2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பங்குச்சந்தை, தங்கம் விலை மற்றும் நாணயமாற்று வீத நிலைவரங்கள்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
கொழும்பு பங்குச்சந்தை கடந்தவாரம் சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. முன்னைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் சந்தை முதலீட்டாளர்களின் ஈடுபாடும் குறைந்தளவில் காணப்பட்டது. 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் வாரத்தில் சந்தை நடவடிக்கைகள் உயர்வடையும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது, வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்தபோது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7,213.48 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 4003.79 ஆகவும் பதிவாகியிருந்தன.
 
ஒக்டோபர் 20ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 4,922,387,755 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 30,089 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 28,610 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,479 ஆகவும் பதிவாகியிருந்தன. 
 
திங்கட்கிழமை
கொமர்ஷல் வங்கி, நெஸ்லே லங்கா மற்றும் சிரி ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் மீது விலைச் சரிவுகள் காரணமாக சுட்டிகள் மறை பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு செலான் டிவலப்மன்ட்ஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு சிலோ ஃபினான்ஸ், ரேணுகா அக்ரி பூட்ஸ் மற்றும் மடுல்சீம பிளான்டேஷன்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. மேலும் கலப்பு ஈடுபாடு யூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு, மிலேனியம் ஹவுசிங் டிவலப்மன்ட்ஸ் மற்றும் கெப்பிட்டல் எலையன்ஸ் அன்ட் ஃபினான்ஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்களின் ஈடுபாடு குறைந்தளவில் காணப்பட்டது. அதிக பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.
 
செவ்வாய்க்கிழமை
வங்கி மற்றும் நிதியியல் துறையில் மறை பெறுமதிகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. லக்ஷபான பற்றரிஸ் மற்றும் மடுல்சீம பிளான்டேஷன்ஸ் ஆகியவற்றில் சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. அக்சஸ் என்ஜினியரிங், டிப்ட் புரொடக்ட்ஸ் மற்றும் ஹவுசிங் டிவலப்மன்ட் ஃபினான்ஸ் கோர்ப்பரேஷன் வங்கி ஆகியவற்றின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு ஈடுபாட்டை காண்பித்திருந்ததுடன், அதிகளவு பங்கு கொள்வனவிலும் ஈடுபட்டிருந்தனர்.
 
வியாழக்கிழமை
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சந்தை நேர் பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. லங்கா ஐஓசி, டிப்ட் புரொடக்ட்ஸ் மற்றும் லோஃவ்ஸ் காஸ் வாக்குரிமையற்ற பங்குகளின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. ஏசியா கெப்பிட்டல் மற்றும் ஏசியா அஸெட் ஃபினான்ஸ் பங்குகளின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது.
 
வெள்ளிக்கிழமை
கார்சன் கம்பர்பட்ச், நெஸ்லே லங்கா மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதியுடன் வாரத்தை பூர்த்தி செய்திருந்தன. வலிபல் பவர் எரத்னா மற்றும் அமானா டகாஃபுல் ஆகியவற்றின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு காணப்பட்டது. சன்சைன் ஹோல்டிங்ஸ் மற்றும் வட்டவளை பிளான்டேஷன்ஸ் ஆகிய பங்குகளின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் நிகர பங்கு கொள்வனவாளர்களாக பதிவாகியிருந்தனர், இவர்கள் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், லங்கா ஐஓசி மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் மீது ஈடுபாட்டை செலுத்தியிருந்தனர்.
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் எஸ்எம்பி லீசிங் (சாதாரண), மடுல்சீம, கீல்ஷ் பூட், மெட்.ரெஸ்.ஹோட். மற்றும் குட் ஹோப் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
லங்கா சென்ச்சரி (உரிமை), கலாமசூ, அமானா டகாஃபுல், ப்ளு டயமன்ட் (சாதாரண) மற்றும் கார்கோ போட் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



 
தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 44,500 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,800 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.26 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 212.69 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X