2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

குடிநீர் பிரச்சினை, பால் மா பிரச்சினை; கம்பனிகளின் மூலம் கையாளப்படும் விதம்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக பொறுப்பு வாய்ந்த கம்பனிகளின் சமூகம் தொடர்பான கரிசனை: ஓர் அலசல்
 
-ச.சேகர்
 
பொதுமக்களின் அத்தியாவசிய தேவை தொடர்பாக நாட்டில் தற்போது நிலவும் இரு பிரதான பிரச்சினைகளாக குடிநீர் தொடர்பான வெலிவேரிய, நெதுன்கமுவ பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை விவகாரம் மற்றும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உள்நாட்டில் பிரபல்யம் வாய்ந்த சில வர்த்தக நாம பால்மா வகைகள் மீதான அரசின் தடையையும் குறிப்பிட முடியும்.
வெலிவேரிய குடிநீர் பிரச்சினை தொடர்பான சம்பவம்
மக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவை சுத்தமான குடிநீர். இதனை வழங்குவது என்பது பொறுப்பு வாய்ந்த ஓர் அரசாங்கத்தின் கடமை. ஆனாலும், இந்த உரிமைக்காக குரலெழுப்பிய வெலிவேரிய பிரதேச மக்களுக்கு, போர் கால அடிப்படையில் கண்மூடித்தனமான தாக்குதல் இடம்பெற்றமையும், இதனை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டமையும், சம்பவம் ஓய்வடைந்து ஒரு சில தினங்களில் இப்பகுதியைச் சேர்ந்த அப்பாவி உயிர்கள் சில உலகிலிருந்து விடைபெற்றிருந்தமையும் உலகளாவிய ரீதியில் அறிந்த விடயமாக அமைந்துள்ளது. 
 
இந்த விடயம் தொடர்பாக அரசியல், சர்வதேச, பொருளாதார ரீதியில் குறித்த கம்பனியின் சார்பான பல அறிக்கைகள் வெளியாகிய வண்ணமுள்ளன. ஆனாலும் இந்த சம்பவம் தொடர்பாக சமூக பொறுப்பு வாய்ந்த ஒரு நிறுவனம் எனும் வகையில் டிப்ட் புரொடக்ட்ஸ் கம்பனி வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பாக கவனம் செலுத்தும் போது, பல விடயங்கள் கவலை தருவதாக அமைந்துள்ளன. 
இந்த அறிக்கையில் வெலிவேரிய பிரதேசத்தின் குடிநீர் பிரச்சினை தொடர்பாக குறிப்பிட்ட மறைமுக சக்தியொன்று பின்நின்று இயங்கியதாகவும், தமது உற்பத்தி செயற்பாடுகள் மிகவும் பாதுகாப்பான முறையாக இடம்பெற்று வருவதாகவும், இந்த பிரச்சினை குறித்து, பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பினர், அதிகாரிகளுடன் தமது நிறுவனம் பேச்சுவார்த்தைகளை பேணியிருந்ததாகவும், தமது உற்பத்திகளுக்கு சர்வதேச ரீதியில் காணப்படும் கேள்வி, சர்வதேச ரீதியில் கையுறைகளின் தேவைகளுக்கு தமது நிறுவனம் வழங்கி வரும் பங்களிப்பு குறித்த பல விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த அறிக்கை, குறித்த சம்பவம் இடம்பெற்று இரு தினங்களின் பின்னர் குறித்த நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டிருந்தது. 
 
ஆனாலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு எந்தவிதமான கரிசனையையும் செலுத்தாமல், தனது செயற்பாடுகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தமை பல தரப்புகளின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தமை கவனிக்கத்தக்க விடயமாகும்.
 
இவ்வாறு தான் இயங்கும் சமூகத்தின் செயற்பாடு குறித்து அக்கறை கொள்ளாமல் இருப்பது இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹேலீஸ் குழுமத்தின் கீர்த்தி நாமத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. நடப்பு ஆண்டின் சிறந்த கூட்டாண்மை குடிமகன் எனும் சமூக ரீதியில் சிறந்த செயற்பாடுகளை பின்பற்றுவதற்காக வழங்கப்படும் விருதையும் ஹேலீஸ் குழுமம் பெற்றுள்ள நிலையில், இதுபோன்ற ஒரு பொது அறிக்கை வெளியீடானது பொறுப்பற்ற விதத்தில் அமைந்துள்ளது. 
 
