2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

மூலதனச் சந்தையும் முதலீடுகளும் - நிதியங்கள்

Editorial   / 2018 பெப்ரவரி 07 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

  இது வரைக்கும் நாங்கள் நம்பிக்கை அலகுப்பொறுப்பாட்சியில் காணப்படும் இரண்டு நிதியங்களான வருமான நிதியம், உரித்துவ நிதியங்களைப் பார்த்தோம். இவ்வாரம் உரித்துவ நிதியங்களின் கீழ் வரும் நான்கு உப நிதியங்களையும் பார்க்கலாம். அவையாவன,  

1.        வளர்ச்சி நிதியங்கள் (Growth Funds)

2.        சமநிலை நிதியங்கள் (Balanced     Funds)

3.        சுட்டி நிதியங்கள் (Index Funds)

4.        துறைசார் நிதியங்கள் (Sector Specific Funds)

வளர்ச்சி நிதியங்கள் (Growth Funds)

முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு நடுத்தர, நீண்டகால முதலீட்டு வளர்ச்சியை வழங்குவதே இந்நிதியத்தின் பிரதான நோக்கமாகும். இந்நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக, பிரதானமாக உறுதியான வளர்ச்சியை கொண்டுள்ள சிறந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்படும். 

இந்நிதியத்தின் பெரும்பகுதி பட்டியல்படுத்தப்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்படுவதனால் இவை ஆபத்தான முதலீடுகளாக  கருதப்படுகின்றன. இருந்தபோதிலும், இவை அதிக வருமானம் வழங்கும் நிதியங்களாகவும் காணப்படுகின்றன. இவற்றுக்குத் தொடர்சியான வருமானம் வழங்கப்படாவிட்டாலும் முதலீட்டாளர்கள் அலகுகளின் விலை அதிகரிக்கும் போது விற்பனை செய்து மூலதன இலாபத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

சமநிலை நிதியங்கள் (Balanced Funds)

சமநிலை நிதியங்களின் பிரதான நோக்கமாக காணப்படுவது தொடர்ச்சியான வருமானத்தை வழங்கும் அதேவேளை, முதலீடுகளுக்கு நடுத்தர நீண்டகாலத்தில் வளர்ச்சியை வழங்குவதாகும். இந்நிதியங்கள் நிலையான வருமானம் கிடைக்கக்கூடிய முதலீட்டு தேக்கங்களிலும் முதலீட்டுக்கு வளர்ச்சியை தரக்கூடியை உரிமை முதலீடுகளிலும் முதலிடப்படுகின்றன. வளர்ச்சி நிதியங்களோடு ஒப்பிடுகையில் இவை நட்ட அச்சம் குறைவானவைகளாகும். முதலீட்டாளர்கள் வருடாந்தம் வருமானம் பெறும் அதேவேளை முதலீட்டாளர்கள் அலகுகளின் விலை அதிகரிக்கும் போது, விற்பனை செய்து மூலதன இலாபத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

சுட்டி நிதியங்கள் (Indext Funds)

தெரிவு செய்யப்பட்ட சந்தைச் சுட்டியினுள் அடங்கும் பிணையங்களில் முதலீடு செய்யும் நிதியமானது சுட்டி நிதியம் எனப்படும். உதாரணமாக S&P சுட்டெண்ணில் 20 நிறுவனங்கள் காணப்படுகின்றன. 

இச்சுட்டெண்ணில் முதலிடுவதாக இருந்தால் காணப்படும் 20 நிறுவனங்களிலும் அதேவிகிதத்தில் முதலீடு செய்ய வேண்டும். இந்த நிதியங்களின் முக்கிய நோக்கம் தேர்தெடுக்கப்பட்ட குறியீட்டின் செயல்திறனை பிரதிபலிப்பதாகும். மேலே குறிப்பிட்ட உதாரணத்தை எடுத்துக்கொண்டால் S&P 20 சுட்டெண் 10 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்திருந்தால் இச் சுட்டி நிதியமும் 10 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்யும். அனைத்து முதலீடுகளும் பிணையங்களில் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதனால் இவை மிக அதிக நட்ட அச்சம் கொண்டவையாகும்.

துறைசார் நிதியங்கள் (Sector Specific Funds)

இவை ஒரு குறிப்பிட்ட துறைக்கு கீழ் வரும் நிறுவனங்களில் மாத்திரம் முதலீடு செய்யும் நிதியங்களாகும். உதாரணமாக வங்கித்துறை நிதியமாக இருந்தால் இந்நிதியமானது பங்குச்சந்தையில் வங்கித்துறைக்கு குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளில் மாத்திரம் முதலீடு செய்யும். இந்நிதியங்களின் பிரதான நோக்கமாக காணப்படுவது குறிப்பிட்ட துறையானது வெவ்வேறு பொருளாதார நிலைமைகளில் வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது, அதிக வருமானத்தை முதலீட்டாளர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதாகும். இந்த நிதியமும் ஒரு குறிப்பிட்ட துறையில் மாத்திரமே முதலீடு செய்வதால் அதிக நட்ட அச்சம் கொண்டவையாகக் கருதப்படுகின்றன. 

- இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X