2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விரைவில் தனது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள ஆனையிறவு உப்பளம்

A.P.Mathan   / 2014 நவம்பர் 17 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாதனங்களின் கொள்வனவு மற்றும் அவற்றை தாபிப்பது போன்ற உட்கட்டமைப்பு செயற்பாடுகள் பூர்த்தியடைந்த பின்னர் ஆனையிறவு உப்பளத்தின் முதற்கட்ட செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளது. இந்த செயற்பாடுகள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட செயற்பாடுகள் பூர்த்தியடைந்த பின்னர் வருடமொன்றில் 20,000 முதல் 25,000 மெட்ரிக்டொன் வரையிலான உப்பை உற்பத்தி செய்ய முடியும் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 447 ஏக்கர் பரப்பளவிலான உப்பளத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் 2015 ஆம் ஆண்டில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைசேரி நிதியை கொண்டு இந்த நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 
 
இதன் மூலம் மேலதிகமாக வருடமொன்றில் 30,000 மெட்ரிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், 3,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்பாடுகள் முழுமையாக பூர்த்தியடையும் பட்சத்தில் உற்பத்தி வருடமொன்றில் 70,000 – 100,000 மெட்ரிக் தொன்கள் வரை உற்பத்தி செய்ய முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் எதிர்காலத்தில் உப்பளத்தின் செயற்பாடுகள் அயடின் சேர்த்தல், பொதியிடல், உப்பு விநியோகம் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய வகையில் விஸ்தரிக்கப்படவுள்ளதுடன், சுற்றுலாத்துறையுடனும் இணைக்கப்படவுள்ளது.
 
”வெளிநாடுகளிலிருந்து உப்பு கொள்வனவுக்கு சிறந்த கேள்வி காணப்படுகிறது. உயர் தரம் வாய்ந்த தூய உப்பை கொள்வனவு செய்ய வெளிநாட்டவர்கள் சிலர் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இவற்றின் மூலமாக ஆனையிறவு பகுதியை ”உப்பு நகரம்” ஆக அபிவிருத்தி செய்ய முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த திட்டத்தின் மற்றுமொரு விசேட அம்சமாக, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பிராந்திய அபிவிருத்தி நிலையங்கள் / கிராமிய பெண்கள் அபிவிருத்தி கழகங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 
 
ஆனையிறவு உப்பளம் தனது செயற்பாடுகளை 1938 ஆம் ஆண்டு வெற்றிகரமாக ஆரம்பித்திருந்தது. நாட்டில் நிலவிய அமைதியற்ற சூழ்நிலை காரணமாக 1990 ஆம் ஆண்டின் பின்னர் கடந்த 24 ஆண்டுகளாக இந்த உப்பளத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. 
 
இலங்கையின் வருடாந்த உப்பு தேவை என்பது 150,000 மெட்ரிக் தொன்களாக அமைந்துள்ளது. இதில் 80 வீதம் வீட்டுப் பாவனை தேவைக்கும், எஞ்சியது தொழிற்துறை பாவனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த தேவையின் 97 வீதமானவை உள்நாட்டு உப்பளங்களின் மூலமாக நிவர்த்தி செய்யப்படுகின்றன. 
 
அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஏனைய சில நாடுகளில் உப்புத் தேவை என்பது அதிகளவில் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X