2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆனந்தசங்கரிக்கு அகவை 83

George   / 2016 ஜூன் 15 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் மூத்த தமிழ் அரசியல்வாதியுமான வீ.ஆனந்தசங்கரி, தனது 83ஆவது பிறந்த தினத்தை இன்று புதன்கிழமை(15) கொண்டாடுகின்றார்.

இது தொடர்பில் அக்கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் இரா.சங்கையாவால் ஊடக அறிக்கையொன்று இன்று விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, '83ஆவது வயதில் அவர் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. 1959இல் கொழும்பில் ஆரம்பித்த அவரது அரசியல் வாழ்க்கை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

கொழும்பில் அரசியல் பணியுடன் ஒரு சிறந்த ஆசிரியராகவும் கடமையாற்றிய பின்  1962இல் கிளிநொச்சி தொகுதியில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக அன்று விளங்கிய பூநகரி பகுதியில் ஆசிரியராக கடமையாற்ற வந்தார். 

அந்த நேரத்தில் கிளிநொச்சி தொகுதியில் உள்ள மக்களின் கஸ்டங்களை உணரத் தொடங்கினார். அன்று யாழ். மாவட்டத்தோடு கிளிநொச்சி தொகுதி இணைந்திருந்ததால் எல்லா வகையிலும் பின்தங்கிய பகுதியான கிளிநொச்சி தொகுதியின் கல்வி நிலை மிகவும் மோசமாக இருந்தது. எதுவித அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிளிநொச்சிப் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்விபயிலும் மாணவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்யம் வாய்ந்த பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுடன் போட்டிபோட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலேயே இருந்தனர். 

அதுமட்டுமல்ல கிளிநொச்சித் தொகுதியில் ஏழை விவசாயிகள் பலர் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தனர். கிளிநொச்சித் தொகுதியில் அந்த நேரத்தில் பெரும்பகுதியான நிலப்பரப்புக்கள் தனவந்தர்களுக்கும்  நிலச்சுவாந்தர்களுக்கும் சொந்தமாக இருந்தன. இரணைமடு குளத்து நீரை சிறு கமக்மாரர்கள் பெறுவதில் சில தடைகள் இருந்தன. அந்த தடைகள் எல்லாவற்றையும் தனது முயற்சியால் சிறு விவசாயிகளின் துணைகொண்டு தகர்த்;தெறிந்து அவர்களும் இரணைமடு குளத்து நீரை பயன்படுத்துவதற்கு வழிவகுத்தார். 

அந்த நேரத்தில் இலங்கையின் உழைக்கும் வர்க்கத்திற்காக குரல்கொடுக்க லங்கா சமசமாஜ கட்சியே முன்னின்று செயற்பட்டது. அக் கட்சியில் தான் ஏற்கனவே இணைந்திருந்தபடியால் அக்கட்சியின் செயற்பாடுகளை கிளிநொச்சியில் முன்னின்று செயற்படுத்தி உழைக்கும் வர்க்கத்திற்கு உறுதுணையாக இருந்தார். 

அதனால் அங்கு நடந்த கிராமசபைத் தேர்தலில் போட்டியிட்டு கரைச்சி கிராமசபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். உழைக்கும் வர்க்கத்தின் துணையுடன் கிளிநொச்சி பட்டிணசபை தலைவராகவும் தெரிவாகி மக்களின் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் சமசமாஜ கட்சி தனது கொள்கையில் இருந்து மாறுபட்டு செயற்பட எத்தணித்தபோது அதிலிருந்து பிரிந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு  1970ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசு கட்சியின் கோட்டையாக இருந்த கிளிநொச்சித் தொகுதியில் போட்டியிட்டு  வெற்றிவாகை சூடினார். ஏழை எளிய மக்களின் வாக்குகளும், அவர்களின் செயற்பாடுகளுமே அவரை இந்த நிலைக்கு உயர்த்தியது.                             

1972ம் ஆண்டு தந்தை செல்வா, சட்டமாமேதை ஜீ.ஜீ.பொன்னம்பலம், ஆகியோர் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கியபோது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் பணிப்பின் பேரில் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் எனைய தமிழ் காங்கிரஸ் கட்சி பிமுகர்களுடன்  தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து செயற்பட தொடங்கினார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் 1977ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் கிளிநொச்சித் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாகவும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். இந்த காலகட்டத்தில் கிளிநொச்சி பிரதேச மாணவர்கள், கல்வியில் முன்னேற்றம் காண வேண்டுமானால் கிளிநொச்சித் தொகுதி தனி மாவட்டமானால் மட்டுமே அவர்களால் பல்கலைக்கழகம் செல்ல முடியும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள்ளே உட்கட்சி போராட்டத்தை நடத்தினார். 

