2026 மே 13, புதன்கிழமை

Vietjet Air விமான சேவைகள் ஆரம்பம்

Janu   / 2026 மே 12 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியட்நாமின் புதிய தலைமுறை ஹைப்ரிட் விமான சேவை நிறுவனமான 'வியட்ஜெட்' (Vietjet Air), கொழும்புக்கும் ஹோ சி மின் (Ho Chi Minh City) நகரத்திற்கும் இடையிலான தனது முதலாவது நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.

இலங்கை – வியட்நாம் வர்த்தக, முதலீடு மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பு மாநாட்டில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. வியட்நாமின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதியுமான டோ லாம், இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இரு நாடுகளையும் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான முதலாவது நேரடி விமான சேவையாக இது அமைந்திருப்பதுடன்; இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக, சுற்றுலா மற்றும் மக்களிடையிலான தொடர்புகளை மேம்படுத்தவும் இது பெரும் பங்களிப்புச் செய்யும்.

விமான சேவை விபரங்கள்: 2026 ஆகஸ்ட் மாதம் முதல் கொழும்பு – ஹோ சி மின் சிட்டி இடையிலான விமான சேவை ஆரம்பமாகவுள்ளது. வாரமொன்றில் நான்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்படும். கொழும்பிலிருந்து பயணிப்போருக்குச் சிக்கனமான கட்டணங்களுடன், வியட்நாமின் முன்னணி சுற்றுலா மற்றும் வியாபார மையங்களுக்குச் செல்லக்கூடிய வசதிகள் இதன் மூலம் கிட்டும். அத்துடன், வியட்ஜெட்டின் பரந்த சர்வதேச விமான சேவை வலையமைப்பினூடாக அவுஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, சீனா போன்ற நாடுகளுக்கும் சுலபமாகப் பயணம் செய்ய முடியும்.

இது குறித்து வியட்ஜெட்டின் முதல் உப தவிசாளர் தின் விட் புவொங் கருத்துத் தெரிவிக்கையில்:

“ஹோ சி மின் சிட்டி – கொழும்பு விமான சேவை ஆரம்பத்தினூடாக, இரு நாடுகளுக்குமிடையே புதிய ஆகாயவழித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனூடாக வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் கலாசார பரிமாற்றங்களைத் தெற்காசியா மற்றும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் ஊக்குவிக்கக்கூடியதாக இருக்கும்,” என்றார்.

சுற்றுலாத் தலமாக ஹோ சி மின் சிட்டி: தென்கிழக்காசியாவின் மிகவும் சுறுசுறுப்பான நகரங்களில் ஒன்றாகத் திகழும் ஹோ சி மின் சிட்டி, பழமை மாறாக் கலாசாரத்தையும் நவீன நகர்ப்புற ஆற்றலையும் ஒருங்கே கொண்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடக்கலை, கலகலப்பான இரவு வாழ்க்கை மற்றும் புகழ்பெற்ற தெருவோர உணவுகள் எனப் பயணிகள் அனைத்தையும் இங்கு அனுபவிக்க முடியும். வியட்நாமின் பிரமிக்கத்தக்க கடற்கரைகளுக்கான நுழைவாயிலாகவும் இந்நகரம் விளங்குகின்றது.

வியட்ஜெட் (Vietjet) பற்றி: வியட்நாமின் முன்னணி தனியார் விமான சேவை நிறுவனமான வியட்ஜெட், தற்போது 135 நவீன விமானங்களைக் கொண்டு இயங்கி வருகின்றது. சர்வதேசச் சந்தையில் தனது வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் மேலதிகமாகச் சுமார் 600 விமானங்களுக்கான கொள்வனவுக் கட்டளைகளையும் வழங்கியுள்ளது.

சர்வதேச ஆகாய போக்குவரத்துச் சங்கத்தின் (IATA) முழுமையான உறுப்பினரான இந்நிறுவனம், பாதுகாப்பு மதிப்பீட்டில் ஆகக்கூடுதலான '7 நட்சத்திர' அந்தஸ்தைப் பெற்றுள்ளது. மேலும், 'Skytrax', 'CAPA' போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களினால் மிகச்சிறந்த குறைந்த கட்டண விமான சேவை (Best Low-Cost Carrier) நிறுவனமாகவும் இது பலமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .