
தமது கல்வியை தொடர்வதற்கு ஆற்றல் இருந்தும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதனை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு நிதியுதவியையும், புலமைப்பரிசில்களையும் வழங்கி வரும் செரந்திப் கல்வி மன்றத்திற்கு தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் அமானா வங்கி தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. இதற்கமைய, அண்மையில் தெஹிவளை, எஸ்.டி.எஸ். ஜயசிங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒரு மதிப்பீட்டு முறையின் ஊடாக நாடு முழுவதிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 300 இற்கும் மேற்பட்ட கல்வி நிதி அவசியமான ஆற்றல்மிக்க மாணவர்களுக்கு செரந்திப் கல்வி மன்றம் புலமைப்பரிசில்களை வழங்கியது.
கடந்த 20 வருடங்களாக செரந்திப் கல்வி மன்றம் தமது இரண்டாம் நிலை கல்வியில் திறமை காட்டும் மாணவர்களுக்கும், தமது உயர் கல்வியை தொடரும்போது மிக உயர் நிலையை அடைவதற்கான திறமையையும், ஆற்றலையும் கொண்ட மாணவர்களுக்கும் நிதி உதவியை வழங்கியுள்ளது.
இந்த முன்னெடுப்பு குறித்து கருத்து வெளியிட்ட அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் மூலோபாய சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் திரு. சித்தீக் அக்பர் ' கடந்த சில வருடங்களாக அமானா வங்கி பொருளாதார வல்லமை குறைந்த மாணவர்களின் கல்வித் தரத்தை முன்னேற்றுவதற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது. இதற்கமைய உயர் கல்வி நடவடிக்கையில் திறமையான மாணவர்களுக்கு உதவி செய்து ஊக்குவித்து வரும் செரந்திப் கல்வி மன்றத்துடன் மீண்டும் ஒருமுறை பங்காளியாவதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்' என்றார்.