2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

‘ஆயுதங்கள் மீட்கப்படுவது யுத்தத்துக்கான ஆரம்பமல்ல’

Editorial   / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மற்றும் இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளிலிருந்து, இரண்டொரு பழைய ஆயுதங்களும் சிற்சில எலும்புக் கூடுகளும் மீட்கப்படுவதானது, வடக்கில் மீண்டுமொரு யுத்தத்துக்கான ஆரம்பமாக அமையாதெனத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, அவ்வாறு மீண்டுமொரு யுத்தத்துக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படாதெனவும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு விளையாட்டு மைதானத்தில், அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கடும் மழையின் பின்னர் பூமி ஈரமாகியுள்ளதைப் போன்று, வடக்கில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர், தற்போது இரண்டோர் ஆயுதங்கள் மீட்கப்பட்டால், அது மீண்டும் யுத்தத்துக்கான ஆரம்பமாக அமையாதெனத் தெரிவித்தார்.

வடக்கில் இன்று, இராணுவத்தினர் அமைதியான முறையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், வடக்கிலுள்ள இரத்த வங்கிகளில், இராணுவம் உள்ளிட்ட முப்படையினரினதும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளதும் இரத்தமே நிரம்பி வழிவதாகவும் சுட்டிக்காட்டினார்.

வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் கூறுவது போல், வடக்கு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினத்தவர்களுக்கு, பெரும்பான்மையினத்தவர்கள் இரத்தம் வழங்கினால், அந்த இரத்தத்தோடு, சிறுபான்மையினத்தவர்களின் இரத்தம் கலக்கப்படாதாவெனக் கேள்வியெழுப்பியதுடன், அப்படிப் பார்க்கும் போது, ஆதிகாலத்திலிருந்தே, எமது இரத்தத்தில் கலப்பு உள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், வடக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு, சிங்கள பொலிஸாரே பாதுகாப்பு வழங்குவதாகவும் நாடாளுமன்றமாக இருக்கட்டும் மாகாண சபைகளாக இருக்கட்டும், தமிழ் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகளாகக் கடமையாற்றுவது சிங்கள பொலிஸ் அதிகாரிகளே ஆவரெனவும் தெரிவித்த அவர், எந்தவொரு தமிழ் அரசியல்வாதியிடமும் தமிழ் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவில்லையெனவும் குறிப்பிட்டார்.

இன்று, வடக்கிலுள்ள இராணுவத்தினரின் கைகளில் துப்பாக்கிகள் இல்லையெனத் தெரிவித் அவர், மாறாக சமாதான ஒலிக் கிளைகளே உள்ளனவெனவும் தெரிவித்தார்.

அவர்கள் தான் இன்று வடக்கில், வைத்தியசாலைகள், பாடசாலைகளை அமைக்கின்றார்களெனவும் கோவில் பூஜை விடயங்களில் உதவி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகளைப் பார்க்கும் போது, வடக்கு மக்களால் இன்று இராணுவத்தினர் நிராகரிக்கப்படவில்லையென்பது தெளிவாகிறதென, அவர் மேலும் தெரிவித்தார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X