2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வட பிராந்திய மக்களின் மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்யும் நொதர்ன் ஹொஸ்பிட்டல்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 25 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வைத்தியசாலையின் செயற்பாடுகள் குறித்து ஸ்தாபகர் எஸ்.பி.சாமி அவர்கள் தமிழ் மிரருக்கு வழங்கிய நேர்காணல்


ஒரு நிறுவனத்தை இயக்குவதன் மூலம் வருமானமீட்டுவதில் மட்டும் தமது முழு கவனத்தையும் செலுத்தாமல், தாம் இயங்கும் சமுதாயத்தில் வசிக்கும் மக்களுக்கும், தமது வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறும் சூழலுக்கும் நன்மை சேர்க்கும் விதத்தில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது இக்கால கட்டத்தில் அரிதாக காணக்கூடிய ஒரு விடயமாக அமைந்துள்ளது.

ஒருசில புகழ்பெற்ற நிறுவனங்கள் தமது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஓரங்கமாக தாம் பிரதிபலிக்கும் சமுதாயத்திலும், தாம் இயங்கும் சூழலிலும் தமது அக்கறையை செலுத்தி வருகின்றன. தமது சமுதாயத்துக்கு, தம்மாலான இயன்றளவு சேவையை வழங்கும் வகையில் தமது ஆரம்ப காலம் முதல் ஒரு வைத்தியசாலையை நிறுவ வேண்டும் என்பதை கனவாக கொண்டிருந்தவர் தொழிலதிபர் எஸ்.பி.சாமி.

இவர் தமது ஆரம்ப வர்த்தக நடவடிக்கைகளை அச்சுப் பிரதி துறையில் ஆரம்பித்து, பின்னர் யாழ்ப்பாணத்தில் இயங்கிய முதலாவது தனியார் வைத்தியசாலையை 1979ஆம் ஆண்டு நிறுவியிருந்தார். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கூட இந்த வைத்தியசாலை யாழ். பகுதியை சேர்ந்த மக்களுக்காக தமது சேவைகளை தொடர்ந்து வழங்கிய வண்ணமிருந்தது.


இதை தொடர்ந்து இவர் கொழும்பை மையமாக கொண்டு மொத்த வியாபாரத்தையும், அதனை தொடர்ந்து, தமிழ் மொழி மூல செய்தி பத்திரிகை துறையிலும் ஈடுபட்டிருந்தார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வட பகுதியை சேர்ந்த மக்களுக்கு அனைத்து வசதிகளும் படைத்த மருத்துவ சேவைகளை துரிதமாகவும், சௌகர்யத்துடனும் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்டது. வட பிராந்தியத்தில் இந்த வசதிகள் படைத்த தனியார் வைத்தியசாலைகள் எதுவும் இன்மை இந்த நிலைக்கு பிரதான காரணியாக அமைந்திருந்தது.

இதனை கருத்தில் கொண்ட எஸ்.பி.சாமி, தமது புதல்வர்களின் மேற்பார்வையின் கீழ், நொதர்ன் ஹொஸ்பிட்டல் எனும் நவீன வசதிகள் கொண்ட யாழ்ப்பாணத்தின் முதலாவது தனியார் வைத்தியசாலையை திருநெல்வேலி பகுதியில் நிறுவியிருந்தார்.

இந்த வைத்தியசாலையின் செயற்பாடுகள் குறித்து, ஸ்தாபகர் எஸ்.பி.சாமி அவர்களுடன் தமிழ்மிரர் மேற்கொண்ட நேர்காணலின் விபரம் வருமாறு,


”யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் மக்களுக்கு சகல வசதிகளும் படைத்த தனியார் வைத்தியசாலை ஒன்றின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு கொழும்பை நோக்கி பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. அவசர நிலைகளில் கூட, சுமார் 10 மணித்தியாலங்கள் வரை பயணித்தே தமது நோய்களுக்கு நிவாரணம் தேட வேண்டிய நிலை இருந்தது. இந்த சந்தர்ப்பத்தில், நாம் இந்த மக்களுக்கு இலகுவான முறையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் கிடைக்கும் அதே வசதிகளை கொண்ட ஒரு தனியார் வைத்தியசாலையை, ஏற்கனவே நாம் 1979ஆம் ஆண்டு முதல் இயக்கி வந்த சென்ரல் நேர்சிங் ஹோம் பகுதியில் நிறுவ திட்டமிட்டோம்.

இந்த நொதர்ன் ஹொஸ்பிட்டல் ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஒரு வருட காலம் கடந்துவிட்டது. இந்த காலப்பகுதியில் நாம் சுமார் 75,000 நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்கியுள்ளோம். பொதுமக்கள் எமது சேவைகளை நாட, பிரதான காரணியாக, நோயாளி குறித்த அக்கறை அதிகளவு தனியார் வைத்தியசாலைகளில் காணப்படுகிறது. அத்துடன், தங்குமிட அறை வசதிகள் போன்றனவும் பிரத்தியேகமான மலசலகூடங்களுடன் குளிரூட்டி, வாயு பதனூட்டி, தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற வசதிகளுடன் அமைந்துள்ளன. அத்துடன், நோயாளியுடன் உறவினர் அல்லது நெருங்கியவர் ஒருவர் தங்கியிருக்கக்கூடிய வசதி வழங்கப்படுகிறது.