இந்த விடயம் தொடர்பில் நிறுவனம் சரியான ஆலோசனைகளை பெற்றுக் கொள்கிறதா என்பதில் கூட சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது, பொதுவாக எந்தவொரு தனியார் நிறுவனமும் தாம் ஓர் இடரை எதிர்நோக்கும் போது, ஊடக தொடர்பாடல்கள் தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு குறித்த செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களின் சேவைகளை நாடுகின்றன. இந்த நிலையில், குறித்த ஆலோசனை நிறுவனங்களின் வழிகாட்டல்களுக்கு அமையவே தமது ஊடக அறிக்கைகள் மற்றும் தொடர்பாடல்கள் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்கின்றன. 
 
இந்த வெலிவேரிய சம்பவம் தொடர்பாக டிப்ட் புரொடக்ட்ஸ் நிறுவனம், குறித்தவொரு தனியார் ஊடக ஆலோசனை நிறுவனத்தின் ஆலோசனைகளை பெற்றிருந்தமை தொடர்பாக அறிந்துகொள்ள முடிந்தது. இந்த விடயம் தொடர்பாக அவர்களும் முறையான ஆலோசனை வழங்காமை வருத்தமளிக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது. 
 
மேலும், இந்த நிறுவனம் - உயிரிழந்தவர்கள் தொடர்பாக எவ்வித கரிசனையுமில்லாமல் செயலாற்றுவது சர்வதேச ரீதியாக இந்த நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களுக்கான கேள்வியை இல்லாமல் செய்யக்கூடிய நிலையையும் தோற்றுவிக்கலாம். ஏனெனில், இலங்கையில் உள்ள உயர் மட்டத்தரப்பினர்களுக்கு உயிர்களின் பெறுமதி குறைவாக அமைந்திருந்த போதிலும், சர்வதேச ரீதியில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் மனித உயிர்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. 
பால்மா தொடர்பான பிரச்சினை
இது ஒரு தொடர்கதை. சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகள் பாவனைக்கு உகந்ததல்ல எனவும், அவற்றில் நச்சுப் பதார்த்தங்கள் கலந்துள்ளன எனவும் பல்வேறு தரப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்த வண்ணமிருந்தனர். 
 
இவ்வாறானதொரு கருத்து வெளிவரும் சந்தர்ப்பத்தில், குறித்த தாக்குதல்களுக்கு இலக்காகும் தனியார் நிறுவனங்கள், உடனடியாக ஓர் ஊடக அறிக்கையை அல்லது விளம்பரத்தை வெளியிட்டு தமது தயாரிப்புகள் முற்றிலும் பாதுகாப்பானவை எனும் விடயத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. இந்த விடயம் சற்றே ஓய்வடைந்ததும், குறித்த நிறுவனங்களும் தமது தயாரிப்புகளின் தரம் தொடர்பாக மேலும் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.
 
இந்த நிலைதான் கடந்த வாரமும் ஏற்பட்டிருந்தது. நியுசிலாந்தின் பால் உற்பத்தியில் ஈடுபடும் தாய் நிறுவனம் தனது தயாரிப்புகளில் ஒருவிதமான பக்றீரியா கலந்திருப்பதாகவும், இதன் காரணமாக ஆசிய நாடுகள் உள்ளடங்கலாக தனது முன்னணி விற்பனை நாடுகளிலிருந்து தயாரிப்புகளை மீள பெற்றுக்கொள்வது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தது. 
 
நியுசிலாந்தின் தாய் கம்பனி தமது பொருட்களை மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அறிவித்திருந்தமைக்கான காரணம், சீனாவில் சிசுக்கள் மரணத்துடன் குறித்த நிறுவனத்தின் பாலுற்பத்திகளில் காணப்பட்ட ஒருவித பக்றீரியா சேர்மானம் காரணமாக அமைந்திருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மோர் புரதம் (whey protein) என அழைக்கப்படும் ஒருவித புரதச்சத்தில் இந்த பக்றீரியா கண்டறியப்பட்டதாக அந்த சர்வதேச செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்த அறிக்கை கடந்த வாரம் திங்கட்கிழமை வெளியாகியிருந்ததை தொடர்ந்து, சில மாதங்களாக முடங்கி கிடந்த பால் மா தொடர்பான விடயம், இலங்கையில் மீண்டும்  கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக சுகாதார அமைச்சின் வைத்தியர்கள் பால் மா வகைகளை பயன்படுத்துவதிலிருந்து விடுபட்டு, இலங்கையர்கள் பசும் பாலை நுகர பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றவொரு கோரிக்கையையும் கடந்த வாரம் முன்வைத்திருந்தனர். 
 
