
கீழ் கொத்மலை நீர் மின்சார நிலையத்திற்கு நிதிப்பங்களிப்பை வழங்கும் செயற்திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டதை குறிக்கும் வகையிலான வைபவம் அண்மையில் அமானா வங்கியின் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் வங்கியினதும், விதுலங்கா கம்பனியினதும் பிரதான அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
நுவரெலியாவில் அமைந்துள்ள 4 மெகாவொட்ஸ் சிறிய நீர் மின்சார நிலையமான இது தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் 13.1 ஜிகாவொட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வல்லமை இதற்கு உண்டு. இதன் மூலம் நாட்டின் காபன் வெளியீட்டை 8,225 தொன்களால் குறைக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. முஹம்மத் அஸ்மீர் அவர்கள் ' விதுலங்கா நிறுவனத்துடன் இணைந்து மற்றுமொரு வெற்றிகரமான நீர் மின்சார செயற்திட்டத்தை பூர்த்தி செய்வதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். கடந்த சில வருடங்களாக விதுலங்கா நிறுவனம் நிலைபேறான மின்சார உற்பத்தி செயற்திட்டங்களில் முன்னோடியாக இருந்துள்ளதோடு, நாட்டின் மின்சாரத் தேவையை நிவர்த்தி செய்வதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. விதுலங்கா நிறுவனத்துடன் சேர்ந்து இவ்வாறான செயற்திட்டங்களுக்கு வழக்கப்பட்டு வரும் எமது தொடர்ச்சியான நிதி பங்களிப்பானது எமது பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சிக்கு உதவி செய்வதில் எமக்குள்ள கடப்பாடை எடுத்துக் காட்டுகின்றது' என்றார்.
அமானா வங்கியின் ஈடுபாட்டை வரவேற்றுப் பேசிய விதுலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ரியாஸ் சங்கானி அவர்கள் ' கீழ் கொத்மலை செயற்திட்டத்திற்காக அமானா வங்கியுடன் மீண்டும் ஒருமுறை கூட்டிணைந்து செயற்படுவதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். மதுகெட்ட மின்சார செயற்திட்டம் மற்றும் கீழ் கொத்மலை நீர் மின்சார செயற்திட்டம் ஆகிய இரண்டுக்கும் நிதியுதவி வழங்கும் எமது விருப்பத்திற்குரிய பங்காளியாக அமானா வங்கி இருந்து வருகின்றது. எமது எதிர்காலத் திட்டங்களிலும் இந்த பங்களிப்பை நாம் எதிர்பார்க்கின்றோம்' என்று குறிப்பிட்டார்.
கீழ் கொத்மலை-ஓயா சிறிய நீர் மின்சார திட்டத்திற்கு அமானா வங்கி நிதிப் பங்களிப்பை வழங்கியமை 2013ம் ஆண்டுக்கான மிகச் சிறந்த இஸ்லாமிய நிதிக் கொடுக்கல் வாங்கலுக்குரிய பொன் விருதை வெற்றி கொள்ள வைத்தது. 2013ம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை இஸ்லாமிய வங்கித் துறை மற்றும் நிதித்துறை விருது வழங்கல் விழாவில் வைத்து இந்த விருது கிடைக்கப்பெற்றது.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கீழ் கொத்மலை ஓயா சிறிய நீர் மின்சார நிலையத்திற்கு நிதிப் பங்களிப்பை வழங்கியதன் மூலம் அமானா வங்கி மீண்டும் ஒருமுறை புதுப்பிக்கக் கூடிய எரிசக்தித் துறைக்குள் பிரவேசித்துள்ளது. இந்த மின்சார நிலையம் என்பது வரையறுக்கப்பட்ட விதுலங்கா தனியார் கம்பனிக்கும் வரையறுக்கப்பட்ட ஜேவைஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி தலைமையிலான முதலீட்டாளர்களின் கூட்டமைப்பிற்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.
விதுலங்கா நிறுவனமானது கடந்த 3 ஆண்டு காலமாக நீர் வளங்களை பயன்படுத்தி தீவிரமான முறையில் அதன் உற்பத்தியை இரட்டித்து நிலைபேறான புதுப்பிக்கக் கூடிய மின்சார செயற்திட்டங்களை உருவாக்கி செயற்படுத்தி வருகின்றது. 1997ஆம் ஆண்டு கூட்டிணைக்கப்பட்ட இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள விதுலங்கா கம்பனி நாட்டின் நிலைபேறான எரிசக்தி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி தேசிய மின் கட்டமைப்பிற்கும் ஆதரவளித்து வருகின்றது.
வட்டி சாராத இஸ்லாமிய வங்கி முறையுடன் முற்றிலும் இணங்கி செயற்படும் இலங்கையின் முதலாவது உத்தரவு பெற்ற வர்த்தக வங்கியே அமானா வங்கியாகும். தனது மூலோபாய பங்காளிகளான மலேஷியா பேர்ஹட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி மற்றும் பங்களதேஷின் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு, நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.