2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ரியல் எஸ்டேட் அபிவிருத்தி செயற்றிட்டத்தில் கால்பதிக்கும் ரேணுகா ஹோல்டிங்ஸ்

A.P.Mathan   / 2014 நவம்பர் 16 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் கூட்டுநிறுவனமான ரேணுகா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. ஆனது 2014 நவம்பர் 11ஆம் திகதியன்று இடம்பெற்ற விஷேட பொதுக் கூட்டத்தின் போது - குழுமத்தின் இலட்சிய செயற்றிட்டமான 'ரேணுகா டவர்' கட்டிட தொகுதியை காலிமுகத்திடலில் நிறுவுவதற்கான பங்குதாரர்களின் ஒப்புதலை பெற்றுக் கொண்டுள்ளது. 
 
'ரேணுகா டவர்' ஆனது 28 அடுக்கு மாடிகளைக் கொண்டதொரு அதிநவீன தொடர்மாடி கட்டிடமாக திகழும் என்பதுடன், காலிமுகத்திடல் மற்றும் கொழும்பு 03 உத்ரானந்த மாவத்தையில்  கம்பனிக்குச் சொந்தமாகவுள்ள காணியில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் 'A' தரமான அலுவலக இடவசதிகளையும் வழங்கவுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் முடிவடைந்ததும், வாடகைக்கு விடக்கூடிய 200,000 சதுர அடி பரப்பளவிலான இடவசதியையும் 200 இற்கும் அதிகமான கார்களை நிறுத்தி வைக்கத்தக்க வசதியையும் இத் தொடர்மாடி கொண்டிருக்கும். அதுமாத்திரமன்றி கூட்டாண்மை களிப்பூட்டல் பிரிவுகள், மாநாட்டு வசதிகள், உணவருந்தல் வசதி, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் மகிழ்ச்சியும் பாதுகாப்பும் நிறைந்ததுமான வேலைச் சூழலை உருவாக்குவதற்கு அவசியமான அனைத்து விதமான நவீன சிறப்பம்சங்கள் பலவற்றையும் இந்த கட்டிடம் தன்னகத்தே கொண்டதாக காணப்படும்.
 
ரேணுகா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. ஆனது கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்ட 'பல்வகை வணிகத்தை' மேற்கொள்ளும் ஒரு கூட்டாண்மை நிறுவனமாகும். அத்துடன் விவசாய உணவு ஏற்றுமதி (பெருந்தோட்டங்கள், உற்பத்தியாக்கல், பூகோள சந்தைப்படுத்தல்), பாற்பொருள், FMCG, வாகனம், முதலீடு மற்றும் சேவைகள் போன்ற துறைகளில் வணிகத்தை மேற்கொண்டு வரும் பல துணை நிறுவனங்களை தம்வசம் வைத்திருக்கும் கம்பனியாக திகழ்கின்றது. இந் நிறுவனத்திற்கு கொழும்பின் வணிக வலயம் மற்றும் கேந்திர வர்த்தக பகுதியை சூழவுள்ள பல முக்கிய இடங்களில் காணிகள் சொந்தமாக இருக்கின்ற நிலையில், சொத்துரிமை அபிவிருத்தி என்பது நிறுவனத்தின் நீண்டகால தூரநோக்காக காணப்படுகின்றது.  
 
ரேணுகா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரான திரு. சமிந்திர ராஜையா இச் செயற்றிட்டத்தின் உள்நோக்கங்களை மேலும் விபரிக்கையில், 'எமக்கு சொந்தமான நிலப்பரப்பை அபிவிருத்தி செய்வதற்கும் இவ் வளங்களில் இருந்து கம்பனிக்காக ஒரு புதிய வருமான வழிமுறையை உருவாக்குவதற்கும் இது மிகச் சரியான தருணம் என்று நாம் நம்புகின்றோம். ஏற்கனவே குழுமமானது கொழும்பு 08 இல் அமைந்துள்ள 'ரேணுகா பில்டிங்' கட்டிடத் தொகுதியை இயக்கிக் கொண்டிருக்கின்றது. 8 மாடிகளைக் கொண்ட இந்த அலுவலக கட்டிட தொகுதியானது குழுமத்தின் துணை நிறுவனங்கள் மற்றும் வாடகைக்கு பெற்றுக்கொண்ட பிரபலமான நிறுவனங்களையும் உள்ளடக்கியுள்ளது. எமது கடந்தகால அனுபவத்தை பயன்படுத்தி தலைநகரிலேயே மிகவும் தன்னிகரற்ற ஒரு வர்த்தக முகவரியாக 'ரேணுகா டவர்' கோபுரத்தை கட்டியெழுப்புவது எமது நோக்கமாகும்' என்று தெரிவித்தார். 
 