ஏனைய தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்த நிலையிலும் கிளிநொச்சித் தொகுதியை தனது விடாமுயற்சியினால் தனிமாவட்டமாக்கினார். அதன் விளைவுதான் இன்று பல வைத்தியர்களும், பொறியியலாளர்களும், சட்டத்தரணிகளும், பட்டதாரிகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் உருவாகியுள்ளனர். இது ஆனந்தசங்கரி அவர்களுக்கு தனி முத்திரை பதித்த செயலாகும். 

அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீவிரம் போதாது எனக்கூறி இளைஞர்களின் ஆயுதப் போராட்டம்  இடம்பெற்றது. அதன் விளைவுகளால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் பலர் அடுத்தடுத்து கொல்லப்பட்டார்கள். பலர் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளானார்கள். இருந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி தன்னுடைய முயற்சியில் சிறிதும் தளராது முன்னேறிக்கொண்டிருந்தது.  

2001ஆம் ஆண்டளவில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் தமிழத்; தேசியக் கூட்டமைப்பு உருவானது. 2002ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. அதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் வீ. ஆனந்தசங்கரி, யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளில் முதலாவதாக அதிகப்படியான வாக்குகள் பெற்று  மீண்டும் நாடாளுமனறம் சென்றார். அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் பலம்வாய்ந்த ஒரு சக்தியாக செயற்பட்டுக்கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்து செயற்பட்டால்தான் அவர்களின் போராட்டம் மேலும் வலுப்பெறும் என்ற காரணத்தினால், அவர்களை ஏகபிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்டு அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டால் எமது ஜனநாயகக் குரலும், புலிகளின் ஆயுதக் குரலும் ஒன்றாக ஒலிக்கும், இது சர்வதேச சமூகத்துக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்திவிடும். எனவே நாம் தனித்து நின்று புலிகளின் குரலுக்கு உந்து சக்தியாக செயற்படுவோம் என்ற யதார்த்தத்தை ஆனந்தசங்கரி எடுத்துக் கூறினார். 

அதை விரும்பாத சிலர் இவர் புலிகளுக்கு எதிரானவர் என்ற முத்திரை குத்த ஆரம்பித்தனர். இதனால் 2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ்த்; தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை நீக்கிவிட்டு புதிதாக ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டது. 

தனது உயிருக்கு ஏற்படுத்தப்பட்ட ஆபத்தையும் பொருட்படுத்தாது உயிரை துச்சமென நினைத்து, அன்றிலிருந்து இன்றுவரை யதார்த்தத்தை எடுத்துக்கூறி வருகின்றார். யதார்த்தவாதி வெகுஜன விரோதி என்பதற்கிணங்க நிலைமை போய்க்கொண்டிருக்கிறது. 

இறுதிகட்ட யுத்தத்தின் போது யுத்தத்தின் விளைவு எப்படி இருக்கும் என்ற யதார்த்தத்தினை  விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு ஒரு யுத்தத்தை நடத்தினால் அதன் முடிவு நாட்டுக்கும், ஜனாதிபதிக்கும் எத்தகைய அபகீர்த்தியை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதிக்கும் பல கடிதங்களை எழுதினார். இரண்டு தரப்பினரும் இவரின் அறிவுரைகளை கேட்டிருந்தால் புலிகளும் அவர்களுடன் சேர்ந்து மக்களும் அழிந்திருக்கமாட்டார்கள்.  இன்றும் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக வலம் வந்து கொண்டிருப்பார், சர்வதேசத்தின் முன்னால் நமது நாட்டுக்கு தலைகுனிவும் ஏற்பட்டிருக்காது. எமது மக்களும் இவ்வளவு இன்னல்களையும் அவலங்களையும் சந்தித்திருக்கமாட்டார்கள். 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானுங் கெடும்' என்பது நிரூபிக்கப்பட்டது. ஒரு சமூகத்திடம் பொய்களைக்கூறி வெற்றிபெறுவதைக் காட்டிலும், உண்மையைக் கூறி தோல்வி அடைவது மேலானது என்று ஒரு அறிஞன் கூறியதற்கிணங்க செயற்படும் ஒரு தலைவராக இருக்கின்றார்.

இப்போதும் கூட இந்த வயதிலும், தன்னுடைய அயராத உழைப்பினால் எமது மக்களுக்கு ஒரு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக பல தரப்பினருடனும் பேசிக்கொண்டிருக்கின்றார். இவரின் அரசியல் அனுபவத்தை உணர்ந்து, ஏனையவர்களும் அவருடன் இணைந்து, தேர்தலுக்காக அல்ல எமது மக்களின் எதிர்கால நல்வாழ்விற்காக, ஒன்றுபட்டு செயற்பட்டால் நமது மக்களுக்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலையான தீர்வு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

அயராது உழைக்கும் இவரது அரசியல் பணி தொடர, இன்னும் பல்லாண்டு வாழ்ந்து எம் மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென்று வாழ்த்துவதோடு, தன்னுடைய காலத்திலேயே தமிழ் மக்களுக்கு ஒரு நிலையான, நிம்மதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்' என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .