2025 மே 22, வியாழக்கிழமை

இரணைதீவுக்கான இறங்குதுறை புனரமைப்பு

Editorial   / 2019 மே 24 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பூநகரி இரணைதீவுக்கான இறங்குதுறை புனரமைப்பு மற்றும் குடிநீர் விநியோகத்திட்டங்கள் என்பன யுஎன்டிபி நிறுவனத்தின் நிதியுதவியுடன், சுமார் இரண்டு கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இரணைதீவு கடற்றொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இரணைதீவில் கடந்த 1992ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் கடந்த ஆண்டு மே மாதம் தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பிரதேசத்தில் தேவைகளை நிறைவு செய்து தருமாறு இப்பகுதி கடற்றொழிலாளர்கள் முன்வைத்துவந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தின் உடனடித்தேவைகளான குடிநீர் வசதி மற்றும் இறங்குதுறை என்பன அமைக்க வேண்டிய நிலை காணப்பட்டது.

இந்நிலையில், இரணைதீவுக்கான குடிநீர் விநியோகத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் கிணறு புனரமைக்கப்பட்டு அதற்கான நீர்த்தாங்கி அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகக் குழாய்கள் என்பன பொருத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை, இறங்குதுறை அமைப்பதற்கான வேலைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இரண்டு வேலைகளும் சுமார் இரண்டு கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மீனவ சங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுமானங்களை மேற்கொள்வதற்கான கட்டடப் பொருள்களை இரணைமாதா நகரிலிருந்து படகு மூலமே கொண்டு செல்ல வேண்டியிருப்பதாகவும் இதற்கான செலவு மிக அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், மக்கள் மீள்குடியேறி ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டு வசதி மலசலகூட வசதி என்பன இதுவரை ஏற்படுத்தித்தரப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X