இது தொடர்பாக பங்குதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இச் செயற்றிட்டம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் அதேநேரம் தற்சமயம் இவ் அபிவிருத்தி தொடர்பான திட்டமிடல் மற்றும் கருத்திட்ட உருவாக்க பணிகள் நிறைவடைந்துள்ளன. இலங்கைப் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிப் போக்கு மற்றும் தனது கேந்திரமைய அந்தஸ்துடன் இலங்கைக்கு ஏனைய உலக நாடுகளுடன் அதிகரித்துச் செல்லும் இடைத்தொடர்புகள் என்பவற்றின் விளைவாக, அடுத்துவரும் மூன்று முதல் ஐந்து வருட காலப்பகுதியில் தலைநகரின் கேந்திர வர்த்தக பகுதியில் உயர் தரமான அலுவலக இடவசதிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று ரேணுகா நிறுவனம் நம்புகின்றது. எனவேதான் 'A' வகுப்பு அலுவலக இடவசதி கொண்ட கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்படுவதானது கம்பனிக்கு கவர்ச்சிகரமான வாடகை வருமானத்தை உழைத்துத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது' என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இரண்டு கட்டங்களில் மேற்கொள்ளப்படும் இந்த அபிவிருத்தி பணிகளின் மொத்த செயற்றிட்ட செலவு ரூபா 3.2 பில்லியன் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது. தற்போது மேற்கொள்ளப்படும் ரூபா 1.03 பில்லியன் உரித்து வழங்கல் ஊடாக இதில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு நிதி வசதியளிக்கப்படும். ரேணுகா நிறுவனம் 44,517,313 சாதாரண வாக்குரிமைப் பங்குகளை ஒவ்வொன்றும் ரூபா 21 இற்கு வழங்குகின்றது. அதேவேளை 6,428,415 மில்லியன் வாக்குரிமையற்ற பங்குகள் ஒவ்வொன்றும் ரூபா 15 இற்கு விநியோகிக்கப்படும். செயற்றிட்டத்தின் பணிகளை 2015ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோல் 2018ஆம் ஆண்டில் இதனை பூர்த்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 
 
ரேணுகா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. அண்மையில் தனது ஆறு மாத நிதிப் பெறுபேறுகளை வெளியிட்டிருந்தது. இதன்படி ரூபா 3.85 பில்லியன் நிதிப்புரள்வை நிறுவனம் பதிவுசெய்துள்ளதுடன், ரூபா 899.5 மில்லியன் மொத்த இலாபத்தையும் பெற்றுள்ளது. இது கடந்த வருடத்தின் தொடர்புபட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 21% அதிகரிப்பாகும். அதேவேளை குழுமம், ஆறு மாத காலப் பகுதிக்கான இலாபமாக ரூபா 315.8 மில்லியனை பதிவு செய்தது. குழுமம் வர்த்ததகத்தை மேற்கொண்டு வரும் அனைத்து துறைகளில் இலாப அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. 2014 செப்டெம்பர் 30ஆம் திகதியன்று இருந்தபடியான மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூபா 5.3 பில்லியனாக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டதுடன், இதில் பங்குதாரர்களுக்கு உரித்தாகக்கூடிய சொத்தின் பெறுமதி ரூபா 3.0 பில்லியன் ஆகும். பங்கொன்றிற்கான தேறிய சொத்து பெறுமதி ரூபா 58.90 ஆக காணப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X