சுகாதார அமைச்சும் நியுசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளுக்கு தடை விதிப்பதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது. இலங்கையில் தடைசெய்வதற்கான காரணமாக டிசிடி எனும் டய்சைனைட் டயமைட் எனும் நச்சு இரசாயனம் கலந்திருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இதனை தொடர்ந்து, இலங்கையில் அனைத்து பால் மா பாவனையாளர்கள் மத்தியிலும் பிரபல்யம் பெற்ற வர்த்தக நாமமாக திகழும் அங்கர் நாமத்தின் உரித்து நிறுவனமான பொன்டெரா லங்கா நிறுவனம் தொடர்ந்தும் தமது தயாரிப்புகளில் குறித்த நச்சுப்பொருள் எதுவுமில்லை எனும் வகையில் தமது தொடர்பாடல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரங்களும் பிரசுரமாகியிருந்தன.
 
இலங்கையில் செயற்படும் முதல் தர முன்னணி பல்தேசிய நிறுவனங்களில் ஒன்றாக பொன்டெரா திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. பொதுமக்களை எடுத்துக் கொண்டால், பால் மா இல்லாத ஒரு வாழ்க்கையை எண்ணிக் கூட பார்க்க முடியாத நிலையில் பல இலங்கையர்கள் உள்ளனர். 
 
குறித்த நிறுவனம் தமது தயாரிப்புகள் தொடர்பில் ஊடகங்களை கையாண்ட விதமும் ஏளனம் செய்யும் விதத்தில் அமைந்திருந்தது. ஒருபுறம் அரசு, தாம் குறித்த நிறுவனத்தின் (வர்த்தக உற்பத்தி நாமங்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவித்து) தயாரிப்புகளை பாவனைக்கு உதவாது எனக்கூறி தடை செய்கிறோம் என அறிவிக்கும் அதே பட்சம், மறுபுறம் நிறுவனம், தமது தயாரிப்புகள் பாவனைக்கு உகந்தவை. 100 வீதம் பாதுகாப்பானவை என விளம்பரம் செய்திருந்தது. 
 
இதனை கருத்தில் கொண்ட முறையீட்டு நீதிமன்றம், குறித்த நிறுவனத்தின் விளம்பர பிரசார நடவடிக்கைகளுக்கு ஓகஸ்ட் 21ஆம் திகதி வரை தடைவிதித்திருந்தது. இந்த உத்தரவை தொடர்ந்தும், நிறுவனம், தமது தயாரிப்புகள் பாதுகாப்பானவை எனவும், உப்பில் உள்ளதை விட மூன்றில் ஒரு மடங்கு வீதம் குறைவானதாகவே குறித்த இரசாயன பதார்த்தம் உள்ளடங்கியிருப்பதாகவும் அறிவித்திருந்தது. இதுவும் மக்களை தவறான வழியில் திசை திருப்பும் வகையில் அமைந்துள்ளது.
 
குறித்த நிறுவனத்தின் விளம்பர மற்றும் ஊடக அறிவித்தல்களை இரு வெவ்வேறு விளம்பர பிரசார மற்றும் ஊடக ஆலோசனை நிறுவனங்கள் கையாண்டிருந்தமை தொடர்பாக அறிய முடிந்தது.  
 
எனவே இந்த செயற்பாடுகளை குறித்த நிறுவனங்கள் கையாண்ட விதம், கையாண்டு வரும் விதம் மற்றும் இந்த நிறுவனங்களுக்கு பொதுமக்களை சென்றடையும் வகையில் ஊடக ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடு போன்றன, இலங்கையில் ஊடக ஆலோசனை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு ஓர் ஒழுக்கக் கோவை இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X