2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் 48 ஆயிரம் ஏக்கரில் காலபோக நெற்செய்கைக்கு அனுமதி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)
 
கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை 48 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில்  காலபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன், அவர்களுக்கான மானிய உதவிகளும் வழங்கப்படவுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மீள்குடியேற்றம் மற்றும் விவசாய, உட்கட்டுமானப் பணிகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த மீளாய்வுக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.

இதில் மின்சக்தி மற்றும் எரிபொருள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் திவாரத்ன, ஜனாதிபதி துரித செயலணிக் குழுவின் செயலாளர்,  கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னரான நிலைமைகள் ஆராயப்பட்டு  எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த மீளாய்வுக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:

பெரும்போக நெற்செய்கையை 48 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்வதற்கு அனுமதி அளிப்பதோடு இந்தப் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விதைநெல், உரவகை என்பவற்றை மானிய அடிப்படையில் வழங்குதல், செப்டெம்பர் மாத இறுதிக்குள் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பூர்த்தி செய்து அந்த இடங்களில் எஞ்சியுள்ள மக்களை மீள்குடியேற்றுதல்,  ஏ - 9 வீதியின் இருமருங்கிலும் சேதமான நிலையில் காணப்படும் பொதுக் கட்டடங்களைத் துரிதகதியில் புனரமைத்தல், மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான உதவிகள் யாவும் சரியான வகையில் சென்றடைவதை உறுதிப்படுத்துதல், கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களுக்காக இந்திய அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்படவுள்ள 12,500 வீடுகளை அமைப்பதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குதல் என்பனவே நேற்று நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான தீர்மானங்களாகும் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.

இதேவேளை, இதுவரையும் 33 ஆயிரத்து 652 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 6 ஆயிரத்தி 222 பேர் கிளிநொச்சியில் மீள்குடியமர்ந்துள்ளனர் என்றும் இவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை தொடர்ந்தும் உரிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இக்கூட்டத்தில் தெரிவித்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .