2021 ஜூன் 24, வியாழக்கிழமை

‘அப்பாவை அனுப்புங்கள்’: நான்கு வயதுக் குழந்தை கதறல்

Gavitha   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார் 

“தமிழ்நாடு - திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் எமது உறவுகளிடம் இரக்கம் காட்டுங்கள்” என, கிளிநொச்சியில் உள்ள அவர்களது உறவினர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர் 

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் பத்துப் பேர், மண்டபம் முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் பெண் ஆகியோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் செவ்வாய்க்கிழமை (27) பத்திரிகையாளர்களை சந்தித்து மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளனர். 

அங்கு ஒரு தாய் கருத்துத்தெரிவிக்கையில், 

தனது மூத்த மகனை இறுதி யுத்தத்தில் பலிகொடுத்துள்ள நிலையில் தற்போது இருக்கின்ற ஒரு மகன் தமிழ்நாட்டுக்குச் சென்றான். அங்கு வைத்து கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர்களை அடித்து துன்புறுத்துகின்றனர். சட்ட ரீதியாக விசா எடுத்து சுற்றுலாவுக்குச் சென்ற மகனை வெளிநாடு செல்ல சட்டவிரோதமாக வந்துள்ளதாக கூறி அதற்கு ஒப்பம் இடுமாறு தொடர்ந்தும் துன்புறுத்தி வருகின்றனர். 

யுத்தக்காலத்தில் மிகமோசமாக மன உளைச்சலுக்கும், பாதிப்புக்களுக்கும் முகம் கொடுத்த எங்களுக்கு எங்களது பிள்ளைகள் உண்ணாவிரதம் இருந்து வருவதான செய்தி மேலும் எங்களை மனதளவில் பாதித்துள்ளது. எனவே, அவர்கள் சிலவேளை ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதனை மன்னித்து தயவு செய்து விடுதலை செய்யுங்கள் என்றார். 

திருமதி உமாகாந்தன் என்பவர், 

தான் இரண்டு குழந்தைகளுடன் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றேன். எனது கணவர் கைது செய்யப்படும் இரண்டாவது குழந்தைக்கு நான் ஏழுமாத கர்ப்பிணி. எனது குழந்தைக்கு அப்பாவின் முகம் தற்போது தெரியாது. மூத்த மகளுக்கு நான்கு வயது. தினமும் அப்பா எங்கே என்று கேட்டுக்கொண்டே இருக்கின்றாள். எனது தயவு செய்து எனது பிள்ளைகளுக்காக எனது கணவரை விடுதலை செய்யுங்கள் என அழுதழுது கேட்டுக்கொண்டார். 

இதேவேளை தனது அப்பாவை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு நான்கு வயது பெண் குழந்தை அழுதவாறு கேட்டுக்கொண்டமை மனதை நெகிழ வைப்பதாக இருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .