
அண்மையில் இமய மலைக்கு ஏறிய உள்நாட்டு மலையேறியான எல்மோ பிரான்சிஸ் இலங்கைக்காக மலையேறுவதில் 4 முறை சாதனை படைத்துள்ளார். வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்காத இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கியாகக் கருதப்படும் அமானா வங்கி இந்த உள்நாட்டு மலையேறியான எல்மோவுக்கு இந்த சாதனையை நிலைநாட்டும் விடயத்தில் கைகோர்த்து செயற்பட்டது.
இமய மலையின் தெற்குப் பகுதி வழியாக 7500 மீற்றர் குத்துயரத்திற்கு ஏறி இலங்கை சார்பில் ஒரு புதிய சாதனையை நிலைநாட்ட திட்டமிட்டிருந்தாலும், மலையுச்சியில் ஏற்பட்ட மோசமான சூழ்நிலை காரணமாக எல்மோவின் இந்த சாதனை தடைப்பட்டது. இந்த பயணத்தில் இலக்கை அடைய வேண்டும் என்ற திடசங்கட்பத்துடன் எல்மோ, மலையின் கிழக்குப் பகுதியில் 6201 மீற்றர் உயரத்தில் காணப்படும் லுபோச்சி மலையுச்சிக்கு ஏறும் முயற்சியில் மீண்டும் ஈடுபட்டார். இதன்மூலம் இந்தப் பகுதி வழியாக மலையேறிய முதலாவது இலங்கையர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டார். அந்த மலையுச்சியை அடைவதில் எல்மோ மேலும் மூன்று உள்நாட்டு சாதனைகளை முறியடித்தார். இவற்றில் முதலாவது சாதனை 5400 மீற்றர் உயரத்தில் அமைந்திருக்கும் ஜங்பு உச்சியாகும். 5700 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள குபு பணிக்கட்டி வீழ்ச்சியை முதலாவது அடைந்த பெருமையும், 5870 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள புமோரி உயர் தள முகாமில் முதலாவதாக முகாமிட்டு தங்கிய பெருமையும் இவரைச் சாறும்.
இந்த சாதனைகள் குறித்து கருத்து வெளியிட்ட எல்மோ ' எனது நாட்டுக்காக இந்த சாதனைகளை நிலைநாட்டியதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். எனது பயணம் அச்சுறுத்தலாக இருந்த நேரத்தில், எப்படியாவது இந்த வாய்ப்பை பயன்படுத்தி எனது நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை பலப்படுத்துவதில் எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் நான் உறுதியாக இருந்தேன். எனது இந்த பயணத்திற்கு அனுசரணை வழங்க முன்வந்தமைக்காக நான் அமானா வங்கிக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் ' என்றார்.
எல்மோவின் சாதனைகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மத் அஸ்மீர் ' எல்மோவின் சாதனைகள் குறித்து முழு நாடும் பெருமைப்பட வேண்டும். காலநிலை மாற்றத்தை வெற்றி கொள்ள வேண்டிய ஒரு தருணத்தில், எல்மோவின் இந்த பயணம் நம் அனைவரும் இந்த இயற்கையின் அருட் கொடையான தாய் நாட்டை நிலையாக பேணுவதற்கு பங்களிப்புச் செலுத்த வேண்டும் என்பதை எமக்கு ஞாபகப்படுத்துகின்றது. இந்த துனிகர பயணத்தில் எல்மோவுக்கு ஆதரவு வழங்கியதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்' என்றார்.