அத்துடன், கொழும்புக்கு சிகிச்சைகளுக்காக செல்வோர், நோயாளியை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு, தாம் உறவினர் வீட்டில் அல்லது வேறொரு இடத்தில் வாடகைக்கு தங்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் செலவுகள் அதிகம். தாம் தமது வீட்டுச் சூழலில் இருக்கிறோம் என்ற மனநிலை ஏற்படாது. இதனால் மன உளைச்சலுக்கும், பல இன்னல்களுக்கும் ஆளாக நேரிடும். அத்துடன், யுத்தம் நிறைவடைந்த நிலையில் தமது உறவினர்களை பார்வையிடவென வெளிநாடுகளிலிருந்து பலர் தற்போது யாழ்ப்பாணம் வருகை தந்தவண்ணமுள்ளனர். இவர்கள் சுகயீனமடையும் பட்சத்தில், பெருமளவில் தனியார் மருத்துவமனை ஒன்றை நாடுபவர்களாகவே இருப்பார்கள். எனவே நவீன வசதிகள் படைத்த இந்த நொதர்ன் வைத்தியசாலை இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டே நிறுவப்பட்டது.


நொதர்ன்  ஹொஸ்பிட்டல்சை பொறுத்தமட்டில் இது ஒரு முதலீட்டு சபை அங்கீகாரம் பெற்ற திட்டமாகும். இந்த வைத்தியசாலையில் சுமார் 50 படுக்கைகள் காணப்படுகின்றன. 10 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் காணப்படுகின்றன. 24 மணி நேர வெளிநோயாளர் சிகிச்சை பிரிவை நாம் கொண்டுள்ளதுடன், வட பிராந்தியத்தை சேர்ந்த பெரும்பாலான மருத்துவ ஆலோசகர்கள் எமது வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர். மருத்துவ ஆய்வு அறிக்கைகளுக்காக நாம் மெட்ரோபொலிஸ் அமைப்புடன் கைச்சாத்திட்டுள்ளோம்.

சிறுநீரக அறுவை (Urological) சிகிச்சைகளை யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக நாம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதுபோன்று, 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் கருவுறாமைக்கான (Infertility) சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் நவீன வசதிகள் கொண்ட ஆய்வுகூடத்தை நிறுவும் நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்துள்ளோம். இதற்காக முன்னணி மருத்துவ ஆலோசகர்களான வைத்தியர் சதானந்தன் மற்றும் வைத்தியர் மேத்தா ஆகியோரின் வழிகாட்டல்களை நாம் பின்பற்றி வருகிறோம். இந்த வசதி எமது வைத்தியசாலையில் ஏற்படுத்தப்படும் பட்சத்தில், குழந்தையின்மை பிரச்சினைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய தேவை வடபிராந்திய மக்களுக்கு குறையும். மேலும், ஒக்சோனியன் இதய மையம் (Oxonian Heart Foundation) உடன் இணைந்து இருதய சிகிச்சைகளையும் (Cardiotheraphy Unit) நாம் வெகு விரைவில் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான உடன்படிக்கையில் நாம் இந்த மையத்துடன் கைச்சாத்திட்டுள்ளோம். முதலாவது வருடத்தில் இடம்பெறும் சகல இருதயசார் சிகிச்சைகளையும் இந்த மையம் நேரடியாக மேற்பார்வை செய்யும், இரண்டாம் வருடத்திலிருந்து நாம் இந்த பொறுப்பை ஏற்போம். சேவை அடிப்படையில், நாம் மேற்கொள்ளும் 5 - 6 சிகிச்சைகளில் ஒரு சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். 2013ஆம் ஆண்டு நிறைவடையும் முன்னர் இந்த சிகிச்சை முறையை எம்மால் ஆரம்பிக்க முடியும் என நம்புகிறோம். இதற்கான நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறோம்.

எமது வைத்தியசாலை குறித்து மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு காணப்படுகிறது. வெளிநாட்டிலுள்ளவர்கள் தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளும் வகையில் நாம் எமது வைத்தியசாலையின் இணையத்தளத்தையும் செயற்படுத்தி வருகிறோம்.

எமது வைத்தியசாலை தனியார் வைத்தியசாலை என்பதால் கொடுப்பனவு முறைகளை இலகுவாக்கிடும் வகையில் நாம் முன்னணி தனியார் வங்கியுடனும், காப்புறுதி நிறுவனத்துடனும் விசேட கொடுப்பனவு உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளோம். இதற்கமைய, 4 அங்கத்தவர்களை கொண்ட குடும்பமொன்றுக்கு 100,000 ரூபா வரையிலான மருத்துவ காப்பீடு ஒன்று ஒரு வருடத்துக்கு வழங்கப்படுகிறது. இதற்காக அவர்கள் மாதமொன்றுக்கு 8000 ரூபா வீதம் ஆறு மாத காலப்பகுதிக்கு செலுத்த வேண்டும்.

அதுபோன்று எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு குறித்த தனியார் வங்கியின் மூலம் வழங்கப்படும் கடன் அட்டை மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும்போது, தவணை கொடுப்பனவு முறையில் அவற்றை மீள செலுத்தக்கூடிய வசதியையும் ஏற்படுத்தியுள்ளோம்” என்றார்.

யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியை நெருங்கிக் கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் வடபிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் மற்றுமொரு அம்சமாக இந்த நொதர்ன் ஹொஸ்பிட்டல் தனியார் வைத்தியசாலை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேர்காணல் - ச.சேகர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X