.jpg)
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் இலங்கைக்கான பால்மா இறக்குமதி 78,000 மெட்ரிக் டொன்களால் குறைவடைந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு பசுப்பால் பாவனை அதிகரிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளதுடன், கடந்த ஜூன் மாதம் இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளின் மீதான வரியை 44 வீதத்தால் அதிகரித்திருந்தது. உள்நாட்டு பாற்பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரி அதிகரிப்பை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் பால்மா வகையில் டிசிடி இரசாயன பதார்த்தம் காணப்படுவதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையும், பால்மா பாவனை வெகுவாக குறைவடைவதற்கு காரணமாக அமைந்திருக்கலாமென அரச தரப்பு அறிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டில் இலங்கை பால்மா இறக்குமதிக்காக 291 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டிருந்தது. 2012இல் இந்த தொகை 301 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.
கடந்த ஆண்டில் இலங்கை மொத்தமாக 84,000 மெட்ரிக் டொன் பால்மாவை இறக்குமதி செய்திருந்ததுடன், இந்த ஆண்டில் இந்த தொகை 6,000 மெட்ரிக் டொன்களாக குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.