
MD வர்த்தகநாமத்தின் கீழ் இயற்கை பழச்சாறுகள், ஜாம், சோஸ், கோர்டியல்கள் மற்றும் பிற தயாரிப்புகளை விநியோகித்து வரும் இலங்கையின் முதற்தர விநியோகஸ்தரும், ஏற்றுமதியாளரும் மற்றும் உற்பத்தியாளருமான லங்கா கெனரிஸ் (Lanka Canneries) நிறுவனமானது தமது உலகளாவிய பிரசன்னத்தை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில், பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்கோ சூப்பர் மார்கெட்டுகளில் தமது தயாரிப்புக்களை விற்பனை செய்யும் வகையில் உலகப்; புகழ்பெற்ற சில்லறை வர்த்தக வலையமைப்பைக் கொண்ட டெஸ்கோ பிஎல்சி UK (Tesco PLC UK) நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டெஸ்கோ நிறுவனமானது 12 நாடுகளில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை கொண்டுள்ளதுடன், ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தமது சேவைகளை வழங்கி வருகின்றது. 1919ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டெஸ்கோ நிறுவனமானது தரமான மற்றும் பல்வேறு வகையான தயாரிப்புக்கள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஷொப்பிங் அனுபவத்தை வழங்கி உலகளவில் முன்னணியில் திகழ்கிறது.
டெஸ்கோ சூப்பர் மார்கெட்டுகளில் பிரசித்தி பெற்ற பழக்கலவை, அன்னாசி மற்றும் விளாம்பழச் சுவை கொண்ட MD ஜாம் வகைகளும், MD இன் புகழ்பெற்ற தயாரிப்புகளான extra hot chillie sauce மற்றும் green chillie sauce போன்ற தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படுகின்றன. டெஸ்கோ சூப்பர் மார்கெட்டுகளில் தற்போது MD கட்டச் சம்பல், மாழ்பழ சட்னி மற்றும் விளாம்பழ நெக்டா பழச்சாறுகள் போன்றனவும் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் எதிர்காலத்தில் ஷர்பட் சிரப் மற்றும் நெல்லி கோர்டியல் போன்ற MD கோர்டியல் வகைகளும் தேங்காய் வினாகிரி மற்றும் கித்துல் பாகு போன்ற தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.
இந்த அபிவிருத்தி குறித்து லங்கா கெனரிஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.எஃப்.தோஸா கருத்து தெரிவிக்கையில், 'உலகளாவிய சில்லறை வலையமைப்பினை கொண்ட டெஸ்கோ பிஎல்சி போன்ற நிறுவனத்தில் எமது தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உயர்தரத்துடன் நாம் உற்பத்தி செய்யும் தயாரிப்புக்களின் சுவையை தற்போது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பாவனையாளர்களும் அனுபவிக்க முடியும். இது எம்மை இலங்கையின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானங்கள் உற்பத்தியாளராக எம்மை முன்னேற்ற வழிவகுக்கும்' என்றார்.
லங்கா கெனரிஸ் நிறுவனத்தின் MD வர்த்தகநாமமானது பழங்கள் மற்றும் காய்கறி பதப்படுத்தல் துறையில் 80 வருட அனுபவத்தை கொண்டுள்ளது. இலங்கை சந்தையில் MD ஜாம், கோர்டியல் மற்றும் சோஸ் வகைகளுக்கு என தனித்துவமான இடத்தை கொண்டுள்ளது. MD தயாரிப்புக்கள் தற்போது USA, UK, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, மாலைதீவு மற்றும் கனடா உள்ளிட்ட 35 நாடுகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. MD ஆனது SLS சான்றிதழ், ISO 22,000 மற்றும் HACCP சான்றிதழ்களை பெற்றுள்ளது.