கி வசதிகள் என மேம்பட்ட வாழ்க்கைத்தரத்துடன் முற்றிலும் புதிய ஒரு சூழல் கிடைக்கவுள்ளது. மேலும் சிறந்த வீதியமைப்பு, சிறந்த வடிகால் அமைப்புக்கள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் உடற்பயிற்சிக்கூடம், சமூக மண்டபம், சிறுவர் விளையாட்டிடம் போன்ற நவீன வாழ்க்கை வசதிகள் உள்ளிட்ட ஏனைய பயன்களும் கிட்டவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .